19 July, 2006

உண்மையை உலகுக்கு வெளியிடுவதே ஊடக தர்மம்!

உண்மையை உலகுக்கு வெளியிடுவதே ஊடக தர்மம்! - தமிழன்பன் (சென்னை) கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டு ஊடகங்கள் குறித்தும் தென்னிலங்கை ஊடகங்கள் குறித்தும் ஈழத்தமிழர் நடத்துகின்ற ஊடகங்கள் பலவற்றில் பலவிதமான வாதப்பிரதிவாதங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இதில் என்னுடைய கருத்தையும் பதிவு செய்கின்றேன். பெரும்பாலான தென்னிலங்கை ஊடகங்கள் சிங்கள இனவாதிகளால் நடத்தப்படுபவைகள். இலங்கையில் ஊடகத்துறையினர் பலர் உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார்கள் என்பதால் சிங்கள இனவாத சக்திகளால் முதலில் கொலை பயமுறுத்தலுக்கு உள்ளாகி, அதையும் மீறிச் செயற்பட்டதால் படுகொலை செய்யப்பட்டதும், பல ஊடக அலுவலகங்கள் மிக மோசமாக தாக்கி சேதப்படுத்தப்பட்டதும் செய்திகள் வாயிலாக அனைவரும் அறிந்ததே. சிங்கள அரசும் அதன் புலனாய்வுப்பிரிவினரும் தேவையேற்பட்டால் தமது கொள்கைகளை எதிர்க்கும் தம்மினத்தவரையே கொலை செய்யவும் தயங்கமாட்டார்கள் என்பதை அண்மையில் உண்மை செய்திகளை துணிச்சலுடன் எழுதிய சிங்கள செய்தியாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டதன் மூலம் நிரூபித்துள்ளது. இந்நிலையில் இலங்கை சிங்கள அரசின் நெருக்குதலுக்கும் கொலை பயமுறுத்தலுக்கும் உள்ளாகியிருக்கும் சில தென்னிலங்கை நடு நிலை ஊடகத்துறையினரும் ஊடகங்களும் உண்மையை வெளியிட அஞ்சுகின்றன. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தென்னிலங்கை ஊடகங்கள் உண்மைகளை வெளியிட முடியாமல் இருப்பது என்பது ஒரு துர்ப்;பாக்கியமான நிலைதான். ஆனால் நம் தமிழ் நாட்டில் தமிழர்களிடமே கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் பெரிய சிறிய பத்திரிகைகள் எல்லாம் நடுநிலையுடன் ஈழச் செய்திகளை வெளியிடுவதில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியதும், வெட்கப்பட வேண்டியதுமான விடயமாகும். உள்நாட்டுச் செய்திகளைத்தான் பற்பல காரணங்களுக்காக ஒரு பக்கச்சார்பாக வெளியிடுகின்றன என்றால் ஈழத்து செய்திகளையும் கூட ஒரு பக்கச்சார்பாக சிங்கள அரசுக்கு சாதகமாக வெளியிடுவதும், உண்மைக்கு புறம்பாக திரித்து வெளியிடுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். எங்கோ தொலை தூரத்தில் லெபனான் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பிஞ்சுக்குழந்தை ஒன்று தாக்கப்பட்டுள்ளதை படத்துடன் நேற்று (17.07.06) வெளியிட்டு என்ன செய்தது இந்தக்குழந்தை? ஏன் இந்த ரத்த வெறி? என்று கேள்வி எழுப்பியுள்ள தினமலர் நாளேட்டுக்கும் மற்றைய நாளேடுகளுக்கும் சில மைல்களுக்கு அப்பாலுள்ள தமிழீழத்தில் நடப்பது நெஞ்சை உறுத்தவில்லையா? சிங்கள இன வெறி அரசின் முப்படைகளாலும் அதன் துணை படைகளான தமிழின துரோகக் குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்ட பல பச்சிளங் குழந்தைகளும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு படு கொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழ் பெண்களையும் பல அப்பாவிக் குடும்பங்களையும் அண்மையில் நடந்த வங்காலை படு கொலைகளும் பேசாலை தேவாலய படு கொலைகளும் தமிழ் மீனவர்கள் மீதான கொடூர படு கொலைகளும் ஏன் தெரியாமல் போய்விட்டன? ஈழத்தமிழர்களும் அவர்கள் குழந்தைகளும் பெண்களும் மனிதர்களாக இங்குள்ள தமிழ் ஊடகங்களுக்கு தெரியவில்லையா? அவர்கள் என்ன தமிழ் நாட்டின் விரோதிகளா? அல்லது இங்கும் ஊடகங்களுக்கும் நிருபர்களுக்கும் இலங்கை அரசால் கொலை மிரட்டல்கள் விடப்பட்டுள்ளனவா? அல்லது மத்திய மாநில அரசுகள் ஈழச்செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட வேண்டாம் என்று தணிக்கை செய்துள்ளனவா? பின்பு ஏன் இந்த ஒரு பக்கச்சார்பான நிலை? இனத்தால் மொழியால் கலாச்சாரத்தால் எம்முடன் ஒன்றுபட்ட ஈழத்தமிழர்களின் அவலத்தை அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை இனியும் மூடிமறைக்காமல் உள்ளது உள்ளபடி உண்மை செய்திகளை தமிழக பத்திரிகைகள் எல்லாம் அவ்வப்போது வெளியிடவேண்டும் என்பதே என் பணிவான வேண்டுகோளாகும். ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக கூறிக்கொள்பவர்களின் பத்திரிகைகள் கூட ஈழத்தமிழர்களுக்கு சிங்கள இனவெறி அரசினால் இழைக்கப்படும் அநீதிகளை செய்யப்படும் படு கொலைகளை வெளியிடவேண்டும் என்பதில் அக்கறையோ அல்லது ஆர்வமோ இருப்பதாக தெரியவில்லை. மேலும் ஈழத்தமிழர்களின் இன்னலை போக்க தற்போது ஈழத்தமிழர் ஆதரவு இயக்கங்கள் தமிழகத்தில் பேரணிகள், பட்டினிப்போராட்டங்கள், கண்டன கூட்டங்கள் என்று நாள் தோறும் நடத்திக்கொண்டிருக்கின்றன. ஆனால் இவை அனைத்தும் பெரும்பாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டு விடுகின்றன என்பது தமிழர்களாகிய நாம் மிகவும் வெட்கி வேதனைப்பட வேண்டிய விடயங்களாகும். நானே பல செய்திகளை சேகரித்து, அவை எந்தெந்த இணயத்தில் வெளியானது என்னும் குறிப்புகளுடன் தமிழக முன்னணி தமிழ் நாளேடுகளுக்கு அவ்வப்போது அனுப்பியிருந்தேன். ஆனால் எந்த நாளேடும் அதனை கண்டு கொள்ளவே இல்லை. மாறாக ஒரு இராணுவ அதிகாரி கொல்லப்பட்டாலோ அல்லது சில இராணுவ அதிகாரிகள் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டோ அல்லது படு காயமுற்றாலோ அதனை முக்கிய செய்தியாக இங்குள்ள நாளேடுகளும் தொலைக்காட்சிகளும் உடனுக்குடன் பரபரப்பாக வெளியிடுகின்றன. சிங்கள இனவெறி அரசால் திட்டமிட்டு நடத்தப்படும் தமிழின படுகொலைகளை செய்யும் அரச முப்படையினர் தமிழர் படைகளினால் அல்லது விடுதலை புலிகளால் தாக்கி அழிக்கப்படுவது ஒன்றும் ஆச்சரியப்படக் கூடியதோ அல்லது ஆதங்கப்படக் கூடிய செய்தியோ அல்ல. ஆனால் ஈழத்தில் அப்பாவி தமிழ் பிஞ்சுக் குழந்தைகளும், இளம் பெண்களும், பல்கலைக்கழக மாணவர்களும், தமிழ் பற்றாளர்களும், பாராளுமன்ற உறுப்பினரும், உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவர துணை புரிந்த ஊடகவியலாளர்களும் இனவெறி பிடித்த சிங்கள அரசின் முப்படை களாலும் அவற்றிற்கு துணை புரியும் தமிழின துரோக குழுக்களினாலும் மிருகத்தனமாக தாக்கி கொன்று அழிக்கப்பட்டால் அவை இந்திய ஊடகவியலாளர்களால் குறிப்பாக தமிழ் நாட்டின் பத்திரிகைகளாலும் தொலை காட்சிகளாலும் ஏன் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன? இச்செய்திகளை வெளியிடுவதால் இந்திய தமிழ் நாட்டு ஊடகங்கள் ஒன்றும் விடுதலை புலிகளுக்கு துணை போவதாக அர்த்;தமாகிவிடாது. விடுதலை (திராவிடர் கழகம்) மற்றும் தமிழ் ஓசை (பாட்டாளி மக்கள் கட்சி) போன்ற நாளேடுகள் கூட குறைவாகவே ஈழச் செய்திகளையும் அவை சார்ந்த தலையங்கம் மற்றும் கட்டுரைகளையும் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன. ஆயினும் மற்றைய இதழ்களோடு ஒப்பிடுகின்ற பொழுது இவைகள் செய்வது அதிகமே. ஊடகத்துறை என்பது செய்திகளை உள்ளதை உள்ளபடி கூட்டாமல் குறைக்காமல் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். உண்மைகளை எடுத்துக் கூறுவதற்கு எவருக்கும் அஞ்சாமல் துணிவுடன் செயற்படவேண்டும். அதுதான் நேர்மையான ஊடகத்துறைக்கு இருக்கவேண்டிய முதல் குறிக்கோளும் கடமையுமாகும். அதன்பின்பு தான் மற்றையவை அனைத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். இதனை எல்லா ஊடகங்களும் ஒரு தர்மமாக கடைப்பிடிக்கவேண்டும். அதுதான் ஊடகங்களுக்கு பெருமையும் கௌரவமும் ஆகும். இதை இனியாவது தமிழ் நாட்டிலுள்ள அனைத்து ஊடகங்களும் செய்யும் என்று நம்புவோம். ஈழத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுய நிர்ணய உரிமை மறுக்கப்பட்டு பற்பல அகிம்சை போராட்டங்களின் மூலமாக போராடி பலவாறு ஏமாற்றப்பட்டு முடிவில் ஆயுதப்போராட்டம் ஒன்றுதான் ஒரே வழி என்று சிலரால் ஆரம்பிக்கப்பட்டது தான் ஈழத்தமிழர்களின் ஆயத போராட்டம். அது இன்று ஈழத்தமிழர்களின் ஆதரவை பெற்ற மிகப் பெரிய தமிழீழ விடுதலை புலிகளின் இராணுவமாக வடிவெடுத்துள்ளது என்பதே உண்மை. ஈழத்தமிழ் மக்களின் மிக குறைந்த வேண்டுகோள்கள் கூட புறக்கணிக்கப்பட்டன. அன்றைய சிங்கள அரசு தமிழர்களின் பிரதிநிதியான தந்தை செல்வாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை பின்னர் சிங்கள இனவாதிகளின் எதிர்பினால் திரு. பண்டாரநாயக்கா கிழித்து வீசினார். இதைத்தான் மீண்டும் இன்றைய சிங்கள அரசும் செய்யப்போகிறது என்பதே உண்மை. இதை சர்வதேசம் வேண்டுமானால் நம்பி ஏமாந்து போகலாம். ஆனால் நிச்சயமாக ஈழத்தமிழர்களும் தமிழீழ விடுதலை புலிகளும் சிறு துளியும் நம்பமாட்டார்கள் என்பதை உறுதியாகக் கூறலாம். சிங்கள அரசோ அல்லது எதிர் கட்சியினரோ எவருமே ஈழத்தில் நிரந்தர அமைதி ஏற்படுவதை எப்போதும் விரும்பியதுமில்லை அப்படியே விரும்பினாலும் அதை அவர்கள் நிறைவேற்றுவதற்கு பெரும்பாண்மை சிங்களவர்கள் ஒரு போதும் அனுமதிக்கப்போவதுமில்லை. இது காலம் காலமாக பல சிங்கள அரசுகளின் ஆட்சியின் போது சரித்திரம் கண்ட உண்மை. அண்மையில் நடந்து முடிந்த ஜெனீவா பேச்சு வார்த்தை இதற்கு ஒரு உதாரணம். ஒப்புக்கொண்டபடி இலங்கை சிங்கள அரசு நடந்து கொண்டதா? துணை இராணுவத்தின் ஆயதங்களை கைப்பற்றி அவர்களை வடக்கு கிழக்கிலிருந்து வெளியேற்றியதா? தமது வாழ்விடங்களை விட்டு இராணுவ ஆக்கிரமிப்பினால் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்ட தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு திரும்ப முடிந்ததா? வழிபாட்டுத்தலங்கள் கல்விக் கூடங்களில் நிலை கொண்டுள்ள முப்படைகளும் வெளியேறினார்களா? இவற்றையெல்லாம் செய்வதாக ஒப்புக்கொண்டு இலங்கை சிங்கள அரசு சர்வதேசத்தின் முன்னால் கைச்சாத்திட்ட ஜெனீவா ஒப்பந்தத்துக்கு என்ன ஆயிற்று? இது ஒன்று போதாதா சிங்கள இன வெறி அரசின் உண்மையான முகத்தை புரிந்து கொள்வதற்கு? இன்னமும் அதன் பொய்யான நாடகத்தை நம்புவதற்கு ஈழத்தமிழர்கள் எவரும் தயாராக இல்லை. தமிழ் நாட்டிலுள்ள இன மானத் தமிழர்களும் காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கவில்லை என்பதை நிரூபிக்கவேண்டிய காலம் வந்து விட்டது. தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும், தமிழீழத்தில் வாழ்ந்தாலும் நாம் தமிழர்கள். ஈழத்தில் தமிழினம் அநியாயமாக கொன்று அழிக்கப்படுவதை இனியும் வெறுமனே பார்த்து வாளாவிருக்காமல் தமிழினம் என்ற ஒரே உணர்வுடன் அரசியல், சாதி மத வேறுபாடுகளை ஒருபுறம் தள்ளி வைத்து விட்டு தமிழன் என்னும் இன உணர்வோடு ஒன்றுபடுவோம். ஈழத்தில் நம் இனத்தை சிங்கள இனவெறி அரசின் கொலைவெறி தாக்குதலில் இருந்து காத்திட மாநில அரசு விரைந்து செயல்பட்டு நடுவணரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென ஒருமித்து குரல் கொடுப்போம். நம் ஈழத்தமிழ் சொந்தங்களை காத்திடுவோம். ||ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவர்க்கும் தாழ்வு|| என்பதை நினைவில் கொண்டு விரைந்து செயல்படுவோமாக. நன்றி>வெப்பீளம்

0 comments: