15 July, 2006
என்னைப் பற்றி வீண் புரளி: வைகோ எரிச்சல்.
என்னை விடுதலைப் புலிகள் அமைப்பினர் வந்து சந்தித்ததாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு புரளி கிளப்பியுள்ளனர் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சமீபத்தில் வைகோ கேரளாவுக்குச் சென்றிருந்தார். அங்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அவர் சென்றிருந்ததாக கூறப்பட்டது.
ஆனால் வைகோவை விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிலர் வந்து சந்தித்ததாக செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை மதிமுக மறுத்தது.
இந்த நிலையில், வைகோ அளித்துள்ள ஒரு பேட்டியில், நான் விடுதலைப் புலிகளை ரகசியமாக சந்திக்க மாட்டேன். சந்திக்க நினைத்தால் வெளிப்படையாகவே செய்வேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து வைகோ கூறுகையில், உற்சாகம், புதுப்பொலிவும் பெற, மூலிகை சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலைக்கு சென்றிருந்தேன். அப்போது என்னை விடுதலைப் புலிகள் சந்தித்தாகவும், உளவுத்துறை விசாரித்து வருவதாகவும் திட்டமிட்டே புரளி கிளப்பினர்.
இதுகுறித்து போலீஸார் என்னைப் பற்றி விசாரித்திருக்கிறார்கள். என்னிடம் வந்து போலீஸ் பாதுகாப்பு வேண்டுமா என்றார்கள். ஆனால் வேண்டாம் என்று நான் கூறி விட்டேன்.
நான் ஆண்டன் பாலசிங்கத்தைச் சந்தித்தபோது அதை வெளிப்படையாக சொன்னேன். அதேபோல, புலிகளை நான் சந்திக்க நினைத்தால் அதை வெளிப்படையாகவே செய்வேன். மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
ஈழத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சினை உள்ளது. அங்கு தமிழர்களுடைய உரிமை பறிக்கப்படுகிறது. தமிழினத்தை ஆயுதப் போராட்டம்தான் காத்து வருகிறது. அவர்களது போராட்டத்தில் நியாயம் இருக்கிறது.
அதனால் தான் புலிகளை நாங்கள் ஆதரிக்கிறோம். என் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக வீண் புரளியை சிலர் கிளப்பி விடுகிறார்கள்.
இந்த பிரச்சினை தொடர்பாக எங்களுக்கும், அதிமுகவுக்கும் இடையே எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படவில்லை. இது மகிழ்ச்சிக் கூட்டணி என்றார் வைகோ.
நன்றி>தற்ஸ்தமிழ்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment