24 August, 2006
ஐரோப்பியத் தடையே தற்போதைய சூழ்நிலைக்கு காரணம்.
தற்போது நிலவும் மோசமான சூழ்நிலைக்கு, தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் பிரகடனம் செய்தமையே காரணம் என, கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இன்று AFP செய்திச் சேவைக்கு செவ்வி வழங்கியிருக்கும் கண்காணிப்புக் குழுவின் ஓய்வு பெறும் தலைவர் உல்வ் ஹென்றிக்ஸன், தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்த பின்னர் ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்து, எழுத்து மூலம் விடுக்கப்பட்ட எச்சரிக்கையை உரிய முறையில் கவனத்தில் கொள்ளாது, பெரும் தவறை ஐரோப்பிய ஒன்றியம் இழைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கண்காணிப்புக் குழு தலைவர் கருத்துரைக்கையில்:
தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்வதால் ஏற்படக் கூடிய ஏழு வகையான மோசமான விளைவுகளை எதிர்வுகூறி, தடை அமுலுக்கு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் நாம் சுற்றிக்கை ஒன்றை அனுப்பியிருந்தோம். தற்போது நாம் எதிர்வுகூறிய சகல மோசமான விளைவுகளும் நிகழ்ந்தேறிவிட்டன.
இவ்வாறான நிலையில் தடைக்குப் பின்னர் ஏற்பட்ட விளைவுகளை அறிந்திருக்கவில்லை என்றோ அன்றி, அது குறித்த சமிக்ஞைகள் கிடைக்கவில்லை என்றோ ஐரோப்பிய ஒன்றியம் கூற முடியாது. நாம் அனுப்பிய சுற்றறிக்கை சரியான முறையில் கவனத்திற்கு கொள்ளப்படவில்லை என்றே நான் கருதுகின்றேன்.
இது (Brussels) பிறசல்ஸில் மிகவும் உயர்ந்த மட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவாகவே உணரப்படுகின்றது.என்னைப் பொறுத்த வரை, தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்ததன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் தவறிழைத்துள்ளது. போர்நிறுத்த உடன்படிக்கையில் சம தரப்பினராக தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறீலங்கா அரசாங்கமும் கைச்சாத்திட்ட நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட தடை ஒரு தவறான முடிவாகும். ஒரு தரப்பினர் திடீரென
பயங்கரவாதப் பட்டியலில் இணைக்கப்படும் போது, இலகுவான முறையில் நெருக்கடிகள் தோன்றிவிடும். அந்த நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்குப் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளை
நினைத்த மாத்திரத்தில் கையாள முடியும் என சிறீலங்கா அரசாங்கம் கருதியது.
யுத்தத்திற்கு பதிலாக சமாதானத்தை முன்னெடுப்பதில் சரியான முடிவுகளை எடுக்கக் கூடிய பொறுப்பு வாய்ந்த அரசாங்கமாக, சிறீலங்கா அரசாங்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் தவறாக எடைபோட்டது.||இவ்வாறு குறிப்பிட்டிருக்கும் கண்காணிப்புக் குழுவின் ஓய்வு பெறும் தலைவர் உல்வ் ஹென்றிக்ஸன், யுத்தத்தின் மூலம் நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியாது என்பதற்கு, அண்மையில் நிகழ்ந்த சமர்கள் சான்று பகர்வதாக சுட்டிக் காட்டியுள்ளார்.
நன்றி>புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment