17 August, 2006
முல்லைத்தீவு படுகொலை: தமிழ்நாடு சட்டப்பேரவை கண்டனம்.
நாகரிகமற்ற- காட்டுமிராண்டித்தனமான - மனிதாபிமானம் - சிறிதுமற்ற - கொடுமை நிறைந்தது இலங்கை இராணுவத்தின் முல்லைத்தீவு படுகொலை என்று தமிழ்நாடு சட்டப்பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா வான்படை நடத்திய கொடூர வான்குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஆவுடையப்பன் கண்டனத் தீர்மானத்தை வாசித்தார்.
தீர்மான விவரம்:
14.8.2006 அன்று இலங்கையில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனாதைக் குழந்தைகள் காப்பகத்தின் மீது இலங்கை இராணுவத்தினர் சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்கியதன் காரணமாக 61 மாணவிகள் உயிரிழந்தது குறித்தும் 150க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்தது குறித்தும் இப்பேரவை அதிர்ச்சியும் ஆற்றொணா துயரமும் கொள்கிறது.
மனிதநேயத்தில் தோய்ந்துள்ள எவராயினும் அவர்களால் மன்னிக்க முடியாத இந்த நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. இந்த நாகரிகமற்ற காட்டுமிராண்டித்தனமான மனிதாபிமானம் சிறிதும் அற்ற கொடுமை நிறைந்த இலங்கை இராணுவத்தின் இச்செயலை இப்பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.
நிலையான வாழ்க்கை முறைகளுக்கும் நிலைத்த பாதுகாப்புக்கும் போராடி வரும் இலங்கை வாழ் அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்து வரும் இந்தப் போர் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இலங்கை அரசை இந்திய அரசு கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் இந்தியப் பிரதமரிடம் வற்புறுத்தி இருக்கிறார்.
இலங்கை இராணுவத்தின் இக்கொடிய கொலைவெறியாட்டத்தில் உயிரிழந்த பள்ளிக் குழந்தைகளுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் இப்பேரவை தெரிவித்துக் கொள்கிறது.
மறைந்த இந்தப் பள்ளிக் குழந்தைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித்துளிகள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்தார்.
அதன் பின்னர் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்றி தங்களது அகவணக்கத்தைச் செலுத்தினர்.
நன்றி>புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
Great work by Tamil Nadu Govt. and the assembly. Their job ends with this....
Let someone in Tamil Nadu attack one of the school in TN, they will end-up with the same set of 'kandanam'...Useless politicians, and their statements.
Post a Comment