11 July, 2006

ஐ.நா. அமைதிப்படையின் பிரசன்னம் மேகுலகின் இறுதி ஆயுதமா?

1990 ஆம் ஆண்டு லண்டனிலுள்ள எரித்திய விடுதலை முன்னணிப் போராளிகள் சிலரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தான பல தகவல்கள் அவர்களிடம் இருப்பது பற்றி அறிந்ததும் ஆச்சரியமடைந்தேன். இந்தியத் தலையீடு பற்றியும், ஈழ தேசிய விடுதலைப் போராட்டப் பாதையில், பல போராளிக் குழுக்கள் அதிகம் இந்தியா சார்ந்து, இருப்பது பற்றியும் அவர்களிடம் சில காத்திரமான விமர்சனங்கள் இருந்தன. எதியோப்பியாவுடன் அவர்களுக்கும் ஏற்பட்ட போரியல் அனுபவங்களை மிக ஆழமாக விபரித்தனர். அவர்களுடனான கருத்தாடல் குறித்து நினைவு கூற வேண்டிய நம் காலத்தின் தேவை கருதி சிலவற்றை உரசிப்பார்க்கலாம். ஆரம்பத்தில் எரித்திரிய தேச விடுதலைக்கு அனுசரணையாகவிருந்த ரஷ்ய தேசம், எதியோப்பியாவில், தம் நலன் சார்பான ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், தமது தேசவிடுதலை ஆதரவுப் போக்கினை மாற்றியமைத்தது. எரித்திரியா உள்ளடங்கலான முழு எதியோப்பியாவே தனது நீண்டகாலப் பிராந்திய நலனுக்கு அமைவாக இருக்குமென்கிற நோக்கோடு ரஷ்யா செயற்பட்டதன் பின்னணியிலேயே, எதியோப்பியாவிற்கான இராணுவ ரீதியிலான முழுமையான ஆதரவு அமைந்ததெனலாம். எரித்திரிய விடுதலைப் போரினைத் து}ண்டிவிடுவதன் ஊடாக எதியோப்பிய அரசினை தமது பிடிக்குள் கொண்டுவர எத்தனித்த ரஷ்ய தந்திரோபாயத்தினை தமிழீழ விடுதலைப் போரில் இந்தியாவின் அணுகுமுறையோடும் ஒப்பிடலாம். பல இயக்கங்கள் இந்தியாவின் வலைக்குள் வீழ்ந்தாலும், விடுதலைப் புலிகளைப் பணிய வைக்க இந்தியாவால் முடியவில்லை. புலிகளைப் பொறுத்தவரை, இந்தியாவின் தேசிய நலனுக்காக, ஈழ விடுதலைப் போரை அவர்கள் நடத்தவில்லை. இதேபோன்று, முன்பு ஆதரித்த சக்திகள் எதிர்மாறான நிலைப்பாட்டினை எடுக்கும்போது, எரித்திரிய போராளிகள் தமது போராட்ட முனைப்பினை தளர விடவில்லை. அங்கும் கெரில்லாப் போராட்ட வழிமுறைகளினு}டு பிரதேசங்களை மீட்பதும், இழப்பதுவுமான நிகழ்வுகள் நடந்து கொண்டுதானிருந்தன. தலைநகர் அஸ்மாராவிலுள்ள விமானப் படைத்தளங்களை எரித்திரிய விடுதலை அமைப்பினர் தாக்கி அழித்தனர். இந்நிகழ்வானது கட்டுநாயக்க விமானத்தளத் தாக்குதலை எமக்கு நினைவுபடுத்துகின்றது. 91 இல் நடந்த கடுஞ் சமரில் அஸ்மாராவில் நிலைகொண்டிருந்த ஒரு இலட்சம் படையினரும் கனரக வாகனங்களும், ஆட்டிலெறிகளும் போர் விமானங்களும் போராளிகளின் முற்றுகைக்குள்ளானது. இப்போரியல் நிகழ்வானது யாழ். மாவட்டத்திலும், திருமலை மாவட்டத்திலும் மறுபடியும் உயிர் பெறக்கூடிய நிகழ்வாக அமைய வாய்ப்பு உள்ளது. யாழ். மாவட்டமானது கடல், தரை வழி முற்றுகைக்கு ஆட்படும்போது, 45 ஆயிரம் இராணுவம், பலாலி விமானத்தளமும், காரைநகர் கடற்படைத்தளமும் இவ்வாறான அஸ்மாரா நிலைக்குத் தள்ளப்படலாம். எரித்திரிய தேச விடுதலைப் போரில் வல்லரசின் ஆதரவும், அழித்தொழிப்பும் இருந்தது. அமெரிக்க ஆதரவு சக்திகளின் 'காலநீட்சி" பேச்சுவார்த்தைகளும் நடந்தன. இறுதியில் உறுதி தளராத போராளிகளின் முன் எந்தவிதமான அச்சுறுத்தல்களும் தனிமைப்படுத்தல்களும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 'சொந்த படை பலத்திலும், மக்கள் சக்தியிலும் தளராத நம்பிக்கையுடன் இறுதிவரை உறுதியாக இருப்பதுவே போராட்ட இலக்கை நோக்கி உங்களை நகர்த்திச் செல்லுமென்பதே அந்த எரித்திரிய போராளிகள் கூறிய கருத்து. பதினாறு ஆண்டுகளின் பின்னரும் அவர்கள் பெற்ற அனுபவங்களின் பின்புல நிகழ்வுகள் எம்மண்ணில் நடந்தேறி வருவதனை கடந்தகால, நிகழ்காலச் சம்பவங்களினு}டு பார்க்கலாம். தற்போது இந்த தேசிய விடுதலைப் போராட்டம் பாரிய தரநிலை மாற்றத்தினை வேண்டி நிற்கிறது. இவ்வளவு காலமும் தமிழ்ச் சமுதாயத்தினால் உள்வாங்கப்பட்ட சகல புறநிலைச் அழுத்தங்களும் புதியதொரு பாய்ச்சலிற்கான அகம் சார்ந்த தர நிலை மாற்றத்தினை வெளித்தள்ளும் நிலைக்கு வந்துவிட்டது. சுருங்கிக் கூறினால் தமிழ் மக்களின் வாழ்வாதார உணர்வுத் தளத்தில் வெடிப்பு நிலை தோன்ற ஆரம்பித்து விட்டது. இந்நிலை குறித்த போராட்டத்தை முன்னெடுக்கும் சக்திகள் அக்கறை கொள்ள வேண்டிய காலமும் நெருங்கிவிட்டது. இந்நிலையில், சர்வதேச சமூகம் தமிழ் மக்கள் மீது கரிசனை கொள்ளவில்லையென்று அங்கலாய்ப்பதை ஒருபுறம் ஒதுக்கிவைக்க வேண்டும். இவர்களைப் பொறுத்தவரை, தமிழ் மக்கள் மீதான வன்முறைகள், படுகொலைகள் பற்றி அரசு மீது கண்டனங்களைத் தொடுத்தால், அவ்வாறான கண்டனங்கள் தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் அரசியல் ரீதியாகப் பலமடையச் செய்யுமென்கிற ஒரு காரணத்திற்காகவே அல்லைப்பிட்டி, வங்காலைக் குரூரங்களை அவை பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவத்திற்கு கொடுத்த பிரசார முக்கியத்துவத்தினை வங்காலைப் படுகொலைக்கு வழங்க சர்வதேசம் விரும்பாது இருப்பினும் தொடர்ச்சியாக இரு நாட்கள் நடந்த வன்னி, மட்டக்களப்பு பிரதேசங்கள் மீதான அரச விமானத் தாக்குதல்களைக் கண்டிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தினை, தமிழ்ச்செல்வனின் இறுதி எச்சரிக்கையால் ஏற்பட்ட பயப்பீதியே அவர்களுக்குக் கொடுத்துள்ளது. விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் கூறியதுபோல் அரசிற்கும், சர்வதேச சமூகத்திற்குமான அதிர்ச்சி வைத்தியத்தினை புலிகளின் காட்டமான அறிக்கைகளே செய்கின்றன. இருநாள் விமானக் குண்டு வீச்சின்போது, தாம் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாக புலிகள் அறிவித்துள்ளனர். இப்படியானதொரு தாக்குதல்கள் மீண்டும் தொடர்ந்தால், பதிலடி மிக மோசமாக இருக்குமெனப் புலிகள் விடுத்த எச்சரிக்கையானது அரசிற்கு கொடுக்கப்பட்ட இன்னுமொரு அதிர்ச்சி வைத்தியம். மோசமான பதிலடியாக, விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பாவிக்கப்படலாமென்கிற அச்சம் காரணமாகவே அரசு தனது தாக்குதலை நிறுத்திக் கொண்டதாக ஒரு சாராரும், புலிகளின் விமான எதிர்ப்பு நிலைகளை அறிந்து கொள்வதற்கான பரீட்சார்த்த தாக்குதல் இதுவென இன்னொரு சாராரும் கருதுவதாகத் தெரிகிறது. புலிகள் குறிப்பிட்ட மோசமான பின் விளைவுகளானது, இன்னுமொரு கட்டுநாயக்கா பாணியிலான முற்றுகைத் தாக்குதலாகவும் அமையலாம். தடைகள் அதிகரிக்கும் போதுதான் பின் விளைவுகளும் பெருக்கமடைகின்றன. மேற்குலகால் விதிக்கப்பட்ட இறுதித்தடையும் எந்தவித மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை. ஐந்து கேள்விப் பொறிக்குள் புலிகளைச் சிக்க வைக்கும் முயற்சியும் தோற்றுப் போகும். நோர்வேக்கு சாதகமான பதிலையே புலிகள் தெரிவிப்பார்கள். இரு சாராரிடமிருந்தும், பதில் கிடைத்தவுடன், மேலும் பல கேள்விகளையும், விளக்கவுரைகளையும் நோர்வே முன்வைக்கலாம். தொடர்பாடல்களின் நீட்சி கருதியும், தமது இருப்பிற்கான தேவை கருதியும் ஏதோவொரு வகையில் பேச்சுவார்த்தையை நோக்கி நோர்வே காய்களை நகர்த்தும். நோர்வேக்கு உடன்பாடான பதிலை அளிப்பதன் மூலம், மேலதிக அழுத்தங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். அதேவேளை யுத்த நிறுத்த மீறல்கள் பற்றியும் ஒட்டுப்படையின் செயற்பாடுகளை முடக்குவது பற்றியும் நோர்வே மீது அழுத்தங்களை புலிகள் சுமத்தலாம். ஆனால், நோர்வே அனுசரணையானது தொடக்கப் புள்ளியிலேயே திரும்பவும் வந்து நிற்கும், தம்மால் முடியாத காரியமென்று தெரிந்திருந்தும் மறுபடியும் முயற்சிக்கும் வேதாள நோர்வேயின் தளரா முயற்சியின் பின்னால் கால நீட்சி என்கிற தந்திரம் மட்டுமே தொங்கிக்கொண்டிருக்கிறது. இவை யாவும் சரிவராத நிலையில் இறுதிப்போர் ஆரம்பித்தால் இது தொடர்பாக மேற்குலக நாடுகள், இந்தியா போன்றவற்றின் நிலைப்பாடுகள் எவ்வாறு அமையுமென்பது குறித்தே பலர் அக்கறை கொண்டுள்ளார்கள். எளியோரைப் பிரித்தாளும், வலியோரின் தந்திரங்கள் பற்றியும், இந்தியாவானது புலிகளின் பரம எதிரி என்கிற தோற்றப்பாட்டை வலிந்து கூறியும், முழு உலகமுமே தமிழ் மக்களுக்கு எதிராக திருப்பப்பட்டு விட்டதான ஒரு மாயச் சூழலை உருவாக்கும் முயற்சியினையும் சில அறிவுஜீவிகள் தாம் விரும்பியவாறு கூறுகிறார்கள். பேச்சுவார்த்தைத் தளத்தில் தளம்பல் நிலை ஏற்படும்போது, அதிலீடுபடும் பிராந்திய நலன்சார் சக்திகள் தேடும் மாற்று வழிமுறைகளில், ஐ.நா. சபையின் படைப்பிரசன்னமும் ஒரு உத்தியாகப் பல நாடுகளில் கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஐ.நா. சபையின் அமைதிப்படைகள் உள்நுழைவதற்கான ஏது நிலையை அமைதிப் பேச்சுக்களில் ஈடுபடும் சர்வதேச சமூகம் ஏற்படுத்துமா அல்லது அதற்கான புறச்சுூழலை தாம் விரும்பாமலே அரசு உருவாக்குமாவென்பதை யுத்தத்தின் தீவிரத் தன்மையே தீர்மானிக்கும். அரசு புலிகள் மீது மேலதிக அழுத்தங்களைத் திணிக்க, ஐ.நா. அமைதிப்படையென்ற இறுதி அஸ்திரத்தினை மேற்குலகம் பிரயோகிக்கலாம். தடைகளும், வெருட்டல்களும், தனிமைப்படுத்தல்களும் செயலிழந்த நிலையில் அவர்களுக்கு இருக்கும். ஒரே ஆயுதம் இதுவாகத்தான் இருக்க முடியும். யுத்த நிறுத்தம் என்ற சொல்லைப் பயன்படுத்துவோரை தமிழ்மக்கள் கோமாளிகளாகக் கருதும் நிலையில், மறுபடியும், நோர்வேத் து}துவர் வன்னி வருகிறார், வரும்போது, பதுங்கு குழிகளை இலகுவாக வெட்டக்கூடிய நவீன இயந்திரங்களை கையோடு கொண்டு வந்தால், தமிழ் மக்கள் சற்று ஆறுதலடைவர். இவர்கள் கொண்டு வந்தது சாந்தியுமல்ல, சமாதானமுமல்ல. இருப்பினும் உறுதியான ஏகப் பிரதிநிதித்துவ தமிழ் தலைமையின் கீழ் அணிதிரள்வதே தமிழ் பேசும் மக்களிற்கான ஒரே வழி. எம்முடன் பேச வருபவர்களும், யுத்தம் புரிபவர்களும், சமாதானக் கானல் நீரை, காட்டாறு வெள்ளமாகக் காட்ட முயற்சிப்பதைக் கண்டு ஏமாறாமல் இருந்தாலே போதும். நன்றி: வீரகேசரி வார வெளியீடு (25.06.06)

0 comments: