26 August, 2006

இந்தியருக்கு எதிரான சிங்களவரின் துரோகங்கள்.

இந்தியருக்கு எதிரான சிங்களவரின் நூற்றாண்டு கால கொடுமைகளையும் துரோகங்களையும் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "தினமணி" நாளேட்டில் மறவன்புலவு சச்சிதானந்தன் எழுதியுள்ள கட்டுரையில் பட்டியலிட்டுள்ளார். "தினமணி" நாளேட்டில் இன்று சனிக்கிழமை வெளியான கட்டுரை: சுவாமி விவேகானந்தர் மேற்குலக வெற்றிப் பயணத்தை முடித்துவிட்டு இலங்கை வழி இந்தியா திரும்புகையில், 1897-ல் அநுராதபுரத்துக்குப் போகிறார். சிங்கள-புத்தத் துறவிகள் அவரைத் தாக்க முனைகின்றனர். ஈழத்தமிழரான குமாரசுவாமி அவரைக் காப்பாற்றிப் பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறார். கீழக்கரை, காயல்பட்டினம், இராமநாதபுரம், நாகப்பட்டினம் ஆகிய தமிழக நகரங்கலில் இருந்து தமிழரான முஸ்லிம்களும் மும்பையிலிருந்து போராக்கள், பார்சிகள், சிந்திகளான முஸ்லிம்களும் கொழும்பு நகரிலும் சிங்களக் கிராமங்களிலும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். 1915-ல் முஸ்லிம்களுக்கு எதிரான மாபெரும் கலவரம் மூண்டது. முஸ்லிம்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புமாறு, பின்பு இலங்கைப் பிரதமரான சேனநாயக்கா உள்ளிட்ட மூத்த சிங்களத் தலைவர்கள் அக்காலத்தில் திரண்டெழுந்தனர். 1927-ல் காந்தியடிகளின் இலங்கைப் பயணத்தின்போது சிங்களத் தீவிரவாதிகள் காட்டிய எதிர்ப்புகளையும் ஈழத்தமிழரும் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸýமாக அளித்த வரவேற்பையும் இந்திய விடுதலைப் போருக்காகக் காந்தியடிகளிடம் தமிழர் அளித்த நன்கொடைகளையும் மகாதேவ தேசாய் விரிவாக எழுதியுள்ளார். மலையகத் தேயிலைத் தோட்டங்களில் பணிக்காகச் சென்ற தமிழகத் தொழிலாளர்களையும் கொழும்புத் துறைமுகத்தில் பணிக்காகச் சென்ற கேரளத்து தொழிலாளர்களையும் திருப்பி அனுப்புமாறு தொடர்ச்சியாகப் பல போராட்டங்களைச் சிங்களவர் நடத்தினர். 1920-களில் சிங்களத் தீவிரவாதியான ஏ.இ.குணசிங்கா தலைமையில் முளைவிட்ட இந்தப் போராட்டங்கள் 1930களில் கூர்மை அடைந்தன. மலையாளிகளைத் திருப்பி அனுப்பக் கோரிய சிங்களவரின் போராட்டத்தின் கடுமையைத் தணிக்கும் நோக்குடன், கேரளப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவரான ஏ.கே.கோபாலன், 1939-ல் கொழும்புக்குச் சென்றார். வெள்ளவத்தையில் அவர் பங்கேற்ற மேதினக் கூட்டத்தை சிங்களத் தீவிரவாதிகள் குலைக்க முயன்றனர். அதன் பின்னர் 1940-களின் தொடக்கத்தில் மலையாளிகள் கொழும்பிலிருந்து முற்றாக வெளியேறினர். மலையகத் தமிழ்த் தொழிலாளருக்குச் சிங்களவர் தொடர்ச்சியாக இழைத்து வந்த கொடுமையைத் தணிக்க, மகாத்மா காந்தியின் சார்பில் ஜவாஹர்லால் நேரு இலங்கைக்குச் சென்றார். இலங்கை இந்தியக் காங்கிரûஸ நிறுவினார். 1939 ஜூலை 26 அன்று கொழும்பு, காலிமுகத் திடலில் அவர் பங்கேற்று உரையாற்றிய கூட்டத்தைச் சிங்களத் தீவிரவாதியான ஏ.இ. குணசிங்காவின் அடியாள்கள் குழப்பினர். 1948-ல் இலங்கை விடுதலை பெற்றதும் சிங்களப் பெரும்பான்மை நாடாளுமன்றத்தின் ஆயத்தப் பணிகளுள் ஒன்றுதான், தமிழகத்திலிருந்து சென்று மலையகத் தோட்டங்களை வளப்படுத்திய தொழிலாளரின் குடி உரிமையைப் பறித்த சட்டமாகும். மலையகத் தமிழ்த் தொழிலாளர் அனைவரையும் திருப்பி அழைக்க வேண்டுமென இந்தியாவிடம் சிங்களவர் கூறினர்; இந்தியா மறுத்தது; அவர்களை நாடற்றவர்களாக்கியது சேனநாயக்கா அரசு. நேரு காலத்தில் பலமுறை முயன்று தோற்றதை, சாஸ்திரி காலத்திலும் இந்திரா காலத்திலும் இலங்கை பெற்றுக்கொண்டது. சிறீமாவோ-சாஸ்திரி மற்றும் சிறீமாவோ- இந்திரா ஒப்பந்தங்கள் சிங்களவரின் இந்திய எதிர்ப்புக் கொள்கைகளின் வெற்றி முகங்கள். நான்கு இலட்சம் தமிழரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவும் கச்சத் தீவை இலங்கை எல்லைக்குள் அடக்கவும் இந்தியா ஒப்புக்கொண்டதல்லவா? மலையகத் தமிழர்களைத் திரும்பப் பெற இந்தியா ஒப்பியதற்கு நன்றியாக, 1977லிலும் 1983லிலும் இனக்கலவரத்தில், கொழும்பில் வணிகம் செய்த இந்திய முதலாளிகளைக் கொலை செய்து, அவர்களின் சொத்துகளைச் சிங்களக் காடையர் சூறையாடினர். நாடற்றவர்களான மலையகத் தமிழர் பலரையும் கொன்றுகுவித்தனர். கச்சத் தீவைக் கொடுத்ததற்கு நன்றியாகத் தமிழக மீனவரின் உயிர்களைப் பலி கேட்டுக்கொன்று குவித்து, தமிழக மீனவரின் படகுகளைச் சேதாரமாக்கி, வலைகளை அறுத்தெறிந்து, பிடிபட்ட மீன்களையும் இன்றுவரை இலங்கைக் கடற்படை பறித்தெடுத்துச் சென்றுவருகிறது. 1971 ஏப்ரலில் ஜேவிபியின் ஆயுதப் புரட்சியை அடக்க, இந்தியா படைகளை அனுப்பியது. நன்றிக் கடனாக, 1971 டிசம்பர் வங்கப்போரில், இந்திய வான் பகுதிமேல் பறக்க முடியாத பாகிஸ்தான் விமானங்கள், இந்தியாவுக்கு எதிராகக் கொழும்பு விமான நிலையத்தில் தங்கிப்போக, ஈழத்தமிழரின் எதிர்ப்பையும் மீறிச் சிங்கள அரசு பாகிஸ்தானுக்கு உதவியது. அதுமட்டுமல்ல, இந்தியாவில் வெளியாகும் இதழ்களையும் நூல்களையும் குப்பைகள் என இழித்து, அவற்றின் இறக்குமதியை 1971 முதல் கட்டுப்படுத்தியது. 1983- முதலாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் பலமுறை தாக்குதலுக்குள்ளாயது; தூதரக வாகனங்கள் கொளுத்தப்பட்டன. 1987-ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஒப்பமிட, ராஜீவ் கொழும்பு செல்கிறார். அப்போதைய பிரதமரான பிரேமதாசா, ராஜீவை அவமதிக்கத் திட்டமிட்டு கொழும்பை விட்டு நீங்கித் தாய்லாந்தில் பயணித்தார். ராஜீவை அவமதித்த பிரேமதாசாவின் அரசியல் குரு, 1939 ஜூலை 26-ல் நேரு பேசிய கூட்டத்தைக் குலைக்க வந்த ஏ.இ.குணசிங்கா. கொழும்பில், குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் ராஜீவுக்குப் பிரியாவிடை... கடற்படைச் சிப்பாய் ஒருவன், ராஜீவின் முதுகில் துப்பாக்கிப் பிடியால் கடுமையாகத் தாக்குகிறான். குற்றவாளியான அவனை நீதிமன்றம் சிறையில் அடைக்க, அரசோ அவனை விடுதலை செய்கிறது. 1983 முதலாக, பல இலட்சம் ஈழத்தமிழர் இந்தியாவில் தஞ்சம் புகுந்து, இந்திய மக்களின் வரிப்பணத்தில் வாழ்வை ஓட்டவேண்டிய, இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைக்கும் சிங்களப் படையின் வெறியாட்டமே காரணமாகும். ஆசிய நாடுகளின் வாக்குகளைப் பிரித்து, இந்திய வேட்பாளர் ஐ.நா. தலைமைச் செயலராக வெற்றி பெற முடியாதவாறு தானும் ஒரு வேட்பாளரைக் களத்தில் இறக்கி, அவருக்காக உலகெங்கும் சென்று ஆதரவு திரட்டுகிறது இலங்கை அரசு. விவேகானந்தர் காலம் தொடங்கி இன்று வரை, ஏறத்தாழ 100 ஆண்டுகளாக, சிங்கள இனத்தவரின் அரசும், அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் தனி மனிதர்களும் இந்தியாவின் முகத்தில் திட்டமிட்டே பலமுறை கரி பூசி வந்துள்ளனர். அவற்றைப் பொருளெனக் கொள்ளாது, நிகழ்வுகளை மறந்து, அவர்களின் அடாச் செயல்களை மன்னித்து, தொடர்ந்தும் சிங்களவருக்கு நன்மையையே செய்து வருகிறது இந்தியா. இந்த மாதத்தில் இலங்கைப் படைக்கு ராடார் கருவிகளை அன்பளிப்பாகவும் கொடுத்துள்ளது. மறப்பதும் மன்னிப்பதும், அவர் நாண நன்னயம் செய்தலும் இந்திய மண்ணோடு கலந்த மரபுகள். 999 மனிதத் தலைகளைக் கொய்த அங்குலிமாலாவை மன்னித்துப் பண்பட்ட மனிதனாக்கித் தன் சீடராக்கியவர் புத்தர். இந்தியாவே ஆயுதங்களைக் கொடுத்தது; பயிற்சியை வழங்கியது; நிதியும் வழங்கியது. அதைத் தொடர்ந்த 1987-91 காலத்திய நிகழ்வுகளால் இந்தியாவின் கடுஞ் சினத்துக்கு ஈழத்தமிழர் ஆளாகினர். 13 சங்கப் பாடல்களைத் தந்த ஈழத்துப் பூதந்தேவனார் முதலாக, ஆறுமுக நாவலர், விபுலானந்த அடிகள் ஊடாக, இன்றைய அறிஞர், புலவர், படைப்பாளிகள் வரை, கடந்த இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கூடாக, ஈழத்தமிழரும் இந்தியாவும் எவ்வித பகைமையோ, உரசலோ, எதிர்ப்புணர்வோ இல்லாது கொண்டும் கொடுத்தும் ஒருவரை ஒருவர் ஆட்கொண்டு, வாழ்ந்து வருகின்றனர். இடையில் ஈழத்தமிழர் உணர்ச்சிவயத்தால், பொருந்தாச் செயல் செய்திருப்பின் மன்னிப்பதும் மறப்பதும் மீண்டும் அரவணைப்பதும் இந்தியாவின் கடனல்லவா? நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து உரசியும் கடுமையாக எதிர்த்தும் வரும் சிங்களவரோடு பெருந்தன்மையோடு நடப்பதுபோல், இடையில் ஒரு சில ஆண்டுகள் இணக்கமற்றிருந்ததற்காக வருந்தும் ஈழத்தமிழருடனான கசப்புகளை மன்னித்து மறந்து பெருந்தன்மையோடு நடப்பது இந்தியாவின் கடன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி>புதினம்.

2 comments:

Anonymous said...

நல்லதொரு கட்டுரை வாழ்த்துக்கள்.

said...

அருமையான தொகுப்பு. என் கண்ணில் பட இவ்வளவு நாள் எடுத்ததே. எல்லாத் தமிழர்களும், விசேடமாக, இந்தியர்களும் படிக்கவேண்டியது.