22 July, 2006

இந்திய நிறுவனத்திடமிருந்து எண்ணெய்க்குதங்கள் பறிப்பு!!

சிறிலங்காவில் செயற்பட்டு வரும் இந்திய எண்ணெய் நிறுவனத்திடமிருந்த திருகோணமலை எண்ணெய்க் குதங்களை பறிக்க சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க உத்தரவிட்டுள்ளார். இந்திய பெற்றோலிய நிறுவனத்திடம் திருகோணமலை சீனன்குடா எண்ணெய்க்குதங்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தன. இந்த எண்ணெய்க்குதங்களை பொறுப்பேற்குமாறு தற்போது சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜாலிய மெதகமவிற்கு சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க உத்தரவிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தின் போது கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரினால் எழுத்து மூலம் இந்த எண்ணெய்க்குதங்கள் இந்திய நிறுவனத்திற்குப் பொறுப்பளிக்கப்பட்டிருந்தன. அண்மையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபன நிறுவனத்துக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. மேலும் ஜே.வி.பி. ஆதரவிலான தொழிற்சங்கங்களும் இந்தியாவை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கூட்டுத் தொழிற்சங்க பிரதிநிதிகள் சிலர் சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சிறிலங்காவின் எண்ணெய் வர்த்தகத்துறையில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஏகாதிபத்தியத்தை தவிர்ப்பது, வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களை தேசிய எண்ணெய் சந்தையிலிருந்து நீக்குதல், நாட்டிற்குள் எண்ணெய் வர்த்தகத்தின் ஏகாதிபத்தியத்தை மீண்டும் கூட்டுத்தாபனத்தின் வசம் கொண்டு வருதல் மற்றும் தேசிய சந்தையில் எரிபொருளின் விலையைக் குறைத்தல் ஆகியவை குறித்து இப்பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது. இப்பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்திய நிறுவனத்திடமிருந்து எண்ணெய்க்குதங்களை பறிக்குமாறு ரட்ணசிறீ விக்கிரமநாயக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் சிறிலங்கா திறைசேரியின் கீழ் இருக்கும் 107 எரிபொருள் நிலையங்களின் பொறுப்பு, நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வசம் ஒப்படைப்பதற்கும் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க ஒப்புதல் தெரிவித்துள்ளார். இராஜதந்திர ரீதியாக முக்கியத்துவம் பெற்ற திருகோணமலை எண்ணெய்க்குதங்கள் இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்து நாட்டினால் திருகோணமலை சீனன்குடாவில் பாரிய எண்ணெய்க்குதங்கள் அமைக்கப்பட்டன. திருகோணமலை துறைமுகத்திலிருந்து இங்கிலாந்து நிர்வாகத்தில் இருந்த கிழக்கு கடற்படையினருக்காக இந்த எண்ணெய்க்குதங்கள் உருவாக்கப்பட்டன. இலங்கையிலிருந்து இங்கிலாந்து வெளியேறிய பின்னர் இந்த எண்ணெய் குதங்களில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படாமல் இருந்தன. திருகோணமலையில் உள்ள இந்த எண்ணெய் குதங்களை பயன்பாட்டுக்குப் பெறுவதன் மூலமாக திருகோணமலையில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த அமெரிக்கா, இந்தியாவும் 1980-களின் தொடக்கத்திலே போட்டியிட்டன. ஆனால் 1980-களின் தொடக்கத்தில் திருகோணமலையில் அமெரிக்காவின் நிறுவனங்கள் கால்பதிக்க சிறிலங்கா அரசாங்கம் அனுமதித்திருந்தது. அப்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் இத்தகவலை தமிழ்நாடு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். அந்நாளைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார், இந்திய நாடாளுமன்றில் பகிரங்கமாகவே சிறிலங்காவின் இந்த அனுமதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன் பின்னர் 1987 ஆம் ஆண்டு ராஜீவ் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவின் அனுமதியின்றி வேறு எந்த ஒரு நாட்டினது பயன்பாட்டுக்கும் அனுமதிக்கக் கூடாது என்பதை இடம்பெற வைத்தது இந்தியா. சிறிலங்காவும் ஒப்புக்கொண்டது. ஆனால் 1997 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நிறுவனம் ஒன்றுக்கு திருகோணமலையில் 300 ஏக்கர் நிலத்தை கொடுக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்தது. அதனால் இந்தியா-சிறிலங்கா இடையே முறுகல்நிலை ஏற்பட்டது. திருமலைக்காக அமெரிக்கா- இந்தியா மோதல் தொடர்ச்சியான யுத்தத்துக்குப் பின்னால் 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டு சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகின்ற நிலையிலேயே இந்தியாவும் அமெரிக்காவும் திருகோணமலையைக் கைப்பற்றும் முயற்சிகளில் முனைப்பு காட்டின. அமெரிக்கா நடத்தி வந்த ஆப்கான் யுத்தத்துக்கு உதவியாகவும் தெற்காசிய பிராந்தியத்தில் தலையிடவும் திருகோணமலையில் தனது இராணுவத் தளத்தை அமைக்க அமெரிக்கா விரும்பியது. மத்திய கிழக்குக்கும் ஆசியாவுக்கும் இடையேயான கடல்வழிப் போக்குவரவுக்கு திருகோணமலை துறைமுகம் பயன்படும் என்றும் அமெரிக்கா கருதியது. திருகோணமலை எண்ணெய்க்குதங்களை இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கக் கூடாது என்று 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் நாள் இருநூறுக்கும் மேற்பட்ட சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபன பணியாளர்களான சிங்களவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். இருதரப்பு பேச்சுக்களின் பின்னர் 2002 ஆம் ஆண்டு யூன் 11 ஆம் நாள் இந்திய-சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனங்கள் இது தொடர்பிலான புரிந்துணர்வு ஓப்பந்தத்தை ஏற்படுத்தின. 2003 ஆம் ஆண்டு பெப்ரவரியில் சிறிலங்கா அரசாங்கம்- சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம்- இந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இடையேயான முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாதானது. ஜே.வி.பி. போன்ற சிங்களப் பேரினவாத கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்த எதிர்ப்புகளிடையே 2003 ஆம் ஆண்டு மே 28 ஆம் நாள் லங்கா-இந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபனப் பணிகளை முறைப்படி அந்நாளைய இந்திய பெற்றோலிய அமைச்சர் ராம் நாயக் கொழும்பில் தொடங்கிவைத்தார். மகிந்தவும் இந்தியாவும் இந்த நிலையில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் கூடிய கூட்டரசாங்கம் இந்தியாவில் ஆட்சி அமைத்தது. அதேபோல் கடந்த 2005 ஆம் ஆண்டு சிறிலங்கா அரச தலைவராக பேரினவாதி மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்றார். சிறிலங்காவுக்குச் சார்பான நிலைப்பாட்டை இந்திய அரசாங்கம் எடுக்கக் கூடாது என்று தமிழ்நாட்டிலிருந்து பாரிய அழுத்தம் இந்தியாவுக்குக் கொடுக்கப்பட்டது. அதன் விளைவாக தான் பதவியேற்ற நிலையில் மேற்கொண்ட மகிந்தவின் முதலாவது இந்தியப் பயணம் படுதோல்வியில் அடைந்தது. ஐக்கிய இலங்கை எனும் கோட்பாட்டை வலியுறுத்தி பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு மகிந்தவுக்கு இந்தியா அறிவுறுத்தியது. இராணுவ உதவியை செய்யவும் மறுத்தது. இதனால் வழமைபோல் இந்தியாவை அச்சுறுத்த பாகிஸ்தானிடமும் சீனாவிடமும் ஆயுத உதவிகளைக் கோர சிறிலங்கா முடிவு செய்தது. அரசியல் ரீதியாக சிங்களப் பேரினவாதத்துக்குச் சார்பாக இல்லாத இந்தியாவை வெளியேற்றும் நடவடிக்கையானது மகிந்த ராஜபக்ச பதவியேற்ற 3 ஆவது மாதத்திலேயே தொடங்கப்பட்டு விட்டது. 2006 ஜனவரி 29 ஆம் நாள் ஊடகவியலாளர்களிடம் பேசிய மகிந்தவின் பெற்றோலியத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, திருகோணமலையில் சிறிலங்கா - இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்துக்கு கொடுக்கப்பட்ட எண்ணெய் சேமிப்புக்குதங்களை சிறிலங்கா அரசாங்கம் மீள தன்வசம் வைத்துக் கொள்ளவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான நிலையில் இந்திய நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட வேண்டிய மானியத் தொகையான 78 மில்லியன் டொலரை மகிந்த ராஜபக்ச நிறுத்தினார். இதனால் சிறிலங்காவின் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் முடங்கும் நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் கடந்த யூன் மாதம் இருதரப்பு பேச்சுக்கள் நடத்தப்பட்டு சமரச ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் இந்த மாதம் தொடக்கத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தைக் கைப்பற்றுவோம் என்று சிறிலங்கா பெற்றோலியத்துறை அமைச்சர் பௌசி பகிரங்க அறிவிப்பை வெளியிட்டார். அமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கம் இந்தியாவை வெளியேற்றக் கோரி மகிந்தவுக்கு கெடு விதித்தது. இந்தியாவை வெளியேற்றா விட்டால் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தது. தங்களது தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் மகிந்த ராஜபக்ச ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து தொழிற்சங்கத்தினரை பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க பேச்சுக்கு அழைத்தார். இந்திய நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் மீண்டும் வலியுறுத்திய நிலையில் இந்தியாவிடமிருந்து எண்ணெயக்குதங்களை பொறுப்பேற்குமாறு சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜாலிய மெதகமவிற்கு அதிரடியாக ரட்ணசிறீ உத்தரவு பிறப்பித்துள்ளார். சிங்களத்துக்குச் சார்பாக இல்லாமல்- ஆனால் தனக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்த இந்தியாவின் செயற்பாட்டை முறியடிக்கும் வகையில் இந்தியாவை முன்னிறுத்தி வந்த ரணில் விக்கிரமசிங்கவை பேச்சுக்கு அழைப்பதுபோல் அழைத்து கடைசிநேர நாடகத்தால் இந்தியாவின் தலையீட்டை தான் விரும்பவில்லை என்பதை அண்மையில் மகிந்த ராஜபக்ச வெளிப்படுத்தியிருந்தார். மகிந்த அரசாங்கத்தின் எண்ணெய் நிறுவனம் தொடர்பான தற்போதைய முடிவானது இந்தியாவை தொடர்ந்து நிராகரிக்கும் வகையில் இருப்பதாக கொழும்பு கொள்கை வகுப்பாளர் வட்டாரங்கள் தெரிவித்தன. சிங்களவர்கள் எப்போதும் இந்தியாவுக்குச் சார்பானவர்கள் இல்லை என்பதை இனியேனும் இந்தியா புரிந்து கொண்டு இந்தியாவை தாய்நாடு என்று கருதி இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு செயற்பாட்டையும் எந்த நிலையிலும் மேற்கொள்ள மாட்டோம் என்று தொடர்ந்து அறிவித்து வரும் தமிழர் தரப்பின் பக்கம் உள்ள உண்மைகளை உணர்ந்து கொண்டு தனது வெளிவிவகாரக் கொள்கையை மாற்றிக் கொள்வதுதான் பிராந்திய ரீதியாக இந்தியாவுக்கு பயனளிக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். நன்றி>புதினம்.

0 comments: