31 August, 2006

இலங்கைக்கு ஜக்கிய நாடுகள் சபை கடும் எச்சரிக்கை.

மூதூரில் அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்களை சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்துள்ளதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளதையடுத்து நிவாரணப் பணிகளை உடனடியாக இடைநிறுத்தப் போவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரான்ஸ் அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலைக்கு சிறிலங்கா இராணுவமே காரணம் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு நேற்று புதன்கிழமை குற்றம்சாட்டியது. இதனையடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கண்டனத்தையும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர். இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் அரச தலைவர் கிளிண்டனின் செயலாளரும் ஆழிப்பேரலைக்கான ஐ.நா. சிறப்பு பிரதிநிதியுமான எரிக் சுவர்ட்ஸ் கொழும்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் நேற்று புதன்கிழமையன்று கூறியதாவது: ஆழிப்பேரலை நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விதிமுறைகளை மீறிய செயல் இது. இந்தப் படுகொலையை சகித்துக் கொள்ள முடியாது. தற்போது மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் பாரிய ஆபத்துகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். நிவாரணப் பணியாளர்கள் சுதந்திரமாக இயங்கவும் அதே நேரத்தில் அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பிரச்சனைக்குரிய பகுதிகளில் நிவாரணப் பணியாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று நூறுமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டும் அது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றார் அவர். ஐ.நா. அவசரகால நிவாரணப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜேன் ஈகெலண்ட் கூறியதாவது: மூதூர் அரச சார்பற்ற பணியாளர்களின் படுகொலைக்கு காரணமானவர்களை அரசாங்கம் தண்டிக்காதவரை எமது பணிகளை இடை நிறுத்த நேரிடும். பாரிய மனித உரிமை மீறலான இச்சம்பவத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரது அறிக்கையானது அச்சத்தை அதிகரித்துள்ளது. பிரச்சனைக்குரிய பகுதிகளில் மனிதாபிமான பணிகளை மேற்கொள்வோர் நிலை நிச்சயமற்றதாக உள்ளது என்றார். நன்றி>புதினம்.

3 comments:

Anonymous said...

சிங்களவங்களுக்கு வச்சாங்கய்யா ஆப்பு.

Anonymous said...

//சிங்களவங்களுக்கு வச்சாங்கய்யா ஆப்பு.//

ஆப்பு இல்லா ஆஆஆஆஆஆஆஆப்பு...

Anonymous said...

கூடிய சீக்கிரம் ராஜபக்ச அண்ணா ஹேக்-ல இருக்கிற சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு போனாலும் ஆச்சரியமில்ல.

தமிழர்கள் ஒற்றுமையா இந்த போராட்டத்தை நடத்தினா ராஜபக்ச அண்ணாத்தேக்கு கழிதான் அப்புறம்! ஈழம் கிடைக்க காரணமான கனமான சூழலை உருவாக்கிய அண்ணாத்தேக்கு நன்றினு நாங்க போஸ்டர் ஒட்டலாம். :)