06 July, 2006

புலம்பெயர் படைப்பாளிகளுக்கு தாயகத்தில் இருந்து அழைப்பு.

தமிழீழத் தாயகத்தின் கண்ணீரையும் துயரையும் உலகுக்குச் சொல்ல புலம்பெயர் படைப்பாளிகளே! உங்கள் படைப்புத் தளத்தை விரிவாக்கிக் கொண்டு செயற்படுங்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுத்துறைப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை அழைப்பு விடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவில் ஒலிபரப்பாகும் இன்பத் தமிழ் வானொலிக்கு அவர் அளித்த நேர்காணலில் விடுத்துள்ள வேண்டுகோள் உரையின் எழுத்து வடிவம்: உலகின் எல்லாத் தேசங்களும் இனங்களும் வெற்றி பெறுவதற்கு முன்னர் உலகம் எந்த நெருக்குவாரங்களைக் கொடுத்ததோ அந்த நெருக்குவாரங்களை எமக்கு உலகம் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறது. நெருக்குவாரங்கள் கொடுக்கப்பட்ட இனங்கள் எல்லாமே இறுதியில் வெற்றி பெற்றிருப்பது எமக்கு ஆறுதலானது. எமக்கும் அந்த நிலைமையே ஏற்படும். நாங்கள் போர்ச் சூழலுக்குள் திரும்பவும் செல்லக் கூடிய வாய்ப்புகள் இருக்கலாம். அதை எதிர்கொள்வதற்கு எங்களுடைய படைப்பாளிகள் பங்களிப்பைக் கேட்டு நிகழ்வு ஒன்றைச் செய்திருந்தோம். 1990 முதல் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை எங்களுடைய படைப்பாளிகள்தான் தர்மம்சார் எமது போராட்டத்தின் பக்கத்துணையாக இருந்து மக்களை இணைத்தவர்கள். உலகுக்குச் சொன்னவர்கள். இந்த அமைதிக்காலத்தில் நாங்கள் ஏன் கரைய வேண்டும் என்று அவர்கள் கேள்வி எழுப்ப எமது பயணத்தை மீளத் தொடங்கியுள்ளோம். மொத்தம் 150 பேர் பங்கேற்றனர். எமது போராட்டம் வேறு ஒரு வடிவம் எடுத்தது. இராஜதந்திர நகர்வுகள் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில் ஈழத் தமிழனுக்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லையாம். அழுகைதான் பரிசாம். அடங்கிப் போவதுதான் விதி என்று சிறிலங்காத் தரப்பு எச்சரிக்கை வைத்திருக்கிறது. நாங்கள் அடங்கிப் போக முடியாது. இதுவரை போராட்டத்துக்கான பணிகளைச் செய்த எமது படைப்பாளிகள் இப்போது போருக்கான பணிகளைச் செய்கிறோம். புலத்தில் இருக்கும் படைப்பாளிகளுக்குத்தான் இரட்டைச் சுமை. 1995 ஆம் ஆண்டு காலம் முதல் 2000 ஆம் ஆண்டு காலம் வரை வன்னியிலே நாங்கள் வெற்றிகளைச் சந்தித்த போதும் அது சிறையாக இருந்தோம். எமது அழுகையின் குரல் பெரிதாக வெளிவரவில்லை. எமது கண்ணீர் பெரிதாக வெளியில் தெரியவில்லை. இன்று உலகம் முழுமைக்கும் நாம் அறிந்தவரையில் 40 ஊடகங்கள் ஈழத் தமிழர்களால் நடத்தப்படுகின்றன. இதைத்தவிர பல்லாயிரக்கணக்கான படைப்பாளிகள் உள்ளனர். நாளை திரும்பவும் வன்னி என்ற வட்டத்துக்குள் அடக்கி- அடக்க முடியாது- ஒடுக்கி- ஒடுக்க முடியாது. அதற்கு எதிரான போராட்டத்தை நடத்தும் போது நாங்கள் எழுதிக் கொண்டும் பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் இருக்க முடியாது. அந்தச் சுமையை உலகம் முழுமைக்கும் பரவிய உறவுகள் கூற வேண்டும். எமது அழுகையையும் கண்ணீரையும் நீங்கள் கூற வேண்டும். எங்களுடைய அழுகையை தாயகத்தின் மொழியில் உங்களால் சொல்ல முடியாது. அது பொய்யாக இருக்கும். புலம்பெயர் தமிழராக இருப்பவர் ஆர்ட்டிலறி அடிப்பது பற்றியோ செல் அடிப்பது பற்றியோ எழுத முடியாது. எங்களுடைய குரலை உங்களுடைய குரலினூடாக உலகத்துக்குச் சொல்லுங்கள். எங்களுக்குத் திருப்பிச் சொல்லாதீர்கள். நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதையே எங்களுக்குத் திருப்பிச் சொல்வதில் அர்த்தமில்லை. உலகுக்கு உங்கள் மொழியில் சொல்லுங்கள். வேற்று மொழிகளில் சொல்லுங்கள். அதை நாங்கள் செய்வது மிகக்குறைவு. பிரெஞ்ச், டொச் மொழியில் எழுதக் கூடிய தமிழர்கள் இன்று வந்துவிட்டார்கள். தமிழில் எழுதியாவது அதை வேற்று மொழிக்குக் கொண்டு செல்லுங்கள். ஈழத் தமிழினம் படுகிற துயரமும் கண்ணீரும் வதையும் வலியும் உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அது உலகுக்குத் தெரிந்திருந்தால் நமக்கு இடைஞ்சல் இல்லையே... ஆண்டுக்கு இருமுறை கூட்டம் கூடுவது அல்ல புலம்பெயர் தமிழரின் பணி. அதற்கு மேலாக தினசரி அதற்காக இயங்க வேண்டும். படைப்பாளிகள் இன்னும் கூடுதலாகச் செய்ய வேண்டும். தாயகத்து உறவுகளின் வலியை படைப்பாளிகள் தங்களது படைப்புகளின் மூலம் உலகத்துக்குச் சொல்ல வேண்டும். பாலஸ்தீன மக்களின் துயரமும் கண்ணீரும் அப்படித்தான் வெளியே வந்தது. இலத்தீன் அமெரிக்க நாட்டு மக்களின் துயரமும் கண்ணீரும் அப்படித்தான் வெளியே வந்தது. வியட்நாமிய மக்களின் கண்ணீரும் துயரமும் அப்படித்தான் வந்தது. அதுபோல ஈழத் தமிழரின் கண்ணீரையும் துயரையும் நீங்கள் தான் சொல்ல வேண்டும். அரசியல் ரீதியாக எப்படி ஒரு இராஜதந்திர நகர்வு மேற்கொள்ளப்படுகிறதோ அப்படி படைப்பு ரீதியாகவும் ஒரு நடவடிக்கை இயங்க வேண்டும். புலம்பெயர் தேசத்தில் கலைஞர்களும் படைப்பாளிகளும் அதிகம். ஒரு தாயின் கடமையைப் போல் செய்ய வேண்டும். இதை செவ்வனே செய்வதே புலம்பெயர் படைப்பாளிகள் ஆக வேண்டும். நாங்கள் போராடுவோம் என்பது உண்மை. இறுதி ஆள் இருக்கும் வரை போரிடுவோம். எந்தக் கொம்பன் வந்தாலும் நாம் போரிடுவோம். அது வேறு பிரச்சனை. ஆனால் அதை நமது நியாயப்பாடுகளை உலகத்துக்குச் சொல்வது யார்? புலம்பெயர் தமிழர்களுக்குள் இருக்கிற படைப்பாளிகளும் கலைஞர்களும்தான். அவர்கள் அதைச் செய்ய வேண்டும். சும்மா வெறுமனே அடித்தான்- கொத்தினான் என்று இல்லாமல் படைப்பாளியின் நெஞ்சுக்குள் ஆழப் பதிந்து இறங்குவதுபோல் சொல்ல வேண்டும். படைப்பின் மூலமே போராட்டங்கள் வெற்றி பெறுகின்றன. மார்க்ஸிம் கார்க்கிய, மாயவோஸ்கி, பாப்லோ நெரூடா என்றாலும் பாரதி என்றாலும் அவர்கள் போராட்டத்துக்கு பணி செய்தனர். ஆகவே எமது புலம்பெயர் உறவுகளே! அவர்களுக்குள் பூத்துக் கிடக்கும் படைப்பாளிகளே! இந்தப் பணிகளை அவர்கள் தங்கள் கைகளில் எடுக்கட்டும்! ஏனெனில் நாம் திரும்பவும் போரிடுவோம். திரும்பவும் அடைபடுவோம். எங்கள் அவலம் உங்களின் கண்களால் தெரியவேண்டும். உங்களுக்கு இரட்டை வேலை. நீங்களே வதை பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தாயகமும் வதைபட்டுக் கொண்டிருக்கிறது. உங்களது துன்பத்தை எமக்குத் தெரியப்படுத்துங்கள். எமது துன்பத்தை உலகுக்குத் தெரியப்படுத்துங்கள். என் பிரியத்துக்குரிய எமது புலம் பெயர் தமிழ் உறவுகளுக்குள்ளே பூத்துக் கிடக்கிற இளம் படைப்பாளிகளே! உங்களுக்கு இரட்டை வேலை இருக்கிறது. எங்களுக்கு ஒற்றைச் சுமை.. இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கு உங்களது பங்களிப்பு பெரிது என்பதை புரிந்து கொண்டு செயற்படுங்கள். இது கவிஞர் புதுவை இரத்தினதுரையின் குரல் அல்ல. உங்களுடைய தாயகத்தின் குரல். புலம்பெயர் வாழ் தமிழர்கள் இன்னமும் இந்தப் போராட்டத்தைப் புரிந்து கொள்ளாதிருந்தால் அவர்களுக்கும் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. நாம் அவர்களைப் பிழையாகக் கருதவில்லை. புலம்பெயர் தமிழர்களுக்கு விடுதலையின் தாற்பரியத்தையும் எமது அழுகையையும் கண்ணீரையும் சொல்லித்தான் தெரிய வேண்டுமெனில் அவர்களுக்கும் சொல்லிக் காட்ட வேண்டும். எங்களுடைய புலம்பெயர் தமிழர்களில் கொஞ்சம் பேர் இன்னும் உறக்கத்தில்தான் இருப்பார்களாக இருந்தால் புலம்பெயர் படைப்பாளிகளுக்குப் பெரிய பணி இருக்கிறது. இதனுடன் சேர்த்து அவர்களுக்கு மூன்று பணியாகிறது. புலம்பெயர் படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் ஊடகத்தாருக்கும் நித்திரையில்லா பணி தங்களது காலடியிலே விழுந்து கிடக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த விடுதலைப் போராட்டத்தை ஏற்கவில்லை என்று கூறுகிற படைப்பாளிகளை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. விடுதலைப் புலிகள் என்பது வெறும் சொல் அல்ல. விடுதலைப் போராட்டத்தின் சொல்தான் விடுதலைப் புலிகள். அவர்கள் சொல்லிக் கொண்டு இருக்கட்டும். நானில்லாமல் விடுதலைப் போராட்டமா? வெற்றி பெறுமா? என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள்- பழைய போராளிகள் என்ற போர்வையில். அவர்கள் இருக்கட்டும். நடுநிலைமைக்காரர்கள்தான் இப்போது பிரச்சனை. அது என்ன நடுநிலைமை? நீதிக்கும் அநீதிக்கும் இடையே "நடு" என்ற ஒரு வார்த்தை உண்டா? சுத்தத்துக்கும் அசுத்தத்துக்கும் இடையே "நடு" என்ற ஒருவார்த்தை உண்டோ? அளவான சுத்தம்- அளவான அசுத்தம் என்று உள்ளதோ? அது போக்கிரித்தனம். இந்தப் போராட்டத்தை எதிர்க்கிறவர்கள் நேர்மையானவர்கள். நடுநிலைமை என்பதற்கு தமிழிலே வார்த்தைகளே இல்லை. தன்னுடைய இயங்கும் தன்மையை வைத்துக்கொண்டே நடுநிலைமையாளன் உருவாகிறான். எவன் தனியே எழுதிக் கொண்டும் பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் மட்டும்தான் இருப்பேன் என்பவர்கள்தான் நடுநிலை பற்றி பேசுவார்கள். காலாவதியான பொருட்களை கையில் எடுத்து வைத்திருப்பார்கள். அவர்கள் புதிதாகச் செய்வதே காலாவதியான பொருட்களை வைத்திருப்பதுதான். அப்படியான படைப்பாளிகள் எங்கும் இருப்பார்கள். நடுநிலைமை என்பது தப்பித்துக் கொள்ளுதல். நடுநிலைமையை மீறி பட்டுப்படாமல் செல்லும் போக்கும் உண்டு. பின்பக்கம் பார்த்தால் கிளிபோலும் முன்பக்கம் பார்த்தால் காகம் போலும் இருக்கும். அப்படியான படைப்பாளிகளும் இருக்கிறார்கள். குளத்தோடு கோபித்துக் கொண்டு என்னமோ செய்யக் கூடாது என்று ஒரு பழமொழி உண்டு. இந்த விடுதலைப் போராட்டத்தைப் பற்றியான விமர்சனங்கள் உண்டு. இந்த விடுதலைப் போராட்டம் சரிக்கும் பிழைக்கும் இடையேதான் ஓடுகிறது. ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் தாயகத்திலே உட்கார்ந்து கொண்டு புல்லாங்குழல் வாசிக்கவில்லை. பூப்பறிக்கவில்லை. உயிரோடு விளையாடுகின்ற- சாவோடு விளையாடுகின்ற போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்தப் போராட்டத்தின் நியாயத்தன்மையை கொஞ்சமாவது புரிந்து கொள்ள வேண்டும். சரியும் பிழையும் இருக்கலாம். விகிதாசாரத்தில் எது அதிகம் என்று பார்க்க வேண்டும். எல்லோருக்கும் சரியானதான ஒரு போராட்டத்தை- எல்லோரும் கூடி ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்துவது என்றால் "விடுதலைப் புலிகள்" என்ற பெயரைக் கூட தலைவர் இன்னமும் வைத்திருக்க முடியாது. கதைத்துக் கொண்டே இருந்திருப்போம். இந்த விடுதலை என்பது வேண்டுமா இல்லையா? நாய்க்கும் மரத்துக்கும் இருக்கிற விடுதலை ஈழத் தமிழனுக்கும் வேண்டும் அல்லவா? அந்த விடுதலைப் போராட்டம் இப்போது நடக்கிறது அல்லவா? அதன் பக்கம் நீங்கள் நிற்க வேண்டும் இல்லையா? அந்தப் புள்ளியிலிருந்துதான் இந்தப் படைப்பாளிகள் தொடங்க வேண்டும். அதைவிடுத்து அவர்கள் அப்படியாம்- இவர்கள் இப்படியாம் என்ற மனோபாவம் இருக்க இயலாது. முழுமையான விடுதலைக்கான எல்லைகளைத் தொட்டு நிற்கும் தூரத்தில் நிற்கிறோம் நாம். உங்களது விமர்சனங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். விடுதலைப் போராட்டத்தின் பக்கத்தில் எரிகின்ற நெருப்புக்குப் பக்கத்தில் தயவு செய்து தண்ணீர் ஊற்றிவிடாதீர்கள். தீக்குளித்துக் கொண்டிருக்கிற தேசத்திலிருந்து நாம் இதைக் கேட்கிறோம். எமது விடுதலை நாம் நிச்சயம் பெறுவோம். ஆயிரம் தடைகள் வரட்டும். உலகில் ஆயிரம் தடைகள் வந்தபின்னர்தான் மக்கள் வென்றிருக்கிறார்கள். நாடுகள் வென்றிருக்கின்றன. இப்போது எங்களுக்கும் வந்திருக்கிறது. நாங்கள் வெல்லுவோம். தமிழ் மக்களின் சக்தியோடு நாங்கள் இணைந்து நிற்கிறோம். மாலை 5 மணிக்கு வந்து பாருங்கள். ஊரெங்கும் அணிவகுப்புகள். நீங்கள் வந்து பார்த்தீர்கள் எனில் மெய்சிலிர்த்துப் போவீர்கள். ஆகையால் இந்த எரிகின்ற நெருப்புக்கு நீர் ஊற்றிவிடாதீர். எவனொருவனுக்கு விடுதலை உணர்வு வந்து நெஞ்சுக்குள் சிறகு முளைத்து பறக்காமல் இருக்கிறானோ அவன் படைப்பாளியே இல்லை ஐயா! அவன் கலைஞனே அல்ல- அவனுக்கு முதுகுகளில் இறக்கை முளைக்கும் போதுதான் படைப்புத் தளத்தை செய்ய வெளிக்கிடுகிறான். எனவே முதுகில் இறக்கை முளைத்த எனது உறவுப் படைப்பாளிகளே! சிறகுகளை அகல விரியுங்கள்! விடுதலையின் வானத்தை நோக்கியதாக அது இருக்கட்டும்! எல்லோரும் சேர்ந்து வாருங்கள் வடம் பிடிப்போம்! இழுத்து வந்து சரியான இடத்தில் நிறுத்துவோம்! உங்களிடமிருந்து நம் தேசம் வேண்டுகிறது- உங்கள் படைப்புளம் இன்னும் இன்னும் விரிய வேண்டும் என்று தாயகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றார் கவிஞர் புதுவை இரத்தினதுரை என்றார் புதுவை இரத்தினதுரை. நன்றி>புதினம்.

0 comments: