20 August, 2006

பொங்கி எழும் தமிழகம்.

சென்னையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற கறுப்புக் கொடி பேரணி: நாளையும் பொதுக்கூட்டங்கள்- ஆர்ப்பாட்டங்கள் சிறிலங்கா விமானப்படையின் தாக்குதலில் முல்லைத்தீவில் 61 சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இன்று கறுப்புக் கொடி பேரணி நடத்தப்பட்டது. சென்னை அண்ணா சாலை மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இப்பேரணி நடத்தப்பட்டது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழ்நாடு அன்னையர் முன்னணியின் தலைவர் பேராசிரியர் சரசுவதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், கவிஞர் அறிவுமதி, இயக்குநர்கள் வி.சி. குகநாதன், சீமான், புகழேந்தி உள்ளிட்டோர் கறுப்புக் கொடி, கறுப்பு உடை மற்றும் கறுப்புப் பட்டி அணிந்து பேரணியில் பங்கேற்றனர். பேரணியில் முல்லைத்தீவு அவலத்தைச் சித்தரிக்கும் வகையிலான சவப்பெட்டி ஒன்றும் முல்லைக் கோரக் காட்சிகளை விளக்கும் பதாகைகளும் எடுத்துச் செல்லப்பட்டன. பேரணியின் நிறைவில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பாக பழ. நெடுமாறன் மற்றும் பெ.மணியரசன் ஆகியோர் கண்டன உரைகளை நிகழ்த்தினர். இப்பேரணியில் பெண்கள் கைக்குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்றனர். இதர நிகழ்வுகள் சென்னையில் இன்று காலை வள்ளுவர் கோட்டம் அருகே புதிய நீதிக் கட்சி சார்பில் சிறிலங்கா அரசாங்கத்துக்குக் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகித்தார். முல்லைப்படுகொலைச் சம்பவத்தை கண்டித்தும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியா உதவக் கூடாது என்பதை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் பதாகைகள் ஏந்தியிருந்தனர். சேலம் அருகே நங்கவல்லி என்ற கிராமத்தில் மகிந்த ராஜபக்சவின் கொடும்பாவியை எரித்த 45 பொதுமக்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சியில் அருகே காளியப்ப கவுண்டன் புதூரில் இயங்கி வரும் தாய்த் தமிழ்ப் பள்ளி மாணவிகள் 70 பேர் உட்பட 200 பொதுமக்கள் பங்கேற்ற அமைதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. உடுமலைப் பேட்டையில் கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பங்கேற்றார். ஈரோடு கருங்கல்பாளையம் பேரணியும் பொதுக்கூட்டமும் இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தமிழர் இயக்கப் பொதுச்செயலாளர் தோழர் தியாகு உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர். மதுரையில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் மகிந்த ராஜபக்ச கொடும்பாவி எரிக்கப்பட்டது. திருப்பூரில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் சார்பில் கண்டப் பேரணி நேற்று நடத்தப்பட்டுள்ளது. சேலம் மேட்டூரில் நேற்று சனிக்கிழமை அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற அமைதிப்பேரணியும் கண்டனப் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இப்பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தலைமை வகித்தார். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திமுக, பாமக, இடதுசாரிக் கட்சிகள், இந்திய தேசிய காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் தொழிற்சங்கத்தினரும் பேரணியில் பங்கேற்றனர். முல்லைத்தீவு படுகொலைக் காட்சிகளையும் ஈழத் தமிழர் படுகொலைக் காட்சிகளையும் விவரிக்கும் பதாகைகளையும் பேரணியில் பங்கேற்றோர் ஏந்தியிருந்தனர். நிகழ உள்ளவை சென்னையில் நாளை திங்கட்கிழமை "இலங்கை இனவெறி போரை எதிர்ப்போம்- தமிழின விடுதலையை ஆதரிப்போம்" என்ற முழக்கத்தை முன்வைத்து முகம், கவிதாசரன், கலை, யாதும் ஊரே, மெய்யறிவு, கல்வெட்டு பேசுகிறது ஆகிய சிற்றிதழ்கள் சார்பில் கண்டன அரங்கக் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் நாளை மாலை இந்நிகழ்வு நடைபெறுகிறது. முல்லைப் படுகொலையைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் நாளை மாலை தியாகராய நகர் பேரூந்து நிலையம் அருகே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாலர் தொல். திருமாவளவன் பங்கேற்கும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்தப் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. சேலத்தில் நாளை அமைதிப் பேரணி, உண்ணாநிலைப் போராட்டம் ஆகியவை நடைபெற உள்ளது. சேலம் சாரதா கல்லூரி, சட்டக் கல்லூரி, சவுடேஸ்வரா கல்லூரிகளின் மாணவிகள் இந்நிகழ்வில் பங்கேற்கின்றனர். உண்ணாநிலைப் போராட்டத்தில் தியாகு, கொளத்தூர் மணி, பேராசிரியர் சந்திரநாராயணன், தமிழ்த் தேசிய கட்சி இளமுருகு, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் நிர்வாகி பாவேந்தன் உள்ளிட்ட பலர் காலை முதல் மாலை வரை கண்டன மற்றும் வீரவணக்க உரை நிகழ்த்துகின்றனர். எதிர்வரும் 22 ஆம் நாள் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அமைதி ஊர்வலம் மற்றும் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பெரியார் திராவிடர் கழகத் துணைத் தலைவர் ஆனூர் கோ.ஜெகதீசன், விடுதலை க.இராசேந்திரன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் வீரவணக்க உரைகளை நிகழ்த்துகின்றனர். பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பாவின் அகவணக்க இசைநிகழ்வு நடைபெற உள்ளது. எதிர்வரும் 23 ஆம் நாள் சென்னை தொலைக்காட்சி நிலையம் அருகே உள்ள சுவாமி சிவானந்தா சாலை அண்ணா அரங்கத்தில் முல்லைப் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் அரங்கக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வுக்கு பொடா சாகுல் அமீது தலைமை வகிக்கிறார். மக்கள் கவிஞர் இன்குலாப், கவிஞர் பச்சியப்பன் ஆகியோர் இரங்கற்பா வாசிக்க பழ. நெடுமாறன், பேராசிரியர் அப்துல் காதர், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகன், மறுமலர்ச்சி திமுக நிர்வாகி மல்லை சத்யா, பாவலர் அறிவுமதி, இயக்குநர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை, வழக்கறிஞர் அஜிதா, மருத்துவர் வேலாயுதம் ஆகியோர் கண்டன உரைகள் நிகழ்த்துகின்றனர். எதிர்வரும் 24 ஆம் நாள் சென்னை விக்டோரியா நினைவு அரங்கம் முன்பாக பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தலைமையில் தமிழ் இளைஞர் பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். நன்றி>புதினம்.

1 comments:

Anonymous said...

முதல் படத்தில் இருக்கும் இரண்டு சுட்டிகளும் அருமை. இந்த வயதிலேயே தமிழ்காக்கும் நடையா?