27 August, 2006

இந்தியாவின் கவலை.

சிறிலங்காவில் பாகிஸ்தனிய ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை குறித்து நோர்வேயிடம் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் கடந்த ஓகஸ்ட் 23 ஆம் நாளன்று நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் வெளிவிவகார அமைச்சர் கார் ஸ்டொரை இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சியாம் சரண் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது இலங்கை நிலைமைகள் குறித்தும் சிறிலங்காவில் பாகிஸ்தானிய ஆதிக்கம் அதிகரித்து வருகின்றமை தொடர்பான இந்திய புலனாய்வு அமைப்புக்களின் அறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவுக்கான புதிய பாகிஸ்தான் தூதுவராக விமானப் படையின் பிரதி தளபதி நியமிக்கப்படுவது குறித்த தனது அதிருப்தியையும் நோர்வேயிடம் இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கை போர் நிலைமைகள் குறித்து எரிக் சொல்ஹெய்ம் மற்றும் சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயருடன் சியாம் சரண் ஆலோசனை நடத்தினார். மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மூன்று நாள் போர் நிறுத்தம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்துக்கான அகதிகளின் வருகையானது தமிழ்நாட்டுத் தமிழர்களிடையே ஒரு அமைதியற்ற நிலைமையை ஏற்படுத்தியிருப்பதாகவும் நோர்வேத் தரப்பினரிடம் சியாம் சரண் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அமைதி முயற்சிகளில் தென்னிலங்கையின் ஒருமித்த கருத்து உருவாவதற்காக ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியையும் மகிந்தவின் சுதந்திரக் கட்சியையும் இணைந்து செயற்பட வைக்க வேண்டும் என்றும் இந்தியத் தரப்பில் வழமையான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள "சம்பூர்" குறித்த சிறிலங்காவின் அச்சத்தை நோர்வேத் தரப்பினர் இந்தியாவிடம் தெரிவித்துள்ளனர். சம்பூரிலிருந்து விடுதலைப் புலிகள் விலகிக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய நிலைமையில் பல்வேறு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு 3 நாள் போர் நிறுத்தத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் நோர்வேத் தரப்பினர் தெரிவித்தனர். சியாம் சரணின் நோர்வே பயணத்தின் போது ஓஸ்லோவில் தங்கியிருந்த ரணில் விக்கிரமசிங்கவும் சந்தித்துப் பேசியதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்பு நடைபெற்று வந்த நிலையில் புதுடில்லியில் இலங்கை நிலைமைகள் குறித்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரவூப் ஹக்கீம் சந்தித்துப் பேசினார். இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் அகமதுவையும் இந்திய நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களையும் ஹக்கீம் சந்தித்துப் பேசினார். நன்றி>புதினம்.

1 comments:

Anonymous said...

This is a bad news to lanka if you join with pak that will be the end for all ...