30 August, 2006

17 பேர் படுகொலைக்கு சிறிலங்கா இராணுவமே காரணம்:

மூதூரில் பிரான்சைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமைக்கு சிறிலங்கா இராணுவத்தினரே காரணம் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு பகிரங்க குற்றம்சாட்டியுள்ளது. இப்படுகொலை தொடர்பில் இன்று புதன்கிழமை கண்காணிப்புக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ளவை: இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பணி விலகிச் செல்லும் கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன், "இது படுகொலைச் சம்பவம்' என்றும் "உலக அளவில் மனிதாபிமான பணியாளர்களைப் படுகொலை செய்துள்ள மிக மோசமான செயல்" என்றும் கூறியுள்ளதாக அசோசியேற்றற் பிறஸ் செய்தி வெளியிட்டுள்ளது. "இந்த சம்பவங்களில் சிறிலங்கா இராணுவத்தினரைத் தவிர வேறு எந்த ஆயுதக் குழுக்களும் பின்னணியில் இருப்பதாக எமது விசாரணைகளில் தெரியவில்லை" என்று கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 17 பணியாளர்கள் படுகொலை தொடர்பிலான விசாரணைகளைச சிறிலங்கா அரச அதிகாரிகள் தடுக்க முனைந்தனர் என்றும் படுகொலை செய்யப்பட்டோரின் உறவினர்கள் அனைவருமே இராணுவத்தினர் மீதே குற்றம்சாட்டி வருகின்றனர் என்றும் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. "பால்கன் நாடுகளில் இத்தகைய சம்பவங்களை சந்தித்த அனுபவம் உள்ளது" என்றும் இரு வாரங்களுக்கு முன்னதாக ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் உல்ப் ஹென்றிக்சன் கூறியுள்ளார். "மூதூர் பிரதேசம் முழுமைக்கும் எம்மைப் பார்வையிட இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. ஆனால் ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். ஏன்? பாதுகாப்புக் காரணங்களா? இல்லை. வேறு சில காரணங்கள்" என்றும் உல்ப் ஹென்றிக்சன் குற்றம்சாட்டியுள்ளார். நன்ரி>புதினம்.

0 comments: