23 August, 2006

எம்மை சுதந்திரமாக செல்ல விடுங்கள்.

எமது மக்களை பாதுகாக்க முடியாவிட்டால் எம்மைச் சுதந்திரமாக செல்லவிடுங்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். திருகோணமலை துறைமுகத்திற்கு சம்பூரால் ஆபத்து என்ற சிறிலங்கா அரச தலைவரின் கூற்றை ஏற்கமுடியாது. திருகோணமலை துறைமுகத்தை பாதுகாப்பதில் ஏனையவர்களை விட தமிழர்களுக்கே அதிக அக்கறை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு-கிழக்கு நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: அரசாங்கத்தால் வடக்கு-கிழக்கு மக்களை பாதுகாக்க முடியாவிட்டால் கூறிவிடுங்கள். எங்களை தனியாக செல்ல இடமளியுங்கள். அதனைவிடுத்து தமிழ்மக்களைப் பற்றி அவமானமாக பேசுவதனை நிறுத்துங்கள். ஜே.வி.பியின் விமல் வீரவன்ச மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் எல்லாவெல மேதானந்த தேரர் ஆகியோர் மிகவும் அவமானமாகப் பேசினர். தற்போது வடக்கு-கிழக்கில் பாரிய மனித நேயப் பிரச்சனை இருக்கின்றது. பொதுமக்கள் தொடர்ந்து கொல்லப்படுகின்றனர். விமானத்தாக்குதல்கள் மற்றும் ஆட்டிலெறித் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. தனிநபர்களும் கொல்லப்படுகின்றனர். தமிழ் அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் ஆகியோரும் கொல்லப்படுகின்றனர். தமிழ் மக்கள் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கின்றனர் என்பதற்காக அவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. இது என்ன நியாயம்? முல்லைத்தீவில் மாணவிகள் கிபீh தாக்குதல் மூலம் கொல்லப்பட்டனர். இது என்ன நியாயம்? சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவா ஒப்பந்தத்தை மீறிச் செயற்படுகின்றது. யுத்தத்தின் போது அப்பாவி மக்கள் கொலை செய்யப்படக்கூடாது. இவ்விடயம் தொடர்பாக ஐ.நா. இணைத்தலைமை நாடுகள் மற்றும் இந்தியா என்பன கரிசணையுடன் செயற்பட வேண்டும். அரசாங்கம் சர்வதேச மனித உரிமைகளை மீறி வருகின்றது. சர்வதேச சமூகம் புலிகளை மட்டுமே விமர்சிக்கின்றது. விமானக் குண்டுவீச்சுக்களை மேற்கொண்டவாறு அரச தரப்பும் யுத்தத்தில் ஈடுபடுவதனையும் சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்க முடியாது. எதிர்த்தாக்குதல்களை மட்டுமே மேற்கொள்வதாக அரசாங்கம் கூறவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அண்மையில் அரசசார்பற்ற நிறுவனமொன்றின் 17 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். அந்த இடத்திற்கு கண்காணிப்புக்குழுவினரும் ஊடகவியலாளர்களும் செல்வதற்கு ஏன் அனுமதிக்கப்படவில்லை. இது தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொள்வதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியுள்ளார். இது வெறும் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது. அவுஸ்திரேலியா அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை விடுகின்றோம். அரசசார்பற்ற நிறுவன ஊழியர்களின் கொலை தொடர்பாக உண்மையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அக்கோரிக்கையாகும். சம்பூர் தமிழ் மக்களின் தாயகப் பிரதேசமாகும். சம்பூரில் புலிகள் இருக்கின்றனர் என்பதற்காக அங்கு விமானத் தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடாது. ஜே.வி.பி.யினரே வழி நடத்துகின்றனர். ஜே.வி.பி. உறுப்பினர்களே இன்று அரசாங்கத்தை வழிநடத்துவதாகத் தெரிகின்றது. ஜே.வி.பி.யினருக்கு திருகோணமலையில் எந்தவிதமான மக்கள் செல்வாக்கும் இல்லை. எனவே ஜே.வி.பி.யினர் தமது நிலைப்பாட்டுக்கு மேல் அதிகாரம் செலுத்த முற்படக்கூடாது. ஆதாரம்: வீரகேசரி.

0 comments: