05 July, 2006
இந்திய அரசு புலிகளை ஆதரிக்க வேண்டும்.
கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் குமுதம் பத்திரிகைச் செவ்வியில்
இலங்கைத் தமிழர் பிரச்னையில், நார்வே அரசின் சமாதான முயற்சிகளில் மிக முக்கிய பங்காற்றியவர் இலங்கைத் தமிழ்க் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன். விடுதலைப்புலிகள், முஸ்லிம் தலைவர்கள், மிகவும் செல்வாக்கான சிங்கள அறிவுஜீவிகள் மற்றும் கலைஞர்களுடன் ஜெயபாலனுக்கு நெருக்கமான நட்பு உண்டு. நார்வேயிலிருக்கும் அவர் கடந்த வாரம் சென்னை வந்திருந்தபோது, அவரைச் சந்தித்தோம்.
இப்போது ஏற்பட்டிருக்கும் அறிவிக்கப்படாத போருக்கு உண்மையில் யார் காரணம்?
இலங்கை அரசாங்கம்தான். 2002இல் ஆஸ்ரோவிலும் 2006இல் ஜெனிவாவிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், உலக நாடுகளுக்கு முன்னால் சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வுக்கு இரண்டு தரப்பினரும் கையெழுத்திட்டிருக்கிறார்கள். ஆனால், இலங்கை அரசின் துணை இராணுவக் குழுக்களை கலைத்து விடுவது, உயர்பாதுகாப்பு வளையம் என்கிற பெயரில் தமிழர்களை வெளியேற்றி கைப்பற்றி வைத்திருக்கிற இடங்களில் தமிழ் மக்களை மீண்டும் குடியமர்த்துவது உட்பட அப்போது ஏற்றுக்கொண்ட எல்லாவற்றையுமே இலங்கை அரசு நிராகரித்து விட்டது.
மட்டுமல்லாமல், கருணா குழுவினர் என்கிற பெயரில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல்களையும் அதிகரித்திருக்கிறார்கள். இந்நிலையில் ஆயுதம் தாங்கிய ஒரு விடுதலை அமைப்பு, அச்சம் அடைவதும் எதிர்த்தாக்குதல்களை அதிகரிப்பதும் புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றுதான். புலிகளின் வன்முறைகளை நான் அங்கீகரிக்கவில்லை. ஆனால், இப்போது அவர்களின் எதிர்த்தாக்குதல் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்ணின் எதிர்தாக்குதல் போன்றதுதான்.
கருணா இப்போது எங்கே இருக்கிறார்?
தாய்லாந்து, மட்டகளப்பு, கொழும்பு, இந்தியா என்று பல்வேறு விதமான தகவல்கள் உலாவுகின்றன. ஆனால், புலிகளுக்கு எதிரான வன்முறைகளை வெளிப்படையாகவே அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் ஆதரவு கருணாவுக்கு இருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்கவும் சிங்களர்கள் முயற்சிக்கிறார்கள். அது உண்மையல்ல.
இப்போதுள்ள பதட்டமான சூழ்நிலைக்கு உடனடி தீர்வு என்ன?
துணை இராணுவக் குழுக்களை அரசு கலைத்து விடுவதும் விடுதலைப்புலிகள் வன்முறையைக் கைவிடுவதும் உடனே மேற்கொள்ளப்பட வேண்டும். இந்திய உளவுத்துறையினரின் ஆதரவைப் பெறலாம் என்கிற தவறான ஆலோசனையின் அடிப்படையில்தான், நிழல்யுத்தத்தை இலங்கை அரசாங்கம் தொடங்கியது. இந்திய அரசாங்கம் அப்படியான ஆதரவு கிடைக்காது என்பதை புலப்படுத்தியிருக்கிறது. எனவே இப்போதைக்கு பின்வாங்கியிருக்கிறது. எனினும் இன்னும் தெளிவாக இந்தியா தன் நிலைப்பாட்டை புலப்படுத்தும்போது, நிழல்யுத்தத்தைக் கைவிட்டுவிட்டு இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைக்குத் திரும்பும்.
நேரடியான பேச்சுவார்த்தைக்கு வரும்படி இலங்கை ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கிறாரே?
ராஜபக்சேவின் இந்த அழைப்பு தந்திரமானது. உலக நாடுகள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் துணையுடன் நார்வே மேற்கொண்டிருக்கும் சமாதானப் பேச்சுவார்த்தையை முறியடிக்கவும், முடக்கவும், இப்போது நேரடியாகப் பேசுவோம் என்கிறார் அவர்.
இந்தியா என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
விடுதலைப்புலிகளும் இந்திய அரசும் நிறைய தவறுகளை செய்துவிட்டார்கள். ராஜீவ்காந்தி கொலை மிகவும் பிரதானமான தவறு. எனினும் இரண்டு தரப்பினரும், இருவரின் எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டு, தங்கள் தவறுகளை உணர்ந்து அவற்றைக் கடந்து வரலாற்றை வெற்றிகரமான பாதையில் நகர்த்திச் செல்லவேண்டும். புலிகள் தவறு செய்திருக்கிறார்களே ஒழிய, அவர்கள் இந்தியாவின் எதிரிகள் அல்ல. முரண்பட்ட தன் மகனை அரவணைத்துக் கொள்ளும் குடும்பத் தலைவனைப் போல இந்திய அரசு புலிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கலைஞர் முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கிறீர்களா?
கலைஞர் எங்களுக்காக நிறைய செய்திருக்கிறார். குறிப்பாக அகதிகள் தொடர்பான அவரது பங்களிப்புகள் முக்கியமானவை. இலங்கை பிரச்னை காரணமாக ஆட்சியை இழந்தது மட்டுமல்லாமல், பல்வேறு நெருக்கடிகளையும் அவர் எதிர்கொண்டிருக்கிறார். இந்நிலையில் மீண்டும் பொறுப்பேற்றுள்ள அவர், இலங்கைத் தமிழர்கள் விடுதலைக்கு தன் ஆட்சிக் காலத்திலேயே வழிசெய்து கொடுப்பார் என்கிற அச்சம் சிங்களர்கள் மத்தியில் இருக்கிறது. மேலும் ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ், திருமாவளவன், புதிய தலைமுறை மார்க்சியவாதிகள் உட்பட தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் இன்று இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்திருக்கிறார்கள். இது எங்களிடையே மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
சர்வதேச உதவியில்லாமல் அகதிகள் பிரச்னையை தமிழகத்தால் மட்டும் தீர்க்க முடியாது. ஆனாலும், தங்களது பொருளாதார நிலையில் செய்யக்கூடியதை கலைஞர் அரசு செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நார்வே சமீபத்திய நிகழ்வுகளால் சோர்வடைந்திருப்பது போல் தெரிகிறது. அவர்கள் பேச்சுவார்த்தையிலி ருந்து வெளியேற வாய்ப்புள்ளதா?
நார்வே சமாதான தூதுவர் எரிக் சோல்கைம் எனக்கு மிக நெருங்கிய நண்பர். ஐரோப்பிய யூனியன் தடை காரணமாக புலிகள் எடுத்த நிலைப்பாடு, உலக நாடுகளுக்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் மீறுவது போன்றவை நார்வேயைச் சோர்வடையச் செய்துள்ளது உண்மைதான். ஆனால், அவர்கள் பேச்சு வார்த்தையிலிருந்து நிச்சயம் வெளியேற மாட்டார்கள்.
பெரிய யுத்தம் வர வாய்ப்புள்ளதா?
எதிர்த்தாக்குதலுக்கு புலிகளைத் தூண்டி அதன்முலம் பயங்கரவாதிகளாக அவர்களைக் காட்டுவதுதான், இலங்கை அரசின் நிழல்யுத்தத்துக்கான அடிப்படைக் காரணம். ஆனால், இது புலிகளுக்குத் தெரியும். எனவே அவர்கள் எதிர்த்தாக்குதலில் ஈடுபடமாட்டார்கள். நிச்சயம் பெரிய யுத்தம் வராது. யுத்தம் தொடர்பான அச்சம் எல்லோருக்கும் இருக்கிறது. யுத்தம் ஏற்பட்டால் மொத்த இலங்கையும் அழியும்.
சந்திப்பு : தளவாய் சுந்தரம்
நன்றி> குமுதம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
வணக்கம் குண்டக்க மண்டக்க உங்க எழுத்து எனக்கு விழங்கவே இல்லை, என்ன எழுத்து பாவித்திருக்கிறீர்கள், ஒரே குண்டக்கமண்டக்காவா இருக்கு.
Post a Comment