01 August, 2006

ஆட்லறித் தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ள சிறிலங்கா.

வடக்கு-கிழக்குப் போரரங்கிற்கான பிரதான போக்குவரத்து மற்றும் விநியோகத் தளமாகவும் திருமலைப் பிரதேசத்திற்கான பாதுகாப்பிற்கான இதய நாடியாகவும் விளங்கிய திருமலைக் கடற்படைத் தளத்தின் மீதான ஆட்டிலறித் தாக்குதல் சிறிலங்காப் படைத்தரப்பை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வடக்கு - கிழக்கில் அமைந்துள்ள கடற்படைத் தளங்களிலேயே மிகப் பெரியதும், திருமலை துறைமுகத்தை அண்டியிருந்ததுமான இத் தளமானது இவ் ஆட்டிலறித் தாக்குதலின் காரணமான இயங்காததன்மையை அடைந்துள்ளதே இதற்கான காரணமாகும். இத் தளத்திலிருந்த கடற்படையினர் மற்றும் கடற்கலங்கள் என்பன தற்போது சீனன்குடாத் துறைமுகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. சீனன்குடா ஒருவகையில் உயர்பாதுகாப்பு வலையத்தை ஒத்த பிரதேசமாகவே இதுவரை இருந்து வந்தது. சீனன்குடா விமானத்தளம் விமானப் படையினரின் பாவனையில் தொடர்ந்து இருந்து வருகின்ற போதும், சீனன்குடாத் துறைமுகமானது இதுவரை பிறீமா மா ஆலையின் தேவைகளிற்கே பெரிதும் பாவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடற்படையினர் தற்போது அங்கு மாற்றப்பட்டுள்ள போதும் அவர்களின் தொடர் இருப்புத் தொடர்பான கேள்வியே படை உயர் வட்டத்தை ஆட்டங்காண வைத்துள்ளது. குறிப்பாக, நெடுந்தூரம் சென்று தாக்கும் 120 மில்லிமீற்றர் ஆட்டிலறிகளின் பாவனைக்கு திருமலைத் துறைமுகம் உட்படும் என்ற எண்ணக்கருவே அற்றவர்களாகவே படைத்தரப்பு இருந்துள்ளனர். குறிப்பாக புலிகள் 80 மில்லிமீற்றர் மோட்டார்கள் போன்ற குறுந்தூர ஆயுதங்களின் மூலமே தாக்குதல்களை திருக்கோணமலையில் மேற்கொள்வார்கள் என்றே அவர்கள் கருதியிருந்தனர். இந்நிலையில் தளம் மீதான இத் தாக்குதலின் மூலம் கடற்படையினரை தளத்திலிருந்து வெளியேற்றுமளவிற்கான வெற்றியைப் புலிகள் பெற்றுக் கொண்டதோடு, 120 மில்லிமீற்றர் ஆட்டிலறியின் பிரசன்னம் கிழக்கிலும் இருப்பதை முதற்தடவையாக உறுதி செய்துள்ளனர். பெரும்பாலும் பார ஊர்திகளின் துணையுடன் நகர்த்தப்படும் இந்தவகையான ஆட்டிலறிகளை திருமலையிலுள்ள விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிற்குள் கொண்டுவருவதற்கான வாய்ப்புக்கள் ஏதுமேயில்லை என்றே கருதியிருந்த படை உயர்தரப்பு எவ்வாறு விடுதலைப்புலிகள் இத்தகைய ஆட்டிலறிகளை திருமலைக்கு நகர்த்தினர் என்பதைக் கண்டறிய முடியாமல் தற்போது திணறுகிறது. நன்றி>புதினம்.

0 comments: