04 August, 2006
இலங்கை காவலர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் : கருணாநிதி!
கோவையில் உள்ள மத்திய கூடுதல் காவற்படை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த சிறிலங்க காவல்துறை அதிகாரிகள் அனைவரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக முதலமைச்சர் கருணாநிதி கூறினார்!
தமிழக சட்டப் பேரவையில் இன்று உயர்கல்வி மானியத்தின் மீது விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக கூறிய கருணாநிதி இத்தகவலை வெளியிட்டார்.
கோவையில் உள்ள மத்திய கூடுதல் காவற்படை பயிற்சி மையத்தில் சிறிலங்க காவல் அதிகாரிகள் 44 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூறியதை மத்திய உள்துறை செயலருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலர் கடிதம் வாயிலாக தெரிவித்திருந்ததாகவும், அதற்கு மத்திய அரசின் உள்துறை செயலர் அனுப்பிய பதில் கடிதம் இன்று வந்ததாகவும், சிறிலங்க காவல் அதிகாரிகள் அனைவரும் அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கருணாநிதி கூறினார்.
முதலமைச்சர் கருணாநிதி பேரவைக்கு இத்தகவலை தெரிவித்தவுடன், அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள், மறுமலர்ச்சி தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.
முன்னதாக, இப்பிரச்சனை குறித்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பினர் செல்வம், தமிழர்களின் உணர்விற்கு எதிராக சிறிலங்க காவலர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும், அவர்களை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இப்பிரச்சனையில் மத்திய அரசை கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூ விடுதலைச் சிறுத்தைகளும், மறுமலர்ச்சி தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேறினர்.
தமிழர்களின் உணர்வுகளை இப்பிரச்சனை எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்பதனை மத்திய அரசு புரிந்துகொண்டு நடந்துகொள்ள வேண்டும் என்று கருணாநிதி கூறினார்.
நன்றி>வெப்புலகம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment