22 August, 2006
சிறிலங்காவுக்கு எதிராக தடை விதியுங்கள்.
சிறிலங்காவுக்கு எதிராக தடை விதிக்குமாறு சுவிஸ் தமிழர்கள் அந்நாட்டு அரசிடம் கோரிக்கை
"தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசின் வன்முறைகளைக் கண்டித்து சிறிலங்காவுக்கு எதிரான தடைகளை விதிக்குமாறு" சுவிஸ் வாழ் தமிழர்கள் அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஒரு மாத காலமாக சுவிசின் மாநிலங்கள் தழுவிய ரீதியாக நடைபெற்று வந்த "சாவிலும் வாழ்வோம்" கவனயீர்ப்பு போராட்டத்தின் நிறைவு நாள் நிகழ்வில் பங்கேற்ற சுவிஸ் வாழ் தமிழர்கள் அந்நாட்டு அரசிடம் இக்கோரிக்கையை விடுத்தனர்.
சுவிஸ் தமிழர் பேரவை மற்றும் சுவிஸ் தமிழ் இளையோர் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை (21.08.06) நண்பகல் சுவிஸ் நாடாளுமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான சுவிஸ் வாழ் தமிழர்கள் பங்கேற்றனர்.
சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சுவிஸ் நாட்டுப் பிரஜைகள், மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள், சுவிஸ் நாட்டின் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றனர்.
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி, பிரான்ஸ் தமிழர் மனித உரிமை அமைப்பின் செயலாளர் எஸ்.கிருபாகரன் உட்பட மதத்தலைவர்கள், இளையோர் அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளதாவது:
"எத்தனை நாடுகள் தடைகளை விதித்தாலும் அந்த தடைகள் அனைத்தையும் உடைத்துக்கொண்டு எமது விடுதலைப் போராட்டம் வெற்றியை நோக்கிச் செல்லும்.
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமையின் கீழ்தான் ஒன்று பட்டு இருக்கிறார்கள்" என்றார் அவர்.
"சில விசமிகள் செய்யும் பிரசாரங்களை கண்டு யாரும் அவநம்பிக்கை கொள்ளத்தேவையில்லை" என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி இந்நிகழ்வில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
நிகழ்வின் நிறைவில் தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் சுவிஸ் அரசிடம் கையளிக்கப்பட்டது.
அம் மனுவில் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
1. தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, தாயகம் மற்றும் தேசியத்தை அங்கீகரியுங்கள்
2. தமிழீழ விடுதலைப் புலிகளை எங்கள் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளாக அங்கீகரியுங்கள்
3. சிறிலங்கா அரசின் இனப்படுகொலையை நிறுத்துங்கள்
4. தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசின் வன்முறைகளை கண்டியுங்கள்
5. சிறிலங்கா அரசுக்கு எதிராக தடைகளை விதியுங்கள்
6. இடப்பெயர்வுக்கும் அச்சம்கொண்ட வாழ்விற்கும் முற்றுப்புள்ளி வையுங்கள்
7. சிறிலங்கா அரசின் பயங்கரவாதத்தை நிறுத்துங்கள்
8. எங்கள் தாகம் தமிழீழத் தாயகம்
9. சுவிசுக்கு ஈழத் தமிழர்களின் மனிதாபிமான அவல நிலையை போக்க காத்திரமான பாத்திரத்தை வகிக்க முன்வாருங்கள்
தமிழர் பிரச்சினைகள் தொடர்பாக சுவிஸ் கல்வி சார் சமூகத்தை அறிவூட்டும் செயற்திட்டமும், இளையோ அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டது.
இணைப்பு : newstamilnet.com
Tuesday, 22 Aug 2006 USA
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment