20 August, 2006
டாக்டர் ராமதாஸின் வேண்டுகோள்.
பசி-பட்டினியால் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய மத்திய அரசு விமானம் மூலம் உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
"இலங்கையில் சிங்கள இராணுவம் நடத்தி வரும் கடும் தாக்குதலினால் யாழ்ப்பாணத் தீபகற்பம் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கி தவித்து கொண்டிருக்கிறார்கள். அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு அவர்களில் பெரும்பாலானோர் பசி பட்டினியால் மடிந்து கொண்டிருப்பதாக செய்திகள் வருகிறது. இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு ஓடோடி வரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் பணக்கார நாடுகளும் யாழ்பாணத் தமிழர்களை பட்டினி சாவில் இருந்து மீட்க முன் வர வேண்டும்.
"இந்த சூழ்நிலையில் இந்தியாவில் இருந்து அத்தியாவசிய உணவுப்பொருட்கள் கப்பல்களில் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக கொழும்பு நகரில் அந்நாட்டு பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் இது பற்றி இந்திய அரசிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.
"இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவ முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இந்தியா அனுப்புகிற உதவி பொருட்களை உண்மையிலேயே பசி-பட்டினியால் வாடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு சென்றடையுமா? அல்லது அங்கே சிக்கித் தவித்து கொண்டிருக்கிற பல்லாயிரக்கணக்கான சிங்கள இராணுவத்துக்கு பயன்படுமா? என்பது தெரியவில்லை. எனவே இந்தியா அனுப்பும் உதவிப்பொருள்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த அதிகாரிகளின் மேற்பார்வையிலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும். அல்லது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆட்சிக்காலத்தில் விமானம் மூலம் உணவுப்பொருட்கள் யாழ்பாணத்தில் விநியோகிப்பட்டதை போல் இப்போதும் செய்யப்பட வேண்டும். அப்போது தான் இந்தியாவின் மனிதாபிமான உதவி தமிழர்களை சென்றடையும்" என்றார் மருத்துவர் இராமதாஸ்.
நன்றி>புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment