02 July, 2006

கொலைகள் செய்வோம் மன்னிக்கமாட்டோம்.

யாழ் மருத்துவமனைப் படுகொலை. பாரதப் படைகளால் யாழ்மருத்துவமனையில் நடத்தப்பட்டது, அச்சம்பவம் பற்றி 'முறிந்த பனை'யில் எழுதப்பட்ட பத்திகளை இங்கே தருகிறோம். 'முறிந்த பனை' பற்றி அறிமுகப்படுத்தப்பட வேண்டிய தேவையில்லையென்றே நினைக்கிறேன். 'அழ வேண்டாம் சோதரி' யின்போதோ வேறு சந்தர்ப்பங்களிலோ றாஜனி திரணகம பற்றிய விவாதங்களில் தாராளமாக இந்நூல் பற்றிக் கதைக்கப்பட்டதுண்டு. இனி அந்நூல் சொல்லும் அப்படுகொலை பற்றிய பத்திகளைப் பார்ப்போம். நீளம் கருதி பகுதிகளாக இடப்படுகிறது. யாழ் நகரைத் தன்வசப்படுத்த இந்திய இராணுவம் முயற்சி செய்யும் என்று சில தினங்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஊழியர்கள் பலர் அங்கு வேலைக்குப் போகாமலேயே இருந்தனர். மற்றவர்கள் இந்திய இராணுவம் நியாயமாக நடந்துகொள்ளும் என்றெண்ணி அவசியமான பணிகளைச் செய்துகொண்டு அங்கேயே தங்கியிருந்தனர். எறிகணைத் தாக்குதலால் மிகப்பலர் காயமுற்றனர். காயமுற்றவர்கள் தொடர்ந்து மருத்துவனைக்கு வந்து கொண்டிருந்தனர். மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவியதால் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ள வசதியில்லாமலிருந்தது. எழுபதுக்கும் மேற்பட்ட சடலங்கள் ஆஸ்பத்திரியின் சவக்கிடங்கில் குவிந்து போயிருந்தன. யாழ்ப்பாணத்தின் முக்கிய பிரமுகர்கள் அரச அதிபரின் அலுவலகத்திலிருந்து இந்தியத் தூதரகத்துக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முறையிட்டதையடுத்து எறிகணைத் தாக்குதலின் தீவிரம் குறைந்துவிட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்ததால் பாதுகாப்புப் பற்றிய ஒரு பிழையான உணர்வு மக்கள் மத்தியில் வியாபித்திருந்தது. அவர்கள் அக்டோபர் 13 ஆம் திகதி எறிகணைத்தாக்குதலும் வான்வழிக் குண்டுவீச்சும் நடைபெறுவது குறித்துத் தொலைபேசியில் முறைப்பாடு செய்திருந்தனர். ஆனால் அப்பாவி மக்களுக்குப் பெருஞ்சேதத்தை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய தாக்குதல்கள் பற்றி தங்களுக்கு ஏதும் தெரியாதென்று இந்தியத் தூதரகம் மறுத்ததாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. அக்டோபர் 21 ஆம் திகதி - தீபாவளி தினத்தன்று காலை 11.00 மணியளவில் யாழ் மருத்துவனையின் சுற்றுப் பகுதிகள் அனைத்தும் கோட்டை இராணுவ முகாமிலிருந்தும் ஹெலிகொப்டர்களிலிருந்தும் குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு இலக்கானது. காலை 11.30 மணியளவில் புறநோயாளர் சிகிச்சைக் கூடத்தின்மேல் ஓர் எறிகணை விழுந்தது. பிற்பகல் 1.00 மணியளவில் சாந்தி தியேட்டர் ஒழுங்கை முனையில் இந்தியத்துருப்புக்கள் காணப்பட்டதாக அங்கிருந்த மருத்துவ நிபுணருக்குத் தெரிவிக்கப்பட்டது. பிற்பகல் 1.30 க்கு 8 ஆம் இலக்க நோயாளர் விடுதியில் ஓர் எறிகணை விழுந்ததில 7 பேர் கொல்லப்பட்டனர். நிலவரத்தைக் கண்டறிய இன்னொரு வைத்தியருடன் வெளியில் சென்ற இம் மருத்துவ நிபுணர் 2.00 மணியளவில் ஆயுதம் தாங்கிய சில விடுதலைப்புலிகள் அங்கு நிற்பதைக் கண்டிருக்கிறார். பின் அவர் மருத்துவர் கணேசரட்ணத்தையும் அழைத்துக்கொண்டு போய் புலிகள் அங்கே நிற்பதால் ஆஸ்பத்திரிக்குள் இருப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயத்தைச் சுட்டிக்காட்டி அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிடுமாறு விடுதலைப்புலிகளைக் கேட்டுக்கொண்டார். அங்கிருந்த புலித்தலைவன் அதை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து குழுவினரோடு வெளியேறிவிட்டான். சற்று நேரத்தின் பின் வேறொரு புலிகளின் கோஸ்டி அவ்விடத்துக்கு வந்தது. அவர்களிடமும் நிலைமையை விளக்கிய பின் அவர்களும் அங்கிருந்து சடுதியில் காணாமற்போயினர். பிற்பகல் 2.00 மணிக்குப்பின் அங்கு சற்று அமைதி நிலவியது. "ஆஸ்பத்திரியில் இருந்தவர்களுக்கு என்ன ஆலோசனை சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. அங்கிருந்து வெளியேறிப் போய்விடுவது பாதுகாப்பானது என்று எனக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்குமானால் அவ்வாறே சொல்லியிருப்பேன். அப்போது ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததாலும் இராணுவம் மிகக்கிட்டத்தில் இருந்ததாலும் எதையும் நிச்சயமாகச் சொல்ல முடியாதிருந்தது. எனக்குச் சரியாகப் பசித்தபடியால் வீட்டுப்போகலாம் என முடிவெடுத்தேன். என்கூட வேலை செய்யும் இன்னொரு வைத்தியருடன் பிற்பகல் 2.30 க்கு ஆஸ்பத்திரி பின்வாசல் வழியாக ஒரு பிரச்சினையுமில்லாமல் வீடுபோய்ச் சேர்ந்துவிட்டேன். பிற்பகல் 4.00 மணியளவில் ஆஸ்பத்திரி வீதியில் பெற்றோல் ஷெட் பக்கத்திலிருந்து 15, 20 நிமிடங்களுக்குத் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. ஆஸ்பத்திரிப் பக்கமிருந்து திருப்பிச் சுடும் சத்தமேதும் கேட்கவில்லை. அந்தச் சமயத்தில் எங்கள் அறிவுக்கெட்டியவரை ஆஸ்பத்திரிக்குள் எந்தப் புலிகளும் இல்லை" என்று அம்மருத்துவ நிபுணர் கூறினார். இவ்வாறுதான் யுத்தத்தால் சிதைந்து சின்னாபின்னப்படுத்தப்பட்டிருந்த வடக்கின் முதன்மையான, மிகப்பெரிய மருத்துவமனையில் - அங்கேயே தங்கிநின்று பணிபுரியும் மருத்துவர்களின் மனத்தைப் புண்ணாக்கும் துயரக்கதை ஆரம்பமானது. அவர்களில் ஒருவர் தங்களுக்கு நேர்ந்த அந்தப் பயங்கர அனுபவத்தை விபரிக்கிறார். நன்றி : முறிந்தபனை. ---------------------------------------------------------------------------- இதன்பின்தான் அந்த அதிபயங்கரக் கொடூரம் இந்தியப்படைகளால் நடத்தப்பட்டது. மருத்துவர்கள், தாதியர், நோயாளிகள் எனப் பலர் அம்மருத்துவமனையில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் இறப்பை இயன்றவரை உறுதிப்படுத்தும் அத்தனை வேலைகளும் செய்யப்பட்டன. மயிர் கூச்செறியும் அந்த அனுபவம் அடுத்த பகுதியாக வருகிறது.

12 comments:

Anonymous said...

கொலை செய்வதையே தொழிலாக கொண்டுள்ள புலிகளுக்கு, மற்ற நாடுகளைப்பற்றி பேச உரிமை இல்லை.

முதலில் அவர்கள் ஈழ்த்தில் செய்யும் அராஜகத்தை நிறுத்தட்டும்.

பின்னர் மற்றவர்கள் முதுகை சொறியலாம்!

said...

யாழ். மருத்துவமனைப் படுகொலையின் நினைவுநாள் இன்றில்லையே?

said...

வணக்கம்சிவா, இது செய்து முடிக்கப்பட்ட கொலைகள், இந்த மக்களின் உயிர்கள் உயிர்கள் இல்லையா? இதற்க்கு ஒரு மன்னிப்பு இல்லையா? கொலைகலை யார் செய்தாலும் கண்டிக்கும் நீங்கள் ஏன் இந்தியராணுவம் செய்த கொலைகளை கண்டிக்க மறுக்கிறீர்கள்.

said...

வணக்கம் கொழுவி, நிங்கள் சொன்னது சரிதான். நினைவு நாளுக்காக போடப்பட்ட கட்டுரை அல்ல, தலைப்புக்காக போடப்பட்ட கட்டுரை திருத்தம் செய்துள்ளேன் நன்றி.

said...

சிவா!
//மற்ற நாடுகளைப்பற்றி பேச உரிமை இல்லை//
ஈராக்கைப் பாற்றி பேசினார்களா?, பாலஸ்தீனத்தைப்பற்றி பேசினார்களா? ஏன் காஸ்மீரைப் பற்றிப் பேசினார்களா?
தங்களுக்கு நேர்ந்த துயரத்தையாவது தாங்களே சொல்ல உரிமை இல்லையா அவர்களுக்கு?

இந்திய அரசியலையா பேசினார்கள்? தங்கள் உறவுகளுக்கு, தங்கள் நாட்டில் இந்திய இராணுவத்தால் நடந்த கொடுரத்தின் ஆதாரத்தை, பதிவை இங்கே மீட்டிருக்கிறார் ஈழபாரதி. அவ்வளவே.

இந்திய இராணுவம் இருந்த போதும் அம்மக்களுக்கு நேர்ந்த உண்மை நிலவரங்களை மறைத்தீர்கள், வெளிஉலகிற்கு தெரியாத படி இருட்டடிப்பு செய்வதற்கான அனைத்து வழிகளையும் முயன்றீர்கள்.

அதன் பின் பல காலமாகவே தம் உண்மை நிலையை உலகுக்கு ஆதாரத்துடன் உணர்த்த வகையின்றி இருந்த ஈழத்தமிழனுக்கு இப்பதான் கொஞ்சம் வழி கிடைத்திருக்கிறது என்று சற்று மூச்சு விடுவதுதைக் கூட பொறுக்க முடியவில்லையோ?

குட்டு வெளித்துவிடும் என்ற நடுக்கமோ?

//அவர்கள் ஈழ்த்தில் செய்யும் அராஜகத்தை நிறுத்தட்டும்//
சும்மா உங்கள் வாதத்திற்கு அராஜகம் என்று ஒரு சொல்லைப் பாவித்து விட்டால் அது உண்மையாகிவிடுமோ?

அப்பிடி அராஜகம் எண்டாலும் உங்களுக்கு ஏன் அரிக்குது எண்டு விளங்கேல!

Anonymous said...

இது பதிவு ஏற்கனவே கொவியின்ர பதிவில வந்திருக்கு.
அதைத்தான் அப்பிடியே அச்சுப்பிசகாமல் இங்கயும் போட்டிருக்கு. நன்றி கூட போடேல. அப்ப கொழுவியும் ஈழபாரதியும் ஒண்டுதானோ?

Anonymous said...

உந்தக் கட்டுரை முந்தி கொழுவியின்ரையில வந்த கட்டுரை.. கண்டு பிடிச்சிட்டன் நீங்கள் தானே கொழுவி..

said...

வணக்கம் அனானிகள்,
தங்கள் தகவலுக்கு நன்றிகள்.
பாலசிங்கம் என்ரீவியில் அளித்த பேட்டிக்கு, பலவியாக்கியானங்கள், வந்து கொண்டிருக்கின்றன, பல நன்பர்கள் ஜபிகேஎப் கொலைகள் செய்ததுக்கு என்ன ஆதாரமான, தகவல்கள் இருக்கிறது என வினா தொடுத்துள்ளார்கள், அதுதான் யாழ்மருத்துவமனை படுகொலைகளையும், வல்வை படுகொலைகளையும் இங்கும் பதிவிடலாம் என்று எண்ணியுள்ளேன். இது பற்றி அனானி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

Anonymous said...

hi,
I am from Tamil Nadu. The problem here is the people dont know the facts about ealam. They simply thinking that tamils are trying to steal land from sinhalese. Most of our people are busy in watching and worrying about movies etc.. so neglect Mr.Siva's comments. He is unaware of the history and facts.

said...

வணக்கம் அனானி, முறிந்த பனைமாரம் என்பது ஒரு வரலாற்றுப்பதிவு, பலபேரின் கூட்டு முயற்சி. தெரியாதவர்களுக்கு தெரிய வைப்பதுதானே தெரிந்தவர்களுக்கு அழகு, வரலாறுகள், வரலாற்றுத்தவறுகள், இனப்படுகொலைகள், புதைந்து போகவிடக்கூடாது, முடிந்தவரை தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். யாழ்மருத்துவமனை படுகொலைகள் நான் படித்தது, வல்வை படுகொலைகள் நான் பார்த்தது, அதற்கான சாட்சி நான்.
நான்பார்ததை இந்திய சகோதரர்களுக்கு சொல்லவேண்டாமா?

சிவாவுக்கு சொல்வது, புலிகள் செய்ததுதான் கொலைகள் என்றால், இந்திய ராணுவம்செய்த 5500 கொலைகள் என்ன கொய்யாப்பழங்களா?

இது மற்றவர் முதுகை சொறியும் வேலையல்ல, மற்றவர்கள் எங்கள் முதுகை சொறிந்ததால் ஏற்பட்ட ரணம், அதை மற்றவருக்கு காட்டமுனைகிறோம்.

உண்மைதானே சொல்கிறோம், இது இட்டுக்கட்டிய கதை அல்லவே. சகோதரர்கள் கேட்பது சாட்சிகளைத்தானே.

Anonymous said...

//அதுதான் யாழ்மருத்துவமனை படுகொலைகளையும், வல்வை படுகொலைகளையும் இங்கும் பதிவிடலாம் என்று எண்ணியுள்ளேன். இது பற்றி அனானி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
//


அப்போ நீங்கள் கொழுவி இல்லை என்கிறீர்கள்.

அப்படியில்லாத பட்சத்தில், கொழுவிக்கு ஒரு நன்றி போட்டால் பிரச்சினையில்லையே?
நீங்கள் இந்தப்பதிவை நேரடியாக முறிந்தபனையிலிருந்து தட்டச்சி எடுக்கவில்லை. ஒருவர் மினக்கெட்டு தட்டச்சி அதைப்பதிவாகப் போட நீங்கள் பிரதியெடுத்துப் போடுகிறீர்கள். தற்காலத்தில் அது முக்கியமானதும் கூட. நீங்கள் பிரதியெடுத்துப் போடுவதைப் பிழையென்று சொல்லவில்லை. ஆனால் தட்டச்சியவனுக்கு ஒரு நன்றி சொல்லலாமே. இதன்மூலம் இருவரும் ஒருவர் தானா என்ற விவாதத்தையும் தவிர்க்கலாம்.

இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

said...

வணக்கம் அனானி வரவுக்கு நன்றி, நீங்கள் சொன்னமாதிரி நான்வேறு, கொழுவிவேறு. எனது ஆரம்பபதிவை பார்த்தால் உங்களுக்கு தெரியும் அவர் என்னோட கொழுவி இருப்பார். அவர் முறிந்ததபனைமரத்துக்கு நன்றி சொன்னதால் அவருக்கு நன்றி சொல்லவில்லை, அவர்தான் கஸ்ரப்பட்டு தட்டினார் என்றால் அவருக்கு நன்றி சொல்வதில் தவறிலை, சுட்டிக்காட்டியதுக்கு நன்றி.
முடிந்தவரை அனைவருக்கும் போய்சேரவேண்டும் என்பதே எமது நோக்கம், இப்பதிவுக்கு கொழுவிக்கும் நன்றி. அடுத்த பதிவுகளுக்கு பதிவுகளிளேயே நன்றி கூறுகிறேன்.