22 August, 2006
மறைகழன்று புளுகுகிறான் சரத் பொன்சேகா.
தமிழர்களைப் பாதுகாப்பதற்காகவே சிறிலங்கா படைகள் வடக்கு-கிழக்கில் நிலைகொண்டுள்ளன. கடந்த இரண்டு தசாப்த போரில், விடுதலைப் புலிகளே தமிழ்மக்களைக் கொன்றுள்ளனர், படையினரல் அல்ல என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கொழும்பு நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் இப்போது மீண்டும் பழைய உடல்நிலையில் மிக சுறுசுறுப்பாக உள்ளேன். ஒரு விடயம் மிக முக்கியமானது, அதாவது சிறிலங்காப் படைகளுக்கு தமிழ் மக்கள் மீது எந்தக் கோபமோ வெறுப்போ கிடையாது. அவர்களைப் பாதுகாப்பதுதான் படைகளின் பிரதான செயற்பாடாக உள்ளது.
விடுதலைப் புலிகள் மிகவும் பலவீனமடைந்துள்ளனர். அவர்களை முற்றாக அழிப்பதற்கு இன்னும் சொற்ப காலமே தேவை. மாவிலாறு தாக்குதலை விடுதலைப் புலிகள் தொடுத்த நாளிலிருந்து இன்றுவரை, அவர்களது ஆயிரத்திற்கும் அதிகமான போராளிகளை நமது படைகள் அழித்துவிட்டன. இப்போது புலிகளின் படையில் 50 வீதத்திற்கும் அதிகமானவர்கள், சிறுவர்களே.
புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளின் முகாம் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டது. முல்லைத்தீவு காட்டுக்குள் இருந்த முகாமொன்றில், படையில் சேரும் சிறுவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும்போதே நாம் தாக்குதல் நடத்தினோம். அதில் 300-க்கும் அதிகமான சிறு வயதுப் போராளிகள் கொல்லப்பட்டனர். ஆனால், அங்கிருந்து ஏராளமான போராளிகளின் உடல்களை புலிகள் வேகமாக அகற்றிவிட்டனர்.
மனித நடமாட்டமே இல்லாத அடர்ந்த காட்டுப்பகுதியில் பாடசாலை சிறுமிகள் ஏன் தங்கியிருக்க வேண்டும்? அவர்களிடம் துப்பாக்கி ஏன் இருக்க வேண்டும்? ஆயுதக்கிடங்கு அங்கே எப்படி வந்தது? அதனால், இந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் பயிற்சியே இடம்பெற்றது. சிறிலங்காப் படைகளின் தாக்குதலை யாரும் குற்றம் சொல்ல முடியாது.
தெல்லிப்பழையில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி சிவமகாராஜா சுடப்பட்டார் என்ற தகவல் உண்மைக்குப் புறம்பானது. எனக்குக் கிடைத்த தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை 7:30 மணியளவில், அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளே அவரைச் சுட்டார்கள்.
தற்போது இராணுவ தரப்பில் கிடைத்துள்ள உயர்மட்ட தகவல்களின்படி, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பல உறுப்பினர்கள் விலகி, இராணுவ முகாம்களிலும் சோதனைச் சாவடிகளிலும் சரணடைகிறார்கள் என்றார் சரத் பொன்சேகா.
ஓகஸ்ட் 11 ஆம் திகதி தாக்குதல்கள் ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை, படைத்தரப்பில் 131 படையினர் கொல்லப்பட்டதுடன், 1,75 பேர் காயமடைந்துள்ளனர் என்று பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க உறுதிப்படுத்தினார். இராணுவத்தினர், தங்களது நிலைகளை தொடர்ந்தும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவ்வப்போது விடுதலைப் புலிகள் ஆட்டிலெறி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை, தள்ளாடியிலுள்ள விடுதலைப் புலிகளின் ஆயுதக் களஞ்சியமொன்றை தங்களது விமானக் குண்டுவீச்சில் அழித்துள்ளதாக, விமானப்படையின் பேச்சாளர் குறூப் கப்டன் அஜந்த சில்வா தெரிவித்தார்.
எமது படைகள் வலிந்த தாக்குதலில் ஈடுபடவில்லை. தற்காப்பு நடவடிக்கைகளையும் பதில் தாக்குதல்களையுமே மேற்கொண்டு வருகிறோம் என்று மேலும் தெரிவித்தார்.
நன்றி>புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment