28 August, 2006

ஏழைமக்களின் யுத்தம் பயங்கரவாதமா?- "ரொறன்ரோ சண்":

கனேடிய இஸ்ரேலியர்கள்- சீக்கியர்கள்- ஐரிஸ் நாட்டவர் செய்ததையேதான் தமிழர்களும் செய்கிறார்கள்: "ரொறன்ரோ சண்": கனடாவில் உள்ள இஸ்ரேலியர்கள்-சீக்கியர்கள் மற்றும் ஐரிஸ் நாட்டவர்கள் தங்களது நாடுகளின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆற்றிய பங்களிப்பைத்தான் கனேடியத் தமிழர்களும் செய்கிறார்கள் என்று கனடாவிலிருந்து வெளியாகும் "ரொறன்ரோ சண்" என்ற ஏடு சுட்டிக்காட்டியுள்ளது. அந்த ஏட்டில் எறிக் மார்க்கோலிஸ் எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்: பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் ஆறு கனேடியத் தமிழர்கள் இந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளமையானது எனக்கு சேர் பீற்றர் உஸ்டினோவின் அறிவார்ந்த் வரிகளை நினைவூட்டியது. அந்த வரிகள்: "ஏழை மக்களின் யுத்தம் பயங்கரவாதம். பணக்காரர்களின் பயங்கரவாதம் யுத்தம்" அமெரிக்க அரச தலைவர் புஸ்சின் தத்துவம் மற்றும் கொள்கைகளை பின்பற்றி கனடாவின் ஹார்ப்பர் அரசாங்கமும் அண்மையில் இலங்கை தமிழ்ப் புலிகள் கெரில்லாக்களை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது. 1997 ஆம் ஆண்டு அமெரிக்கா பட்டியலில் இணைத்தது. இலங்கையில் 1983 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டது. பல தசாப்தங்களாக பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களும் சிறுபான்மை இந்து தமிழர்களுக்கும் இடையேயான முறுகல் வளர்ந்து வந்தது. சிங்கள அரசாங்கத்துக்கு எதிராக தனித் தனிழ்நாடு கோரி தமிழ்ப் புலிகள் கெரில்லாக்கள் கொடுமையான இரத்தம் தோய்ந்த போரில் ஈடுபட்டனர். 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர் உயிரிழந்தனர். வெளிநாட்டு அனுசரணை இருந்தபோதும் யுத்தம் தொடர்கிறது. இலங்கையின் சிங்களவர் கட்டுப்பாட்டில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை உள்ளது. விடுதலைப் புலிகளிடம் குறைந்தபட்ச ஆயுதங்களே உள்ளன. கனடாவில் உள்ள 2 இலட்சத்து 50 ஆயிரம் தமிழர்களின் பணத்தில் பெருந்தொகையான ஆயுதங்கள் வாங்கப்பட்டன. - கனடாவில் உள்ள ஐரிஸ் இன மக்கள் இதனைத்தான் அயர்ந்தால்ந்து விடுதலை இராணுவத்துக்குச் செய்தனர - கனடாவில் உள்ள யூத இன மக்கள், இங்கிலாந்திடமிருந்து இஸ்ரேலிய விடுதலைக்கான போருக்காக ஆயுதங்களை வாங்க நிதி சேகரித்தனர். - பஞ்சாபில் சீக்கிய தனிநாடு கோரியவர்களுக்கு கனேடிய சீக்கியர்கள் நிதி உதவி அளித்தனர். புலிகள் துணிச்சல் மிக்கவர்கள்-உயர்வானவர்கள்- அவர்கள் தெற்காசியாவின் ஹிஸ்புல்லாக்கள். அரசாங்கத்துக்கு எதிராக தங்களது உடல்களையே மனித வெடிகுண்டுகளாக்கியவர்கள். அதன் பின்னர் 1980-களில் இந்தியா உள்நுழைந்து தன்னோடு இணைக்க முயற்சித்தது. 1991 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவை ஒரு பெண் புலி தன்னை வெடிக்கச் செய்து அழித்தார். விடுதலைப் புலிகள் கொடூரமாக அதிகமான கொலைகளைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் வெறிபிடித்த, மிகவும் ஆபத்தான ஒரு சர்வாதிகாரமான அமைப்பினர். ஆனால் அவர்கள் அமெரிக்காவும் தற்போது கனடாவும் கூறுவது போல் "பயங்கரவாதிகள்" அல்ல. "அரசியல் காரணங்களுக்காக பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது" என்பதுதான் பயங்கரவாதமாக பொதுவில் வரையறுக்கப்பட்டுள்ளது. விமானங்கள், தொடரூந்துகள், பாடசாலைகளைத் தகர்க்கும் பைத்தியகார நாய்கள் பயங்கரவாதிகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த வரையறையின் கீழ் டிரெஸ்டென், ஹம்பர்க், டோக்கியோ, ஒசாகா, நாகசாகி மற்றும் ஹிரோசிமாவில் பெருந்தொகையான மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டதை என்ன என்று அழைப்பது? அல்லத - ரஸ்யாவினால் செச்சினியாவில் ஒரு தசாப்த காலத்துக்கு முன்பாக 1 இலட்சம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். - 1982 ஆம் ஆண்டு பெய்ரூட் மீதான் இஸ்ரேலின் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலில் 18 ஆயிரம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். - 1991 ஆம் ஆண்டு ஈராக் மீதான அமெரிக்காவின் யுத்தத்தில் தொற்றுநோயை உருவாக்கி ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டனர். இவற்றை அந்த வரையறையின் கீழ் என்னவென்று அழைப்பது? - அமெரிக்கா, கனேடிய மற்றும் நேட்டோ படைகளால் ஆப்கான் கிராமங்கள் மீது குண்டு வீசப்பட்டது அது பற்றி பாரபட்சமின்றி என்ன சொல்வது? அல்லது அண்மையில் ஒரு இலட்சம் இஸ்ரேல் மற்றும் லெபனான் மக்கள் கொல்லப்பட்டது சர்வதேச சமூகத்தால் போர்க் குற்றம் இல்லை என்று கூறப்பட்டதே அதை என்ன என்று சொல்வது? மற்றவர்களை பயங்கரவாதத்தின் கீழ் குற்றம் சொல்கிறவர்கள் அடிக்கடி தாங்களே அதை செய்கின்றனர். தமிழ்ப் புலிகள் இலங்கையின் மூன்றில் பகுதியை நிர்வகித்து வருகின்றனர். அவர்களை "பயங்கரவாதிகள்" என்று அழைப்பது அர்த்தமற்றது- தவறானது. லெபனானில் ஊழலற்ற நிர்வாகம் நடத்தும் ஹிஸ்புல்லாக்களை "பயங்கரவாத காடையர்கள்" என்று அழைப்பது போல் தவறானதாகிவிடும். "பயங்கரவாதம்" என்ற சொற்றொடரானது அரசியல் எதிரிகளைப் பழிவாங்க கையாளப்படும் ஒரு அரசியல் ஆயுதம். முஸ்லிம் உலகத்தை கனடா அண்மையில் எதிரியாக ஆக்கிக் கொண்டது. இப்போது அந்நாட்டின் சொந்த மக்கள் மீதும் வர்த்தக நிலைகள் மீதும் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்கிறது. தமிழ்ப் புலிகளை சிலந்தி வலைக்குள் தள்ளிவிடுவதற்கு இது நேரமல்ல. குறிப்பாக கனடாவுக்கோ அமெரிக்காவுக்கோ எதிராக புலிகள் போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. கடந்த கால கனேடிய அரசுகள் செய்யவில்லை. பிரச்சனையும் எழவில்லை. பயங்கரவாதம் என்பது ஒரு உத்தி, அது ஒரு சிந்தனை அல்ல. பல தசாப்தகால ஒடுக்குமுறைகளுக்குப் பின்னர் தமிழ்ப் புலிகள் விடுதலைக்காகப் போராடுகிறார்கள். அனைத்து மக்களும் ஒடுக்குமுறைகளை சகிக்காமல் ஆயுதப் போராட்டம் நடத்தியதை நாம் மேற்கத்தியர்கள் மறந்துவிட்டோம். தனது சொந்த மக்களுக்கு உலகின் இரண்டாம் நிலையிலான சுகாதார வசதிகளை செய்து கொடுக்க முடியாத நிலையில் மற்றொரு அந்நிய நாட்டு யுத்தத்தில் மூக்கை நுழைத்துக் கொண்டு புதிய பாதுகாப்பு பிரச்சனைகளை கனேடியர்களுக்கு உருவாக்க வேண்டும்? என்று அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நன்றி>புதினம்.

0 comments: