24 August, 2006

கண்காணிப்பு தலைவரின் கருத்துக்களால் அரசுகொதிப்பு.

சர்வதேச போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தற்போதைய தலைவர் உல்ஃப் ஹென்றிக்சன், கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட 17 அரசசார்பற்ற நிறுவன ஊழியர்கள் குறித்த விசாரணைகளை, சிறிலங்கா அரசு திட்டமிட்டே குழப்பி வருவதாக வெளியிட்ட கருத்தால், அரச உயர்மட்டம் கொதிப்படைந்துள்ளது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலான உல்ப் ஹென்றிக்சன், கடந்த வார இறுதியில், ரொய்ட்டர்ஸ் சர்வதேச செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வியில், மனிதாபிமான செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் சர்வதேச மனிதஉரிமை அமைப்பொன்றின் ஊழியர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட விடயத்தில், கண்காணிப்புக் குழுவினர் விசாரணைகளை மேற்கொள்ள எத்தனித்தபோது, சிறிலங்கா அரச பக்கத்திலிருந்து திட்டமிட்டே தடைகள் போடப்பட்டதுடன், வேண்டும் என்றே பல்வேறு குழப்பங்களும் உருவாக்கப்பட்டன என்று தெரிவித்திருந்தார். வேண்டுமென்றே தடைகளைப் போடுகிறார்கள் என்றால், எதையோ மறைக்க முயற்சிக்கிறார்கள் என்றுதான் அர்த்தம் என்று தெரிவித்த ஹென்றிக்சன், விடுதலைப் புலிகள்தான் செய்தார்கள் என்று குற்றம் சுமத்திய அரசு, ஏன் கண்காணிப்பாளர்களின் விசாரணைகளைத் திட்டமிட்டே தடுக்க வேண்டும் என்றும் கேள்வியெழுப்பினார். உண்மைகள் வெளியே வந்துவிடும் என்று சிறிலங்கா அரசு பயப்படுவதாகவே தான் கருதுவதாகவும் மேலும் விளக்கியிருந்தார். இந்த கருத்துக்களால் கொதிப்படைந்த சிறிலங்கா அரசு, கண்காணிப்புக் குழுவையும், அதன் தலைவரையும் கண்டித்துள்ளது. கொழும்பு பத்திரிகையொன்றை அழைத்து, தான் விசேட பேட்டியொன்றைத் தரவிரும்புவதாகத் தெரிவித்த பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல, கண்காணிப்புக் குழுவினரின் இந்தக் குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா அரசு அடியோடு மறுப்பதாகத் தெரிவித்தார். அவர்களது விசாரணைகளைத் தொடர்வதற்கு சிறிலங்கா அரச தரப்பிலிருந்து தடைகள் போடப்பட்டு, உண்மைகளை மறைப்பதாக இருந்தால், நாம் சர்வதேச பிரதிநிதிகள் வந்து விசாரிக்கலாம் என்று அழைப்பு விடுத்திருக்க மாட்டோம் என்று தெரிவித்த ரம்புக்வெல, அவுஸ்திரேலிய விசேட பிரேத பரிசோதகர்களை, சிறிலங்காவுக்கு வந்து இது விடயமாக ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அழைத்திருக்காது என்றும் விளக்கினார். தருணத்திற்குத் தருணம், கண்காணிப்புக் குழுவினர், சிறிலங்கா அரசிற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவது தமக்கு ஆச்சரியம் தருகிறது என்றும் ரம்புக்வெல கூறினார். எனினும், அவுஸ்திரேலிய பிரேத பரிசோதகர்கள் வருவதற்கு அழைப்பு விடுத்த சிறிலங்கா அரசு, ஏற்கனவே இலங்கையிலுள்ள கண்காணிப்புக் குழுவினரை, விசாரணைகளை மேற்கொள்ள ஏன் அனுமதிக்கவில்லை என்பதற்கு, ரம்புக்வெல விளக்கமெதனையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி>புதினம்.

0 comments: