14 July, 2006
நெடுமாறன், சுப.வீ மீதான பொடா வழக்குகளை திரும்பப் பெற்றது.
தமிழக அரசு உங்கள் ஐவர் மீதான பொடா வழக்குகளைத் திரும்பப் பெற்றிருக்கிறது. அதற்கான மனுவை உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது என்று மகிழ்ச்சியோடு கூறினார். இது தவிர வேறு எந்த ஊடகத்திலும் தொலைக்காட்சியிலும் அந்த செய்தி வரவில்லை. ஒருவேளை தமிழ்நாட்டில் இனித்தான் அந்தச் செய்தி வெளியாகும்.
ஐயா பழ. நெடுமாறன், நான், புதுகை பாவாணன், தமிழ் முழக்கம் சாகுல் ஹமீட், மருத்துவர் தாயப்பன் ஆகிய ஐவர் மீது போடப்பட்டிருந்த வழக்கைத் தமிழக அரசு திரும்பப் பெற்றுக் கொள்வதாக அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக எங்கள் வழக்குரைஞர் தெரிவித்த தகவல். அதற்குப் பிறகு வேறு சில நடைமுறைகள் இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.
ஏனென்றால் உயர்நீதிமன்றில் திரும்பப் பெற்றால் மொத்த வழக்குகளும் முடிந்து போகுமா? அடிப்படையாக எங்கள் மீது வழக்கு தொடரப்பட்ட பூவிருந்தல்லி பொடா நீதிமன்றுக்கு வந்து இன்னும் ஒரு முறை வழக்கை திரும்பப் பெற வேண்டுமா? என்பது போன்ற சட்ட நடைமுறைகள் பற்றி விரிவாகத் தெரியவில்லை. என்ன இருந்தாலும் அது நாட்களைப் பொறுத்தவரையான செய்தி. பொடா வழக்கை தமிழக அரசு திரும்பப் பெற்றுவிட்டது என்பது உறுதியாகத் தெரிந்துள்ள மகிழ்ச்சியான நேரத்தில் உங்கள் அழைப்பு கிடைத்துள்ளது.
2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் உலகம் முழுமையும் உள்ள பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தார். அந்தப் பேட்டி குறித்து தமிழக மக்களுக்கு விளக்குவதற்காக 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் நாள் தமிழ் முழக்கத்தின் சார்பில் சென்னையிலே கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டு அந்தப் பேட்டி பற்றியும் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றியும் பேசியதற்காக எங்களின் மீது பொடா வழக்கு தொடரப்பட்டது.
2002 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 1 ஆம் நாள் ஐயா பழ. நெடுமாறனும் 16 ஆம் நாள் நானும் கைது செய்யப்பட்டோம். அதே கூட்டத்தில் வரவேற்புரை நிகழ்த்தியமைக்காக மருத்துவர் தாயப்பன் ஒக்டோபர் மாதமும் ஏற்பாடுகளைச் செய்த தமிழ் முழக்கம் சாகுல் ஹமீட் 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதமும் கைது செய்யப்பட்டார்கள். ஏற்கனவே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த புதுக்கோட்டை பாவணனை இந்த வழக்கிலும் சேர்த்து 2002 ஆம் ஆண்டு யூலையிலிருந்தே பொடா வழக்கு தொடரப்பட்டது.
2003 டிசம்பரிலிருந்து ஒவ்வொருவராக பிணையில் வெளி வந்தோம். 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏறத்தாழ ஐவரும் பிணையில் வெளிவந்துவிட்டோம்.
2003 டிசம்பரில் பிணையில் வந்தேன். ஆனாலும் அய்யா நெடுமாறன் அவர்களுக்கும் எனக்கும் புதுகை பாவாணனுக்கும் சில கடுமையான முன்நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. மருத்துவர் தாயப்பனுக்கும் அது பொருந்தும்.
- நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து வெளியூருக்கு எந்த இடத்துக்குச் சென்றாலும் கியூ பிராஞ்ச்சுக்கு சொல்லாமல் செல்லக் கூடாத
- அரங்கக்கூட்டமோ பொதுக்கூட்டமோ எந்தக் கூட்டத்திலும் இலக்கியக் கூட்டமோ இரங்கல் கூட்டமோ எந்தக் கூட்டத்திலும் பேசக் கூடாத
- எந்த ஊடகத்துக்கும் பேட்டியளிக்கக் கூடாத
- எந்த ஒரு கருத்தையும் அறிக்கையாக அளிக்கக் கூடாத
இப்படி மிகக் கடுமையான நிபந்தனைகளுடன் வெளியே வந்தோம். ஆனால் தேர்தல் காலத்தில் மட்டும் அந்த நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன.
2003 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் தற்போது வரை தேர்தலின் போது பேச அனுமதிக்கப்பட்டோம். மற்ற அனைத்து நேரங்களிலும் தடை நீடித்தன.
கைது செய்யப்பட்ட நாளின் போது நான் ஊடகவியலாளர்களிடம் எனது மனநிலை என்னவாக இருக்கிறது என்று கூறியிருந்தேன். அதனை நினைவுகூர்ந்து அப்படியே கூறுகிறேன்.
"ஈழத்திலே இப்போது அமைதி ஒப்பந்தம் உருவாகியுள்ளது. அங்கு கடுமையான போர் எதுவும் நடைபெறவில்லை. இங்கும் கலவரம் ஏதும் நிகழவில்லை. ஆனாலும் வாய்மொழி ஆதரவு கொடுத்தது மிகப்பெரிய குற்றம் என்று கூறி கைது செய்திருக்கிறார்கள். பொடாவிலே அடைத்திருக்கிறார்கள். இந்தத் தமிழ்நாட்டிலே நடப்பது ஜெயலலிதாவின் ஆட்சியா? சந்திரிகாவின் ஆட்சியா? என்று எனக்குத் தெரியவில்லை. என்ன இருந்தாலும் சிறை கண்டு நாங்கள் அஞ்சவில்லை. காலமும் வரலாறும் எங்களை விடுதலை செய்யும்" என்று கூறியிருந்தேன்.
இன்று நான் சொல்லுகிறேன்...
"கலைஞரின் கனிவுமிகுந்த அரசு இன்றைக்கு பொடா வழக்கைத் திரும்பப் பெற்றுள்ளது. அடக்குமுறைகள் ஒருநாளும் வென்றதில்லை என்பதை இன்றைய நிலை எடுத்துக்காட்டுகிறது".
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ மீதான வழக்கு புதுடில்லி உச்சநீதிமன்றில் நிலுவையில் உள்ளது. பொடா மறு ஆய்வுக் குழு தொடர்பான விடயத்தில் முன்னைய தமிழ்நாடு அரசு எங்கள் ஐவர் மீது ஒரு நிலைப்பாட்டையும் வைகோ வழக்கில் வேறு ஒருநிலைப்பாட்டையும் எடுத்திருந்தது. தமிழ்நாடு உயர்நீதிமன்றில் தமிழக அரசு தொடுத்த வழக்கு என்பதால் எங்கள் மீதான வழக்கு திரும்பப்பெறப்பட்டுள்ளதாக கருதுகிறேன். வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதான வழக்கு உச்சநீதிமன்றில் உள்ளது. ஆகையால் தாமதமாகலாம் என்று கருதுகிறேன்.
இன்று உள்ள தமிழக அரசும் மத்திய அரசும் ஈழத் தமிழர் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களில் நானும் ஒருவன். ஆனால் யதார்த்தத்தில் இந்த அரசுகள் அப்படியான ஆதரவை அளிக்கின்ற என்று கூறமாட்டேன்.
குறைந்தபட்சம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆதரவாக நின்று ஈழத் தமிழ் மக்களின் படுகொலைகளுக்கு துணை போய்விடக் கூடாது என்கிற அளவிலாது ஒரு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்று கருதுகிறோம். இன்று தகவல்கள் வருகின்றன. ராடார் போன்ற கருவிகளை மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிரான எங்களின் கடுமையான கருத்துகளை பதிவு செய்து போராட்டங்களை முன்னெடுகிறோம்.
ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு மத்திய அரசு ஆதரவாக இருக்க வேண்டும் என்று தமிழர்கள் அனைவரும் கருதுகிறோம். அப்படி மத்திய அரசு நிலைப்பாடு எடுப்பதற்கான அழுத்தத்தை தமிழ்நாடு அரசு கொடுக்க வேண்டும் என்று கோருகிறோம். எங்கள் கருத்துகளை தமிழ்நாடு அரசிடம் தெரிவித்துள்ளோம்.
முழுமையாக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு வந்துவிடும் என்று நாங்கள் கருதவில்லை என்றாலும்கூட சென்ற அரசைப் போல் கடுமையாகவும் கொடுமையாகவும் ஒருநாளும் நடந்துகொள்ளாது என்று நம்புகிறோம். நம்முடைய தொடர்புகள்- உறவுகள் மூலமாக மத்திய அரசை- தமிழ்நாடு அரசை நம் ஆதரவு நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக இருக்கிறது என்றார் சுப.வீரபாண்டியன்.
நன்றி>புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment