04 August, 2006
மூதூர் எறிகணை வீச்சு: மகிந்தவுடன் மோதிய ஹக்கீம்.
மூதூரில் மக்கள் இடம்பெயர்ந்திருக்கும் இடங்களில் சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணை வீச்சுத் தாக்குதல் நடத்துகின்றமை தொடர்பாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் அனைத்துக் கட்சி மாநாட்டில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
சிறிலங்கா அரச தலைவர் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடந்த மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும் கலந்து கொண்டன.
கட்சிகளின் ஒவ்வொரு பிரதிநிதிகளும் மாநாட்டில் மூதூர் நிலைமை தொடர்பாக கருத்து வெளியிட்டனர்.
இங்கு கருத்து தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினரான ரவூப் ஹக்கீம்,
அரசாங்கம் மூதூர் மக்கள் விடயத்தில் மனிதாபிமானத்துடன் செயற்படவில்லை. நிவாரணம் வழங்குவதற்காக விடுதலைப் புலிகளின் கிளிநொச்சி தலைமையகம் அனுமதியளித்துள்ளது. ஆனால் இராணுவம் தடுத்துள்ளது எனக் கூறினார்.
அதற்குப் பதிலளித்த மகிந்த,
இராணுவத்தினர் மக்கள் மீது எறிகணை வீச்சு தாக்குதல் எதனையும் நடத்தவில்லை. நிவராணம் வழங்குவதற்காக அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
விடுதலைப் புலிகள் அனுமதி வழங்க வேண்டிய அவசியம் இல்லை. சகல பகுதிகளுக்கும் அரசாங்கமே பொறுப்பு. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி என ஒன்று இல்லை என்று குறிப்பிட்டார்.
மீண்டும் கருத்துக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினரான ரவூப் ஹக்கீம்,
இராணுவத்தினரே எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்துவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். நேரடியாகப் பாதிக்கப்படுகின்ற மக்கள் சொல்வதைத்தான் நான் கூறுகின்றேன் என்றார்.
மீண்டும் பதிலளித்த மகிந்த,
களத்தில் போராடுகின்ற இராணுவத்தினர் சொல்வதைத்தான் நானும் உங்களுக்கு சொல்கின்றேன் என்று கூறி இராணுவம் ஒருபோதும் மக்களைத் தாக்காது என எடுத்துக் கூறியுள்ளார்.
அத்துடன் மூதூர் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மனோ கணேசன் கருத்து
அதனையடுத்து கருத்து வெளியிட்ட மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்,
வடக்கு-கிழக்கு ஆளுநராக முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் உங்களினால் எவ்வாறு நிர்வாகத்தை அங்கு நடத்த முடியும் எனக் கேள்வி எழுப்பியதுடன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு பொருளாதரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அதற்குப் பதிலளித்த மகிந்த,
இராணுவ அதிகாரிகள் மக்களுடன் அன்பாக பழகக் கூடியவர்கள். ஆகவே நிர்வாகம் செய்வதற்கு பிரச்சினை இருக்காது என்பதுடன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி என ஒன்று இல்லை எனவும் கூறினார்.
பெ.இராதாகிருஸ்ணன்
மாவிலாறு நடவடிக்கை தொடர்பில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கையினை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மாநாட்டில் கலந்துகொண்ட ஜே.வி.பி. மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இதற்கு மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பெ.இராதாகிருஸ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அத்தகைய தீர்மானம் கொண்டு வரக்கூடாது என சுட்டிக்காட்டினார்.
சரியான நிலைமை தெரியாது அவசரப்பட்டு இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது. இதற்கு நாம் உடன்பட மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், நுஆ ஆகிய கட்சிகள் அந்த வேண்டுகோளை ஆதரித்தன. ஆனாலும் அந்த வேண்டுகோள் பின்னர் நிராகரிக்கப்பட்டது.
இதேவேளை மாநாட்டில் கலந்து கொண்ட ரவூப் ஹக்கீம் தனது கருத்தை கூறி மகிந்தவுடன் சர்ச்சைப்பட்ட பின்னர் மாநாட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.
அதேவேளை மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் மகிந்த சமரசிங்க விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதியான சம்பூரிலிருந்து எறிகணை வீச்சுத் தாக்குதல் நடத்துவதனாலேயே மூதூர் பகுதியில் பெருமளவு முஸ்லிம்கள் கொல்லப்பட்டும் காயமடைய வேண்டிய நிலையும் ஏற்பட்டதாகவும் முஸ்லிம்களை விடுதலைப் புலிகளே வெளியேற்றுவதாகவும் அங்கிருந்த பிரதிநிதிகளுக்கு விளக்கிக்கூறினார்.
ஆதாரம்: வீரகேசரி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment