31 July, 2006

விமானத் தாக்குதல்கள், கண்காணிப்புப் பணி இடைநிறுத்தம்.

சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விமானத் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை தமது கண்காணிப்புப் பணியை இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு அறிவித்துள்ளது. விமானத் தாக்குதல்கள் மற்றும் ஏனைய படை நகர்வுகளுக்கும் தாக்குதல்களுக்கும் மத்தியில் கண்காணிப்பாளர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளமையினாலேயே இவ்வாறானதொரு முடிவை கண்காணிப்புக் குழு எடுத்துள்ளது என்று கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொஃப்பினூர் ஓமர்சன் கொழும்பு நாளேடு ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இருதரப்பிற்கும் இடையில் தாக்குதல்கள் நடைபெறும் போது அங்கு கண்காணிப்பாளர்கள் தமது பணியை முன்னெடுப்பது என்பது அவர்களுடைய உயிருக்கும் ஆபத்தானதாக அமையலாம். ஆகவே, சர்வதேச கண்காணிப்பாளர்களின் பாதுகாப்பு கருதி போர் நடக்கும் இடங்களில் குழு தனது பணியை முன்னெடுக்காது என்று அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, நேற்று ஞாயிற்றுக்கிழமை போர்நிறுத்த கண்காணிப்புக் குழு தமது கண்காணிப்புப் பணிகள் அனைத்தையும் நிறுத்தியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதேநேரம் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடான பின்லாந்து தனது கண்காணிப்பாளர்களை விடுதலைப் புலிகளின் நிபந்தனைக்கு அமைய பாதுகாப்பு காரணங்களுக்காக திருப்பி அழைத்துக் கொள்வதாக கடந்த புதன்கிழமை அறிவித்தது. அதேபோன்று இன்னொரு ஐரோப்பிய ஒன்றிய நாடான டென்மார்க் கடந்த வெள்ளிக்கிழமை, தனது கண்காணிப்பாளர்களையும் திருப்பி அழைக்கும் முடிவை குழுவின் தலைமைப்பீடத்திற்கு அறிவித்துள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் விதித்துள்ள காலக்கெடுவான செப்ரெம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் இந்த இரு நாட்டு கண்காணிப்பாளர்களும் திருப்பி அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றிய நாடான சுவீடன் இன்னமும் எந்த முடிவும் தனது வெளியேற்றம் குறித்து அறிவிக்கவில்லை. குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் சுவீடன் நாட்டைச் சேர்ந்தவராதலால் சுவீடன் அரசு தனது முடிவை வெளியிட சற்று காலதாமதமாகலாம் எனத் தெரியவருகிறது. நன்றி-புதினம்

0 comments: