24 August, 2006

இலங்கைக்குள் சர்வதேசகுழு வடிவில் அமெரிக்கா புகுமா?

இலங்கையில் இடம்பெறும் பாரதூரமான மனித உரிமை மீறல்களை கண்காணிக்க சர்வதேசகுழுவை அனுப்ப வேண்டும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹியூமன் ரைட்ஸ் வோட்ச் இலங்கையில் இடம்பெறும் பாரதூரமான மனித உரிமை மீறல்களை கண்காணித்து அவற்றை கட்டுப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையின் கீழ் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் "ஹியூமன் ரைட்ஸ் வோட்ச்' எனப்படும் மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே ஹொங்கொங்கை தளமாகக் கொண்டியங்கும் ஆசிய மனித உரிமைகள் அமைப்பு கடந்த 17ஆம் திகதி வெளியிட்ட தமது விசேட அறிக்கையில்; பாரிய மனித படுகொலைகளும்,ஆட்கடத்தல்களும்,மோசமான மனித உரிமை மீறல்களும் காணப்படும் நாடாக இலங்கை உள்ளதாலும் மனித உயிர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாத ஒரு நாடாக உள்ளதாலும் உடனடியாக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகளை கண்காணிக்கும் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புவதோடு இப்பிரச்சினையை தீர்க்கும் மார்க்கமொன்றை காண ஐ.நா விரைந்து செயற்பட வேண்டும் என்றும் கோரியிருந்தது. ஆசிய மனித உரிமைகள் அமைப்பைத் தொடர்ந்து, தற்பொழுது அமெரிக்காவின் மனித உரிமைகள் அமைப்பும் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள தமது அறிக்கையிலும் இதே கருத்தையே தெரிவித்துள்ளது . இலங்கையில் நிலவும் மோசமான சூழல் காரணமாக சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்புவதன் மூலம் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறும் அனைத்து தரப்பினரையும் வெளிப்படையான அறிக்கையிடல் மூலம் இனங்காணலாம். அத்தோடு இந்த சர்வதேச கண்காணிப்பாளர்கள் பிரசன்னம் மனித உரிமைகள் துஷ்பிரயோகப்படுத்துவதை நிறுத்த உதவும் என்றும் அவ்வமைப்பு கூறியுள்ளது. மேலும் கடந்த 11ஆம் திகதி முதல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் மோதல்களினால் சுமார் 500,000 மக்கள் வெளித்தொடர்புகள் அற்று, உணவு,நீர் என்பனவற்றிற்கு கஷ்டப்படும் நிலைமையைக் கருத்திற்கொண்டு அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் உணவு,நீர் மற்றும் மருந்து வகைகள் உட்செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. நியூயோர்க்கில் தலைமையகத்தைக் கொண்டியங்கும் "ஹியூமன் ரைட்ஸ் வோட்ச்' வெளியிட்டிருக்கும் அறிக்கையின் சாராம்சம் பின்வருமாறு; யாழ்குடாநாட்டில் இடம்பெற்று வரும் மோதல்களின் போது மக்கள் பாரதூரமாக பாதிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கப்படவில்லை. ஆயுதப்பிணக்குகளின்போது மக்களுக்கு முறையான பாதுகாப்பு கிடைக்கப்பெறுவதை பிணக்குகளில் சம்மந்தப்பட்ட தரப்பினர் உறுதிப்படுத்த வேண்டும் என சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் குடியிருப்புக்களுக்கருகில் முகாமிட்டு இராணுவத்தினரை நிலைகொள்ள வைப்பது,இராணுவ தாக்குதல் உபகரணங்களை அமைப்பது,மற்றும் இராணுவ இலக்குகளுக்கு அருகில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற விடாமல் தடுப்பது என்பன மனிதாபிமான சட்ட விதிகளுக்கு முரணானது. பிணக்குகளில் சம்பந்தப்பட்ட தரப்புகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் உள்ள மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற ஆவண செய்ய வேண்டும்.மனிதாபிமான தொண்டர் அமைப்புகளை உணவு,மருந்து உட்பட்ட அத்தியாவசிய பொருட்களை ஆபத்துக்குட்பட்ட மக்களுக்கு வழங்க மோதல் பிரதேசங்களுக்கு அனுமதிக்க வேண்டும். ஆயினும் சர்வதேச மற்றும் உள்ளுர் தொண்டர் நிறுவனங்கள் அச்சுறுத்தலுக்கும், தாக்குதல்களுக்கும்,வன்முறைகளுக்கும் உள்ளாகியுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளினால் இவ்வமைப்புகள் நிரந்தரமாக வடக்கு கிழக்கில் இருந்து வெளியேறும் அபாயம் உள்ளது. அண்மையில் பிரான்ஸ் நாட்டின் தொண்டர் நிறுவன ஊழியர்கள் 17 பேர் கொடூரமாக கொல்லப்பட்டது, மற்றும் திருகோணமலையில் இடம்பெயர்ந்த மக்களுக்காக கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்களை அப்பகுதிக்கு செல்ல விடாமல் தடுத்தமை, மூதூரில் சர்வதேச தொண்டர் ஸ்தாபனங்களின் மீதான கைக்குண்டு தாக்குதல்கள், மற்றும் கிழக்கில் சில நகரங்களில் தொண்டர் ஸ்தாபன அமைப்புகளில் வேலை செய்த பெண்கள் புலிகளால் அச்சுறுத்தப்பட்டமை ஆகிய சம்பவங்கள் தொண்டர் நிறுவனங்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது. அரசாங்க அதிகாரிகள், மற்றும் பல அரசியல் கட்சிகள் என்பனவும் அரசசார்பற்ற அமைப்புகள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தவன்னமுள்ளன. சுனாமி மீள்கட்டுமான திட்டங்கள் தாமதமாகியமைக்கும் இவ்வமைப்புக்களையே குறை கூறியுள்ளனர். எவ்வாறாயினும் பாதிக்கப்படும் மக்களுக்கு இவ்வமைப்புகள் உதவி புரிவதை தடுக்கலாகாது. இணைப்பு : newstamilnet.com Wednesday, 23 Aug 2006 USA

1 comments:

Anonymous said...

LTTE must start war without delay and form EELAM. If we make delay,
not only USA, but also some other
countries ready to involve.

LTTE must give a TIME LIMIT to SRI LANKA. but LTTE also talk with SL Govt with out time Frame.

that is a very very very big mistake of LTTE.
History may teach us