29 August, 2006

தமிழக அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமி சாடல்.

யுத்தம் தீர்வாகாது: இந்திய வெளியுறவுச் செயலரின் கருத்துக்கு தமிழக அமைச்சர் எதிர்ப்பு இலங்கை இனப்பிரச்சனைக்கு யுத்தம் தீர்வாகாது என்று இந்திய வெளியுறவுச் செயலர் சொல்லியிருப்பது அவரது சொந்தக் கருத்து என்று தமிழக அமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளருமான ஆற்காடு நா.வீராசாமி சாடியுள்ளார். முல்லைத்தீவு செஞ்சோலை படுகொலையைக் கண்டித்து சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை தமிழர் பேரவையின் சார்பில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தலைமையில் உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியது. தமிழ்நாடு மின்துறை அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமி இந்த உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது: 23 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். அதனால் அகதிகளாக இங்கு வருகிறார்கள். சட்டமன்றத்தில் இலங்கை அரசுக்கு எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். வேதனை என்னவென்றால் செஞ்சோலையில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று இலங்கை அதிகாரி கூறியுள்ளார். அங்கு போராளிகளின் பயிற்சித் தளம்தான் இருந்தது என்று உண்மைக்குப் புறம்பாக கூறிய செய்தியும் இங்கு பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. செஞ்சோலை சம்பவத்தைக் கேள்விப்பட்ட உடன் கலைஞர் மிகவும் வேதனையடைந்தார். உடனே இந்திய அரசைத் தொடர்பு கொண்டு அதற்கு கண்டனம் தெரிவிக்கும்படியும் தமிழர்களை அழிக்கும் செயலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். செஞ்சோலைக் குழந்தைகள் படுகொலைக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஐ.நா. சபையும் கண்டனம் தெரிவித்து அதன் பிரதிநிதியை அனுப்பி அறிக்கை தருமாறும் கேட்டது. அமெரிக்காவும் தனது பிரதிநிதியை அனுப்பியுள்ளது. ஆனால் இன்னும் குண்டுகளை வீசி குழந்தைகளை அழித்து வருகிறார்கள். அதனால் அங்கிருந்து அகதிகளாக தமிழர்கள் இங்கு வருகிறார்கள். தமிழக அரசு அவர்களை நன்றாகப் பராமரித்து வருகிறது. அவர்களின் வேதனைக் கண்டு நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. அங்கிருக்கும் தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு வேண்டும். சண்டை தீர்வாகாது என்று இந்திய வெளியுறவுச் செயலர் சொல்லியிருப்பது அவரது சொந்தக் கருத்து. தற்போது இலங்கையில் தமிழ் மக்கள்- பசியால் பட்டினியால் மருந்தில்லாமல் மிகவும் துன்பப்படுகிறார்கள். அங்கு தமிழினமே அழியும் நிலையில் உள்ளது என்று கலைஞரிடத்தில் அங்கிருந்து வந்த சகோதரி ஒருவர் தெரிவித்தார். ஏற்கனவே ஒருமுறை தி.மு.க.சார்பில் உணவுப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பிய போது அந்நாட்டரசு மறுத்துவிட்டது. இந்திய அரசின் நடவடிக்கைகள் ஆறுதல் தருவதாக இல்லை. இந்திய அரசு தலையிட்டு போரை நிறுத்தி போராளிகளையும் பொதுமக்களையும் காப்பாற்ற வேண்டும். தனி ஈழம் கிடைப்பதற்குள் அங்குள்ள தமிழர்களே இருக்கமாட்டார்களோ- தமிழினமே அழிந்துவிடுமோ என்கிற அச்சம் இருக்கிறது. எனவே இந்திய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றார் ஆற்க்காடு வீராசாமி. நிகழ்வில் நடிகர் சத்யராஜ் பேசுகையில், செஞ்சோலையில் 61 சிறுமிகளைக் கொன்றுவிட்டு அதற்கு சப்பைக்கட்டு கட்டுவது மிகவும் கோழைத்தனமானது. ஈழத் தமிழர்கள் விடியலையும் சுதந்திரக் காற்றையும் விரைவில் சுவாசிப்பார்கள் என்றார். கவிஞர் வைரமுத்து பேசியதாவது: கும்பகோணம் தீ விபத்தில் மாணவிகள் எரிந்தபோது தமிழ்நாடே எழுந்து அழுதது. செஞ்சோலையில் மாணவிகள் கொல்லப்பட்டபோது அப்படி நிகழ்ந்ததா என்பதை நம் நெஞ்சைத் தொட்டுப் பார்க்க வேண்டும். விபத்துக்கு அழுகின்ற தமிழன் கொலைக்கு அழமாட்டானா? விடுதலைப் புலிகளை வெல்லவே முடியாது என்று சிங்கள இராணுவம் ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்திய அரசாங்கமே! நாங்கள் இந்தியாவின் இறைமைக்கு எதிரானவர்கள் அல்ல. தமிழ்நாடு சட்டமன்றத்திலே இறைமைக்கு உட்பட்டு கண்டனத் தீர்மானத்தை கலைஞர் நிறைவேற்றியுள்ளார் என்பது அவரது வலியை வெளிப்படுத்துகிறது. இந்திய அரசே! சிங்களவருக்கு ஆயுதம் கொடுப்பது தமிழருக்கு விரோதம். இந்தியா ஆயுதம் கொடுக்காதபோது பாகிஸ்தானிடம் சிங்களவர் ஆயுதம் வாங்குவது இந்திய இறைமைக்கு விரோதம். சிங்களவன் சூழ்ச்சிக்காரன். வங்களா விரிகுடாவிலும் கையை நீட்டி ஆயுதம் கேட்கிறான். அரபிக் கடலிலும் கையை நீட்டி ஆயுதம் கேட்கிறான். சிங்கள இராணுவத்தால் பிரபாகரனின் நிழலைக் கூட தொட முடியாது. அன்னை சோனியா காந்தி அவர்களே! நீங்கள் தியாகத்தின் உருவம். எங்கள் தமிழ் மண்ணில் உங்கள் கணவரை இழந்தீர்கள். நாங்களும் பாதிக்கப்பட்டோம். எங்கள் வீடுகள், மானம் எல்லாம் எரிக்கப்பட்டது. நீங்கள் உங்கள் கணவரை இழந்தீர்கள். ஆனால் நீங்கள் தியாகத்தின் உருவம். ஏன் தெரியுமா? உங்கள் மாமியாரை சுட்டுக் கொன்ற சீக்கிய இனத்தவரை மன்னித்து அந்த சீக்கிய இனப் பிரமுகரையே இந்திய பிரதமராக்கினீர்களே அதற்குத்தான் நீங்கள் தியாகத்தின் உருவம். பிரதமர் பதவியைத் தூக்கி எறிந்ததற்காக அல்ல. அந்த சீக்கிய இனத்தின் மீது காட்டிய கருணையை எங்கள் தமிழினத்தின் மீது காட்டக் கூடாதா? என்றார் வைரமுத்து. இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசின் திட்டக் குழுத் துணைத் தலைவர் மு.நாகநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கவிஞர்கள் அறிவுமதி, பொன்.செல்வகணபதி, மு.மேத்தா, இயக்குநர்கள் சீமான், செல்வபாரதி, குகநாதன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலக்கிய அணி பொருளாளர் கயல் தினகரன், மாநில தொண்டரணிச் செயலாளர் பொள்ளாச்சி மா.உமாபதி, வடசென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் பலராமன், தி.மு.கவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உசேன், ஜெ.அன்பழகன், பாட்டாளி மக்கள் கட்சியின் துணைத் தலைவர் சி.ஆர்.பாஸ்கரன், சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள், தியாகராய கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பெருந்தொகையான எண்ணிக்கையில் பங்கேற்றுள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்து வைக்கிறார். இதனிடையே அரக்கோணத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தலித் பெண்கள் இயக்க 8 ஆவது மாநில மாநாட்டில் சிறிலங்கா அரசாங்கத்துக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தில், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு செஞ்சோலைப் பகுதியில் ஆதரவற்ற சிறுமிகள் மீது குண்டுகளை வீசி 55 மாணவிகளைக் கொன்றும் மேலும் 195 மாணவிகளைப் படுகாயத்திற்குள்ளாக்கிய இலங்கை இராணுவத்தினரைக் கண்டிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் தமிழ்நாடு தலித் பெண்கள் இயக்க நிர்வாகி பெர்னார்ட் பாத்திமா, தமிழ்நாடு அன்னையர் முன்னணி தலைவர் பேராசிரியர் சரசுவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காந்தி நகரில் நேற்று திங்கட்கிழமை அப்பகுதி பொதுமக்களால் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கொடும்பாவி எரியூட்டி அழிக்கப்பட்டது. இப்போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல்லில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு அக்கழகத்தின் மாநில களப்பணி ஒருங்கிணைப்பாளர் தாமரைக்கணன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு தொழிற்சங்கத்தினர் மற்றும் அனைத்துக் கட்சியினர் இப்பேரணியில் கலந்து கொண்டனர். நன்றி>புதினம்.

1 comments:

Anonymous said...

தலித் பெண்கள் அமைப்பு இதில் ஈடுபட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.