29 August, 2006

எம்.ஜி.ஆர். சிலைகளை சிதைத்த சிங்கள இராணுவமே!

ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கு அடித்தளமாகவும் அரணுமாக இருந்த மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். சிலைகளை சேதப்படுத்திய சிங்கள இராணுவம், தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். வைகோ இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: யாழ். குருநகர் மற்றும் வல்வெட்டித்துறையிலும் ஈழத்தமிழர்கள் நிறுவியிருந்த எம்.ஜி.ஆர். சிலைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியும் சிலைகளுக்கு தார் பூசியும் சிங்கள இராணுவத்தினர் வெறியாட்டம் போட்டுள்ளனர். சிங்கள இராணுவம் ஊரடங்குச் சட்டத்தை போட்டு பொது மக்களின் நடமாட்டத்தை முடக்கிவிட்டு எம்.ஜி.ஆர். சிலையில் தாரைக்கொட்டி தேசப்படுத்தியுள்ளார்கள். தமிழீழ மக்களின் போராட்டத்திற்கு அடிப்படையும் அரணும் அமைத்துக்கொடுத்ததில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பெரும்பங்கு உண்டு. எனவே தமிழீழ மக்கள் எம்.ஜி.ஆர். அவர்களை நெஞ்சில் வைத்து போற்றுகின்றனர். இந்தச்செயல் ஈழத் தமிழர்கள் மனதையும் தாய்த்தமிழகம் உள்ளிட்ட உலகெங்கும் வாழும் தமிழர்கள் நெஞ்சத்தையும் காயப்படுத்தி கொந்தளிக்கச் செய்துள்ளது. இந்த அராஜகத்தில் ஈடுபட்ட சிங்கள இராணுவத்துக்கும், இராணுவத்தை ஏவி இயக்கி வரும் சிங்கள அரசுக்கும் கண்டனம் தெரிவிப்பதோடு தமிழர் தாயகத்திலிருந்து சிங்கள இராணுவம் வெளியேறுவதே பிரச்சினைகளுக்கு தீர்வாகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று வைகோ அந்த அறிக்கையில் கூறியுள்ளார். நன்றி>புதினம்.

0 comments: