29 August, 2006

பிரபாகரனின் நிழலைக்கூட தொடஇயலாது-வைரமுத்து.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் நிழலைத் தொடக்கூட சிங்கள இராணுவத்துக்கு இயலாது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு படுகொலையைக் கண்டித்து சென்னையில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்ற முழுநாள் உண்ணாநிலைப் போராட்டத்தில் வைரமுத்து ஆற்றிய கண்டன உரை: ஈழத்தின் செஞ்சோலைப் பிஞ்சுகளின் துயரத்தில் கண்ணீரஞ்சலி செலுத்துவதற்காகவும் சிங்கள வெறித்தனத்துக்கு நம்முடைய கண்டனத்தைத் தெரிவிக்கவும் தமிழர் பேரவை தலைவர் சுப.வீ. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார். இந்தப் படத்தில் உள்ள பிஞ்சுக் கால்களைப் பார்த்தால்- இந்தப் படத்தில் சுரைக்காய்களைப் போல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பிஞ்சுப் பிணங்களைப் பார்த்தால்- இவர்கள் போராளிகளுக்காக பயிற்சி பெற்றவர்கள் என்று சொல்லுகிற பொய் உடைகிறது என்பது நாட்டுக்கு விளங்கும். நண்பர்களே! மூன்று வேண்டுகோளோடு இங்கு வந்திருக்கிறேன முதல் வேண்டுகோள்- தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு: கும்பகோணத்தில் நடந்தது தமிழ்நாடு சகித்துக் கொள்ள முடியாத துயரம்- பள்ளிப் பிள்ளைகளின் மரணம். அந்தப் பள்ளிப் பிள்ளைகளின் மரணத்துக்கு தமிழ்நாடே எழுந்து நின்று அழுதது. இந்த செஞ்சோலைப் பிஞ்சுகளின் துயரம் அந்த அளவுக்கு வருத்தியிருக்கிறதா? இல்லையா? என்பதை நெஞ்சைத் தொட்டுச் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். விபத்துக்கு அழக்கூடிய தமிழன்- ந கொலைக்கு அழமாட்டாயா? என்று தமிழ்நாட்டு மக்களை நோக்கி கேட்க வேண்டும். இந்த துயரத்தில் நாம் பங்குகொள்ள வேண்டும். கடைசித் தமிழன் உள்ளவரைக்கும் அங்கு அந்தப் போராட்டம் ஓயவேப் போவதில்லை என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுகிறேன். சிங்கள இராணுவம் நேற்று ஒப்புக் கொண்டிருக்கிறது- போரால் இந்தப் பிரச்சனையை தீர்த்துவிட முடியாது- போர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை- விடுதலைப் புலிகளை நாங்கள் வெல்ல முடியாது என்று ஒட்டுமொத்தமாக சிங்கள அரசு பதிவு செய்திருக்கிறது. பிரபாகரனின் நிழலைத் தொடக் கூட சிங்கள இராணுவத்துக்கு இயலாது என்பதுதான் உண்மை. சிங்கள அரசுக்கு ஒரு வார்த்தை- யுத்தம் செய்கிறீர்களே- உங்கள் யுத்தத்தில் உணர்ச்சி இருக்கிறதா? தமிழன தன் நிலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக- இனத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக- தன் உரிமைகளைப் பேணிக் கொள்வதற்காக- தன் பூர்வீக நிலத்தின் மீதான உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்காக- உணர்ச்சியோடு போராடுகிறான். ஒரு முயலை ஒரு சிங்கம் துரத்திச் செல்கிறது. சிங்கத்தின் வேகம் அதிகமா? முயலின் வேகம் அதிகமா? என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது சிங்கத்தின் வேகம்தான் அதிகமாக இருக்கும் என்று தப்பான தகவல் தரப்பட்டது. சிங்கம் உணவுக்காக ஓடுகிறது. முயல் உயிரைக் காக்க ஓடுகிறது. முயலின் வேகம்தான் சிங்கத்தின் வேகத்தைவிட அதிகமாக இருக்கும். அதுபோல்தான் சிங்களவர்கள் கூலிக்கு மாரடிக்கிறார்கள்- நம் தமிழர்கள் இனமானம் காக்கப் போராடுகிறார்கள். இந்த உணர்ச்சிகள் இருக்கும் வரை அவர்களை வெல்லவே முடியாது. இந்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள்- இந்திய அரசாங்கமே! நாங்கள் இந்திய இறையாண்மைக்கு நாங்கள் என்றும் பங்கம் விளைவிப்பவர்கள் அல்ல. சட்டப்பேரவையில் முதல்வர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றியிருக்கிற தீர்மானம் ஒன்றே போதும் அவரது நெஞ்சின் வலி என்ன என்று. அவரால் இந்திய இறையாண்மைக்குட்பட்டு என்ன வகையில் தன் வலியை- கருத்தை வெளிப்படுத்த முடியும்- ஆதரவை தெரிவிக்க முடியும் என்பதை அவர் அழகாகப் பதிவு செய்திருக்கிறார். இந்திய அரசே! நீ சிங்கள அரசுக்கு ஆயுதம் வழங்கினால் அங்கு தமிழினம் பூண்டோடு அழிக்கப்பட்டு விடும். தமிழர்களுக்கு அதுவிரோதம். ஒருவேளை இந்திய அரசு ஆயுதம் வழங்காததால் பாகிஸ்தானிடம் சிங்கள அரசு ஆயுதம் வாங்கிக் கொண்டால் அது தமிழனுக்கு மட்டும் ஆபத்து அல்ல- இந்தியாவுக்கே அது ஆபத்து என்பதை மறந்துவிடக் கூடாது. சிங்களர்கள் சூழ்ச்சிக்காரர்கள். வங்காள விரிகுடாவில் ஒரு கையை நீட்டி இந்தியாவிடம் உதவி கேட்கிறார்கள். அரபிக் கடலில் ஒரு கையை நீட்டி பாகிஸ்தானிடம் உதவி கேட்கிறார்கள். இந்திய அரசே! தெளிவாக இரு! பாகிஸ்தான் ஆயுதம் உள்ளே போகாமல் தடுத்து விடு- தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களுக்கு ஆயுதம் வழங்கும் எண்ணத்தையே நிறுத்திவிடு. இந்த உண்ணாநிலைப் போராட்டத்தால் பிரச்சனைகள் தீரும் என்று போலிக் கனவு காண நாம் தயாராக இல்லை. இது ஒரு அடையாளம். இலங்கைத் தமிழன் அங்கே பாதிக்கப்பட்டால் இங்கேயிருக்கிற தமிழன் சந்தோசத்துடன் விழித்திருக்கிற முடியாது. அவன் மகிழ்ச்சியோடு ஓய்வு கொள்ள முடியாது. அந்த இரத்தம் இங்கே துடிக்கும். அங்கே தசை விழுந்தால் இங்கே இருதயம் துடிக்கும் என்ற உணர்ச்சியை வெளிப்படுத்த இந்த உண்ணாநிலை என்றார் வைரமுத்து. நன்றி>புதினம்.

8 comments:

Anonymous said...

அன்பு ஈழபாரதி
உணர்ந்து கொள்ளுங்கள்...தமிழ் மக்களின் பாடுகளிலும், அவர் தம் பாடைகளிலும் பரிதாபத்திலும் பல்லக்குக் கட்டுகிறான் பிரபாகரன்.செஞ்சோலைச் சிறார்கள் பலவந்தமாகப் புலிகளால் அங்கே கொண்டுவரப்பட்டவர்கள். இறந்தவர்கள் போக அதே தொகையினர் காயப்பட்டார்களே...மருத்துவ உதவி எதுவுமின்றி மாண்டார்களே...தயா மாஸ்டருக்கு மருத்துவ உதவி கோரிய மேல் மட்டம் ஏன் இவர்கள் விடயத்தில் அவர்களை அவலமாகச் சாகவிட்டது. பிள்ளைகளின் பிணங்களை பெற்றோருக்கு மறுத்தது ஏன்! வன்னியில் என்ன நடக்கிறது என்று காலங்காலமாக வன்னியில் வாழ்ந்த பெற்றோருக்குத்தான் புரிகிறது! ஆயுதங்களோடு வந்தேறிய மற்றவர்களுக்கு இது புரியப் போவதில்லை.

said...

கள்ளிக்காட்டு காவியம் பாடிய வாயால் விரைவில் ஈழகாவியம் பாடுவேன் எனக்கூறிய, உணர்வுக்கவிஞனே அதை வாசிப்பதற்கு அல்ல சுவாசிப்பதற்காக காத்திருக்கிறோம். ஈழகாவியத்தில் எமது தேசத்தின் தலைமகனே காவிய நாயகன், உன்வாயால் நீ பாடவேண்டும் அதை இந்த தமிழ் உலகமே கேட்கவேண்டும், காத்திருக்கிறோம் கவிஞரே.

said...

"செஞ்சோலைச் சிறார்கள் பலவந்தமாகப் புலிகளால் அங்கே கொண்டுவரப்பட்டவர்கள். இறந்தவர்கள் போக அதே தொகையினர் காயப்பட்டார்களே...மருத்துவ உதவி எதுவுமின்றி மாண்டார்களே...
பிள்ளைகளின் பிணங்களை பெற்றோருக்கு மறுத்தது ஏன்!"

அனானி சும்மா சொன்னதையே திரும்மத்திரும்ப சொல்லாதீர்கள், சொல்வதால் பொய்கள் உண்மைஆகிவிடாது.
கொண்டுவரப்பட்டவர்கள் செஞ்சோலைச்சிறார்கள் அல்ல, இதர பாடசாலை மாணவர்கள், செஞ்சோலை என்பது தாய்தந்தையை போரில் இழந்த பிள்ளைகளை பேணிக்காக்கும் ஒரு காப்பகம்.
மருந்து பொருட்கள் இல்லாமல் இறந்தார்கள் என்றால் அதற்கு யார் பொறுப்பு, அத்தியாவசிய, மருந்து பொருகளை போர் செய்யும் இடங்களில் தடை செய்யகூடாது என ஜக்கிநாட்டுசபை சட்டமே இருக்கிறது, அதை மீறியது அரசா? புலிகளா?
இறந்த பிள்ளைகளின் சடலங்களை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் மாவீரர்துயிலும் இல்லத்திலா விதைத்தார்கள். மடத்தனமாக கதைக்கப்படாது.
அவர்கள் பாடசாலைமாணவர்கள், பெற்றோர், வீடு எல்லாம் அவர்களுக்கு இருக்கிறது.
போராட்ட சூழலிலும் மாணவர்களுக்கான முதலுதவி பயற்சியை கொடுக்கிறார்கள் என்றால் அதற்கு பாரட்டவேண்டும், ஒவ்வொரு பாடசாலையிலும்தான் பயிற்சிகள் கொடுக்கிறார்கள். ஏன் நீர் படித்த பாடசாலையில் தரவில்லையா? அல்லது பள்ளிக்கூடப்பக்கம் போனதில்லையா? நான் அங்கு படிக்கும் காலத்தில் எமக்கும் தந்தார்கள். பதுங்கு குழிகளை பாடசாலையில் எப்படி அமைப்பது, விமாணங்கள் குண்டுவீசும் போது, மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவயதினரை பதுங்கு குளிக்குள் அவசர அவரசமாக இறக்குவது, காயப்பட்டவரை, எப்படி தூக்குவது, மேலதிக ரத்தப்போக்கு ஏற்படாமல் இருக்க எப்படி கட்டுப்போடுவது, அப்பகுதியை எப்படி வைத்திருப்பது, எலும்பு முறிந்தவருக்கு எப்படி கட்டுப்போடுவது, மூர்சயுற்றி இருப்பவர்ருக்கு எப்படி செயற்கை சுவாசம் கொடுப்பது. என்பதற்கான பயிற்சிகள் தந்தார்கள், இந்த பயிற்சிகளை யார்தருவார்கள் குண்டு போட்டு மாணவர்களை கொல்லும் சிங்கள அரசா? எமக்காக தம்மை கொடுக்கத்துணிந்தவர்களின் மருத்துவப்பிரிவுதான் தருவார்கள், அல்லது செஞ்சிலுவை சங்க மருத்தவப்பிரிவு அல்லது பல்கலைக்கழக மருத்துவ மாணவர்கள். இங்கு குறிப்பிட்ட மாணவர்களை தேர்தெடுத்து, கவனிக்க தேர்தெடுக்கப்பட்டவர்கள் வகுப்பில் முதலாவது, இரண்டாவதாக வரும் கெட்டிக்கார பிள்ளைகள்.அவர்கள் மூலமாக தமதுதமது பாடசாலை அனைத்து மாணவர்களுக்கும் கொடுப்பதற்கான முயற்சி, தேர்தெடுக்கப்பட்ட இடம் 2004இல் யுத்த சூணியப்பிரதேசமாக பிரகடன படுத்தப்பட்ட இடம். இடம் இருப்பதற்கான வரைபடம் ராணுவத்துக்கு போர்நிறுத்த கண்காணிப்புக்குழுமூலம் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கிறது. தவறு செய்தது யார்? சும்மா நீலிக்கண்ணீர் வடிக்காதீர்.
போர்நிறுத்த குழுவும்,UNHCRசொல்லிவிட்டது இறந்தது மாணவர்கள். அது ஆயுதப்பயிற்சி கொடுக்கப்படும் இடம் அல்லவென்று.

Anonymous said...

கள்ளிக்காட்டு பாவலரின் ஈழகாவியத்தை கேட்க நாமும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்.

Anonymous said...

வரைமுத்குக்கு எமது வாழ்த்துக்கள்.

Anonymous said...

வைரமுத்து ஒரு டுபுக்கு, அத பதிவு பொட்ட நி ஒரு டுபுக்கு...பிரபாகரனின் நிழல் எமக்கு வெண்டாம்....உடல் மட்டும் பொதும்...

said...

வணக்கத்துடன், உங்கள் கோபம் நியாயமானது, புரிகிறது...

மு.க, ஆற்காடு வீராசாமியை அனுப்பி வைத்ததில் இருந்து இந்த போராட்டத்துக்கு அவரது பட்டும் படாத ஆதரவு தெரிகிறது.

இருந்தாலும் தமிழகம் கொதித்து எழுந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து.

ஊடகங்களும் தன் கடமையை சரியாக செய்யவில்லை என்பதே எனது கருத்து.

Anonymous said...

வைரமுத்து ஒரு படித்த பதர்..எழுத்து என்பது அவருடைய திறமை..ஒரு கார் மெக்கானிக் திறமை போல...அவர் ஒரு எழுத்து வியாபாரி..காசு கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் எழுதுவார்.'முருங்கக்காய் ஸ்பெசல்' முந்தானை முடிச்சு படத்தை பாராட்டி எழுதியவர்.சினிமா முதலாளி AVM அவர்களையும்,பாரதியாரையும் ஒரே தட்டில் வைத்து புகழ்ந்து எழுதியவர்...தமிழை விற்று சோறு தின்பவர். இயக்குனர் சீமான் ஈழத்தமிழர்களை குறி வைத்து 'தம்பி' என்ற அபத்தமான படத்தை சமீபத்தில் எடுத்து சில்லறை பார்த்தவர்,சுபவீ மற்றும் கவிஞர் அறிவுமதி போன்றவர்களின் மற்ற மொழி,இன வெறுப்பு அறிந்தவிசயமே.எல்லோருக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது.

இதில் எத்தனை பேருக்கு அங்கு நடக்கும் அன்னிய தலையீடுகள் பற்றி தெரியும்? அங்கு எத்தனை குழுக்கள் உள்ளது என்பது இவர்களுக்கு தெரியுமா?ஈழப் பிரச்சனை இந்தியாவின் பாதுகாப்பு பிரச்சனை என்ற புரிதல் கூட இல்லை.சிங்கள ராணுவத்தின் அத்துமீறல்களை கண்டிக்கும் இடத்தில் புலிப் பிரச்சாரம் ஏன்? அவர்களுக்கு வார்த்தைகளை எங்கு,எப்பிடி முதலீடு செய்ய வேண்டும் என்பது தெரிந்திருக்கிறது.

இவர்களுக்கு உண்மையிலேயே ஈழத்தமிழர்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் ஈழத்தின் அனைத்து தமிழ் குழுக்ககளையும் சேர்ந்தியங்குமாறு கட்டாயப்படுத்தலாம்.அப்படி செய்யாத பட்சத்தில் அங்கு நடைபெறும் சகோதர யுத்த கொலைகளை இவர்கள் ஏற்றுக் கொண்டதாகிவிடும்.

"பிரபாகரனின் நிழலைக்கூட தொடஇயலாது-வைரமுத்து."

கவிஞரே..'ஈழப்போராட்டத்தில் எனது தமிழ்' என்ற புத்தகத்தை உடனடியாக நீங்கள் எழுதத் தொடங்கலாம்.அந்த ஈழ ரத்தம் தோய்ந்த தமிழுக்கு 'நோபல் பரிசு'கிடைத்தாலும் கிடைக்கலாம்.


பாப்பாபட்டியிலும் கீரிபட்டியிலும் போய் தமிழ்நாட்டு தலித் தமிழனுக்கும் உரிமைகளை பெற்றுத்தர வைரமுத்து,சீமான் போன்றவர்கள் போராடவேண்டும்.

போராடுவார்களா?