18 August, 2006

யாழில் பட்டினிச்சாவு அவலம்: 5 இலட்சம் தமிழர்கள்.

சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதலால் தமிழ் மக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மனிதக்கேடயங்களாக குடியிருப்புக்களுக்குள்ளேயே சிறைவைக்கப்பட்டுள்ள சுமார் ஐந்து லட்சம் குடாநாட்டு மக்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. களமுனை தகவல்கள் ஒரு வித மர்மம் நிறைந்த பீதியை கிளப்பிக்கொண்டிருக்க மறுமுனையில் ஊரடங்கு உத்தரவு நேரங்களில் நடைபெறும் அப்பாவி பொதுமக்களின் படுகொலைகள் இரத்தத்தை உறைய வைக்க- இன்னொரு புறம் அங்கு பட்டினி நிலை தலைதூக்கலாம் என்ற அபாய அறிவிப்பானது அசரீரியாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டம் தற்போது நான்கு மணித்தியாலங்கள் வரை தளர்த்தப்பட்டது. வலிகாமம், தீவகம் பகுதிகளில் முற்பகல் 10 மணி தொடக்கம் பிற்பகல் ஒரு மணிவரையிலும் வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளில் நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 3 மணி வரையிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் வீதிக்கு வந்த பொதுமக்கள் கடைகளில் முண்டியடித்துக்கொண்டு பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்;களை வாங்கிகொண்டு மீண்டும் தமது வீடுகளை நோக்கி விரைகின்றனர் மக்கள். அந்த மூன்று மணித்தியாலங்களில் பிரதான வீதிகளில் பயங்கர மக்கள் நெருக்கடி. அச்சமயம் அனைத்து வீதிகளிலும் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டு வெளியில் வரும் மக்கள் அவதானிக்கப்படுகின்றனர். சிறையில் கண்காணிக்கப்படுவது போல் நடத்தப்படுகின்றனர். ஊரடங்குச் சட்டத்தால் குடாநாட்டில் சகல தொழில் நடவடிக்கைகளும் முடங்கியுள்ளன. குறிப்பாகக் கிராமப் புறங்களில் அன்றாடம் தொழில் செய்து பிழைப்பு நடத்தும் ஏழைத் தொழிலாளர்கள் சுமார் ஒரு வாரமாகத் தொழில் வாய்ப்புகள் அற்ற நிலையில் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் அவர்களும், அவர்களது குடும்பங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடற்கரையோரங்களை அண்டி வாழும் கடற்றொழிலாளர்களும் தொழிலுக்குச் செல்வதில்லை. அவர்களது குடும்பங்களும் பெரிதும் துன்பங்களை அனுபவிக்கின்றன. குடாநாட்டின் பல இடங்களிலும் விவசாயப் பயிர்ச் செய்கை பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு அமுலில் இருப்பதால் விவசாயிகள் எவரும் தமது வயல்களுக்கு செல்ல வாய்ப்புக் குறைந்துள்ளது. நீர் பாய்ச்சவும் எவருமில்லை. மரக்கறிப் பயிர்கள் என்பன நீரின்றிக் கருகி வருகின்றன. தோட்டங்கள் எங்கும் பயிர்கள் வாடிப் போய்க் காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக அன்றாட உணவுத் தேவைகளுக்கே மரக்கறி வகைகளைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்துகளும் முற்றாகத் தடைப்பட்டிருப்பதால் அவசர நோயாளர்களைக் கூட மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது. இது இவ்வாறிருக்க பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக அத்தியாவசிய பொருட்களை பதுக்கும் நடவடிக்கைகளிலும் விசமிகள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்ததை அடுத்து பதுக்கல்- அபரிமிதமான விலை உயர்வு என்பவற்றைத் தவிர்த்து உணவுப்பொருள்களையும் மற்றும் அத்தியாவசியப் பொருட்களையும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விநியோகம் செய்யுமாறு யாழ். அரச அதிபர் க.கணேஸ் சம்பந்தப்பட்டவர்களிடம் கோரியுள்ளார். இது விடயமாக பல.நோ.கூ.சங்கங்கள் மற்றும் அனைத்து தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கும் யாழ். அரச அதிபர் க.கணேஸ் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். குடாநாட்டிலுள்ள பிரதேச செயலர்கள், உதவி அரச அதிபர்கள் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் ஆகியோருக்கும் இது தொடர்பாக அரச அதிபரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பல துன்பங்களை எதிர்நோக்கும் சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரும் மிகுந்த பொறுப்புணர்வுடனும், நேர்மையுடனும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக முன்னின்று உழைக்கவேண்டும் என்றும் கையிருப்பில் உள்ள உணவுப் பொருட்களை சீரான முறையிலும், நீதியான விலையிலும் விற்பனை செய்வதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்றும் ப.நோ.கூட்டுறவுச் சங்க நிர்வாகத்துக்குப் பொறுப்பான அனைவரும் தமது விற்பனை நிலையங்களை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நேரங்களில் இயங்குவதனை உறுதிப்படுத்துமாறும அரச அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை குடாநாட்டில் வணிகர்களிடம் ஒருவாரத்துக்குப் போதுமான உணவுப் பொருட்களே கைவசம் உள்ளதாக என்று யாழ். வணிகர் கழகம் தெரிவித்துள்ளது. யாழ். அரச அதிபர் கே.கணேஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட யாழ். வணிகர் கழகப் பிரதிநிதிகள், யாழ்ப்பாணம், நல்லூர், அனலைதீவு ப.நோ.கூ.சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் "கொழும்பில் இருந்து பொருட்;கள் ஏற்றிவந்த 60 லொறிகள் முகமாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன" என்றும் "அவற்றை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவர ஏற்பாடு செய்யும்";படியும் கோரிக்கை விடுத்தனர். அரிசி, மா, சீனி ஆகிய அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதுடன் குடாநாட்டுக்கான மின்சாரம் தொடர்ந்து தடைப்பட்டுள்ள இந்நிலையில் எரிபொருட்களும் தற்போது முற்றாக தீர்ந்து வருவதாக களஞ்சிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேங்காய் ஒன்றின் விலை 50 ருபாவிலிருந்து 250 ருபாவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பச்சை மிளகாய் 50 ருபாவுக்கு விற்கப்படுகிறது. குடாநாட்டுக்கான தொலைத்தொடர்பு சேவைகளும் கிட்டத்தட்ட முற்றாகவே செயலிழந்த நிலையாகவே காணப்படுகிறது. செல்லிடப்பேசி மற்றும் வயர்லெஸ் தொலைபேசி சேவைகள் முற்றாக செயலிழந்துள்ள நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சிறிலங்கா ரெலிக்கொம் தனது சேவையை வழங்கி வருகிறது. இதனால் வீடுகளில் தொலைபேசி வசதி உடையவர்கள் சிலர் இதனையே சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெளிவான அழைப்புக்களை வெளி இடங்களுக்கு மேற்கொள்ளக்கூடிய தொலைபேசி வசதி கொண்டவர்கள் வெளி அழைப்புக்களுக்கு 10 ருபாவும் உள்வரும் அழைப்புக்களுக்கு 8 ருபாவும் அறவிட்டு தமது "இடைக்கால தொழிலாக" அதை "செழிப்புறச்செய்வதில்" தீவிரமாக உள்ளனர் என்று மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது இவ்வாறிருக்க, யாழ். மாவட்டத்திலிருந்து வெளியிடங்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை உடனடியாகச் செய்வதற்கான வசதிகள் தற்போது இல்லை என்று யாழ். மாவட்ட அரச அதிபர் க.கணேஸ் அறிவித்துள்ளார். முகமாலையில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென தொடங்கிய மோதலோடு வடக்கிற்கான போக்குவரத்துப் பாதைகள் மூடப்பட்டதால், ஏற்கனவே தமது தேவைகளுக்காக வேறு பகுதிகளுக்குச் சென்றவர்கள் தத்தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் பெரிதும் இடர்படுகின்றனர். குறிப்பாக வன்னி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும், அங்கிருந்து வவுனியா, கொழும்பு போன்ற இடங்களுக்கும் தொழில் நிமித்தமாகவும், மருத்துவத் தேவைகள் மற்றும் வேறு விடயங்களுக்காகவும் சென்றவர்கள் திடீரெனப் பாதைகள் பூட்டப்பட்டதால் தத்தமது பகுதிகளுக்குத் திரும்ப முடியாமல் அங்கலாய்க்கின்றனர். தமது கைக்குழந்தைகளைத் தனியாக விட்டு வந்த தாய்மார்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் சொந்த இடம் திரும்ப முடியாமல் அவதிப்படுகின்றனர். வடக்கே மாவட்டங்களுக்கிடையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பதால் மக்கள் செய்வதறியாது அங்கும் இங்குமாக அவதிப்பட்டு நிற்கின்றனர். வன்னி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலிருந்து ஓமந்தையூடாக வேறு மாவட்டங்களுக்குச் சென்றவர்களில் சுமார் 500 பேர் தமது இடங்களுக்குத் திரும்ப அவசரமாக அனுமதி பெற்றுத் தரும்படி வவுனியா மாவட்ட அரச அதிபரிடம் விண்ணப்பித்திருக்கின்றனர் என்று வவுனியா செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஓமந்தை ஊடான போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் அனுமதிக்குமாறு வவுனியா அரச அதிபர் படை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். எனினும், பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து அனுமதி கிடைத்தால் மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதிக்க முடியும் என்று படைத்தரப்பு தெரிவித்து விட்டதாகவும் வவுனியா செயலக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடமையாற்றும் அரச அலுவலர்கள் வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியூடாகப் புலிகளின் பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன. அரச அலுவலர்கள் தமது உத்தியோக அடையாள அட்டையை சோதனைச் சாவடியில் படையினரிடம் காண்பித்து தம்மை உறுதிப்படுத்திய பின்னர் சாவடியூடாக வன்னிப் பகுதிக்குள் செல்லமுடியும் என்று மாவட்ட அரச அதிபர் எஸ்.சண்முகம் தெரிவித்தார். எனினும் புலிகள் பகுதிக்குள்ளிருந்து வவுனியாவுக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய முடியவில்லை. இப்போதைக்கு கண்டி வீதியை திறப்பதற்கும் ஊரடங்கை முற்றாக நீக்குவதற்கும் படையினர் கடைசிவரை சம்மதிக்க மாட்டார்கள். அப்படி செய்தால் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் சென்றுவிடுவர். அதன் பிறகு குடாநாட்டை கைப்பற்றுவது புலிகளுக்கு சுலபமாகிவிடும் என்ற அச்சம் படையினருக்கு உள்ளுர உண்டு. ஐந்து லட்சம் மக்களும் தொடர்ந்தும் இராணுவத்தினரின் கிடுக்குப்பிடியில் நாளாந்தம் செத்து-செத்து வாழ்வதுதான் விதி என்று அங்குள்ள மக்கள் தொலைபேசியில் கண்ணீர் மல்குகின்றனர். நன்றி>புதினம்

0 comments: