19 August, 2006

தவறென்றால் அந்ததவறை தொடர்ந்து செய்வோம்: கருணாநிதி

முல்லைத்தீவு படுகொலையைக் கண்டிக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தீர்மானம் தவறு என்றால் தமிழன் கொல்லப்படுவதை இன்னொரு தமிழன் கண்டிப்பது தவறு என்றால் அந்த தவறை தமிழன் தொடர்ந்து செய்வான் என்று தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் இன்று சனிக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் ம.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் கண்ணப்பன் ஒரு பிரச்சனையை எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 14 ஆம் திகதி இலங்கை இராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது குறித்து இரங்கல் தீர்மானம் 16 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து பத்திரிகையில் ஒரு செய்தி வந்துள்ளது. யூகத்தின் அடிப்படையிலும், திரித்து கூறப்பட்ட செய்தியின் அடிப்படை யிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டதாக விஷமத்தனமாக இலங்கை துணை தூதரக அதிகாரி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் புஷ்ஷின் சிறப்பு தூதர் இலங்கைக்கு சென்று அந்நாட்டின் அதிபரை 2 மணி நேரம் சந்தித்து பேசியிருக்கிறார். பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் ஏராளமான ஆயுதங்களை இலங்கை அரசுக்கு வழங்கியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. இலங்கையிலேயே தங்கி, அதற்கு உதவுவதாகவும் கூறப்படுகிறது. திருகோணமலையை இந்துமாக் கடலின் வழியாக்கி, அதில் காலூன்ற முன்பு அமெரிக்க முயற்சி செய்த போது, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கடும் எச்சரிக்கை செய்ததால் அமெரிக்காவின் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் அங்கு காலூன்ற அமெரிக்கா தொடங்கியுள்ளது. இந்தியாவின் பூகோள நலன்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக 1983 ஆம் ஆண்டு இலங்கையில் இனக்கலவரம் நடந்த போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த நரசிம்மராவையும், செயலாளராக இருந்த ஜி. பார்த்தசாரதியையும் இலங்கைக்கு அனுப்பி இந்திரா காந்தி எச்சரிக்கை செய்தார். அதனால் இனக்கலவரம் முடிவுக்கு வந்தது. ஆனால் இப்போது மத்திய அரசு இது போன்ற கண்டிப்பை இலங்கை அரசிடம் காட்டவில்லை என்பது வேதனையாக உள்ளது. மாறாக இலங்கைக்கு இராணுவ உதவி மற்றும் ரேடார் உதவி வழங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் தமிழர்களை கூண்டோடு ஒழிக்க அந்நாட்டு அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அதற்கு இந்தியா ஒருபோதும் உதவி செய்யக்கூடாது. திருகோணமலையில் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டைஏற்படுத்தி அவர்களுக்கு ஆதரவற்ற சூழ்நிலை உருவாக்கப் பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு உயிர்காக்கும் மருந்து பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை அனுப்பி பன்னாட்டு சேவை நிறுவனங்கள் மூலம் தமிழ் மக்களுக்கு விநியோகம் செய்ய மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என்றார் கண்ணப்பன். அதற்கு பதிலளித்து முதலமைச்சர் கருணாநிதி கூறியதாவது: ம.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் கண்ணப்பன் எழுப்பிய பிரச்சனை மிக முக்கியமான பிரச்சனை. இது போன்ற பிரச்சனைகளில் எந்த அளவுகோளை கொண்டு நாம் தீர்மானிப்பது, விமர்சிப்பது என்பதற்கு ஒரு நிலை உள்ளது. பொதுவாக இலங்கை பிரச்சனை, குறிப்பாக தமிழர் பிரச்சனை, வெகு சிறப்பாக ஈழத்தமிழர் பிரச்சனையை அணுகுவதற்கு 2 கால கட்டம் உள்ளது. ஒன்று ராஜீவ் காந்திக்கு முன்பு, மற்றொன்று அதற்கு பின்பு. 1989 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் மரியாதை நிமித்தம் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்து பேச டெல்லி சென்றேன். அப்போது என்னுடன் முரசொலி மாறனும் வந்திருந்தார். ராஜீவ் காந்தியை சந்தித்து 5 நிமிடம் பேசி முடித்து விட்டு சென்னை திரும்ப மாலையிலேயே விமான டிக்கெட் தயாராக இருந்தது. ஆனால் மரியாதை நிமித்தம் பேசிய பிறகு இலங்கை பிரச்சனை பற்றி ராஜீவ் என்னுடன் பேசினார். நீங்கள் முன்னின்று இந்த பிரச்சனையை தீர்த்து வையுங்கள் என்று அப்போது அவர் என்னிடம் வேண்டுகோள் விடுத்தார். அப்போது வைகோவும் எங்களுடன் (தி.மு.கவில்) இருந்தார். மாறனை அழைத்து கொண்டோ, வைகோவை அழைத்து கொண்டோ அல்லது இருவரையும் சேர்த்து அழைத்து கொண்டோ இலங்கைக்கு சென்று அங்கிருந்து வவுனியா சென்று பிரபாகரனை சந்தித்து பேசி இதற்கு தீர்வுகாண வேண்டும் என்று ராஜீவ் என்னிடம் சொன்னார். அதற்கு வேண்டிய விமானம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக அவர் தெரிவித்தார். நீங்கள் உடனடியாக சென்னைக்கு சென்று எந்த திகதியில் இலங்கைக்கு செல்கிறீர்கள் என்று பதில் அனுப்பும்படியும் பணித்தார். மறுநாள் காலை டெல்லியில் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த நட்வர்சிங்கை அனுப்பி என்னிடம் பேசச் சொன்னார். நீண்டநேரம் நட்வர்சிங் என்னிடம் இலங்கை பிரச்சனை குறித்து விவாதித்து அந்த விவரங்களை பிரதமரிடம் எடுத்து கூறியுள்ளார். பகல் 2.30 மணிக்கு மீண்டும் ராஜீவ் காந்தி என்னை அழைத்து நீங்கள் பேசிய விவரங்களை அறிந்து கொண்டேன். முன்பு கேட்டு கொண்டபடி நீங்கள் இலங்கைக்கு செல்ல ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினார். அப்போது அவர் பிரபாகரனை பெரிதும் புகழ்ந்தார். அவரது வீரத்திற்கு இணையே இல்லை என்று கூறினார். எனக்கே அப்போது ஆச்சர்யமாக இருந்தது. பேச்சை முடித்து கொண்டு நான் சென்னை திரும்பி இலங்கை செல்ல ஏற்பாடுகளை செய்ய முயன்ற போது வைகோ எனக்கு தெரியாமல் வேறு வழியில் இலங்கை சென்று விட்டார். அப்போது இலங்கைக்கு செல்வது பிரதான வழி அதுவல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த வழியாக அவர் இலங்கை சென்று விட்டார். எனவே நான் மீண்டும் டெல்லி சென்று ராஜீவிடம் வைகோ சென்ற விஷயம் குறித்து வருத்தம் தெரிவித்தேன். அப்போது மாநிலங்களவையில் இந்த பிரச்சனை எழுந்த போது பிரதமர் ராஜீவ் காந்தி, அவர் எந்த வழியில் சென்றார் என்பது முக்கியமல்ல. அவர் பத்திரமாக திரும்பினாலே போதும் என்று கூறினார். அதற்கு பிறகு என்னென்னவோ நடந்து விட்டன. அதன் பிறகு ஒருமுறை வேறு நாட்டுக்கு செல்ல சென்னை வந்த ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் தங்கியிருந்த போது என்னை அங்கு வருமாறு பணித்தார். வாக்குறுதி பற்றி நான் நடக்க முடியாத விஷயத்தை கூறி அவரிடம் வருத்தம் தெரிவித்தேன். அப்போது வைகோ விஷயத்தால் தான் இதில் தேக்கம் ஏற்பட்டது என்று நான் அவரிடம் கூறவில்லை. கவலைப்படாதீர்கள், பிரச்சனைக்கு தீர்வு காணும் நடவடிக்கையை தொடருவோம் என்று ராஜீவ் காந்தி சொன்னார். ஆனால் அது தொடர முடியாமல் போனது. அதற்குள் இலங்கையில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு தமிழீழப் போராட்டத்திற்கு ஒரு தடங்கல் உருவானது அனைவரும் அறிந்ததே. அதன் பிறகு ராஜீவ் காந்தி தமிழ் மண்ணில் இரத்தம் சிந்தவேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு பின்பு இந்திய மக்களிடையே அதுவரை இருந்து வந்த அனுதாபம், எழுச்சி, உணர்வு, வேகம் ஆகியவை எந்த அளவுக்கு மாய்ந்து போனது என நான் கூற தேவையில்லை. அதனால் தான் நான் கி.மு., கி.பி. என்பதை போல ராஜீவ் காந்திக்கு முன்பு, ராஜீவ் காந்திக்கு பின்பு என பிரித்து பார்க்க வேண்டும் என கூறினேன். இருந்தாலும் இலங்கை தமிழர்களுடன் நமக்குள்ள உறவு தொப்புள் கொடி உறவாகும். நம் இனமக்கள் கொல்லப்படுவது நமக்கு இனிப்பான விஷயமல்ல. கணைக் கொண்டு தாக்குவதைவிட மோசமான விஷயமாகும். ஆனால், சில சூழ்நிலைகள் காரணமாக இவற்றை தாங்கி கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். எனவே, இந்த அடிப்படையில் தான் பிரச்சனையை அணுக வேண்டிய நிலையுள்ளது. தமிழ் மாணவிகள் குண்டு வீசி கொல்லப்பட்டது குறித்து இந்த சட்டசபையில் அனுதாப தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இன ஒற்றுமை விஷயத்தில் தமிழர்கள் ஒன்றுபடுவார்கள் என்பதற்கு அது ஒன்றே சான்றாகும். இது தவறான தீர்மான என்பது போல் இன்றைய பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழன் கொல்லப்படுவதை இன்னொரு தமிழன் கண்டிப்பது தவறு என்றால் அந்த தவறை தமிழன் தொடர்ந்து செய்வான். எனவே இது தவறான தீர்மானம் அல்ல. குண்டு வீசப்பட்டது குழந்தைகள் காப்பகம் மீது அல்ல அது பயிற்சி முகாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்த புகைப்படங்களை பார்க்கும் போது கொல்லப்பட்டவர்கள் இளம்சிறார்கள் என்பது புரியும். பத்திரிகையில் வெளியான சமாதான அறிக்கையில் கூட இலங்கை அரசின் கவனத்தை கவர கொண்டு வரப்பட்ட தீர்மானம் என்று கூறப்பட்டுள்ளது. ஆம், கவனத்தை கவருவதற்காக கொண்டு வரப்பட்ட தீர்மானம் தான். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் இறந்த குழந்தைகள் பிழைத்து விடப்போவதில்லை. நடந்த கொடுமையை கண்டிக்கிறோம். அதேசமயம் இதை வேடிக்கை பார்க்க கூடாது என்பதை சுட்டிக்காட்டுவதே எந்த தீர்மானத்தின் நோக்கமாகும். எனவே இந்த விஷயத்தில் மேல் நடவடிக்கை எடுப்பதை மத்திய அரசுக்கு விட்டு, விட்டு அவர்கள் இதை கவனிப் பார்க்கள் என்ற அளவோடு இந்த விஷயத்தை முடிக்கலாம் என கருதுகிறேன் என்றார் அவர். நன்றி>புதினம்.

0 comments: