05 July, 2006

ஜே.வி.பி. யின் செயற்பாடுகளுக்கு றோ நிதியுதவி.

தமிழ் மக்கள்,தேசியப் பாதுகாப்புக்கு குந்தகமானவர்கள் என்ற தோற்றப்பாட்டை தென்னிலங்கையில் உருவாக்கி மற்றுமொரு இனக் கலவரத்திற்கு தூபமிடுவதாக குற்றம்சாட்டியிருக்கும் `சுதந்திரத்திற்கான மக்கள் இயக்கம்', ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இந்தியாவின் உளவுத்துறையான றோவுடன் தொடர்புகளை கொண்டுள்ளதாகவும், `றோ' ஜே.வி.பி. யின் செயற்பாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதாகவும் மேலும் தெரிவித்திருக்கிறது. நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு நிப்போன் ஹேட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டன. `சுதந்திரத்திற்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இவ்வூடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவ்வியக்கத்தின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவரான கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரான நிர்மால் ரஞ்சித் கருத்து தெரிவித்தபோது; இலங்கையில் பயங்கரமானதோர் சூழ்நிலை உருவாகியிருப்பதாக கூறிக் கொண்டு தென்னிலங்கையில் உள்ள ஏனைய பல பிரச்சினைகளை மறைக்க அரசாங்கம் முயலுகிறது. நாட்டு மக்களை பதற்றமான ஒரு சூழ்நிலைக்குள் வைத்திருக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 1983 இல் தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை மறந்து விட முடியாது. அதுபோன்ற வரலாற்றுத் தவறுகள் இனிமேல் நடைபெறக் கூடாது. தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட அத்தாக்குதலின் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சி செயற்பட்டது. இன்று யுத்தத்தை ஆசீர்வதிக்கும் வீறாப்புப் பேச்சுகள் பேசப்படுகின்றன. இந்நிலையில் தமிழ் மக்களுக்கு எத்தகைய தீர்வுத் திட்டத்தை வழங்கப்போகிறோம் அல்லது இலங்கையின் இனப்பிரச்சினைக்கு என்னதான் வழி என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெளிவுபடுத்த வேண்டும் என்றார். அஜித் பெரக்கும் ஜயசிங்க ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய கட்சியினரின் போருக்கு ஆதரவான பிரசாரங்களால் முழு இலங்கையும் ஆபத்தான கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இந்திய நாட்டின் உளவுத்துறை அமைப்பான `றோ' வுடன் இரகசிய தொடர்புகளை பேணி வருகிறார். இலங்கையில் ஜே.வி.பி. யின் செயற்பாடுகளுக்கு `றோ' பெருமளவில் நிதியுதவியளித்து வருகிறது. இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஷியாம் சரணின் இலங்கை விஜயம் உற்று நோக்கப்படுகிறது. அவர் இந்தியப் பிரதமரின் சிறப்பு செய்தியுடன் இங்கு வந்து ஜனாதிபதியைச் சந்தித்ததாகக் கூறப்படும் நிலையில், இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையொத்த அதிகாரப் பரவலாக்கலையே இலங்கையில் மேற்கொள்ள இந்தியா விரும்புகிறது. இலங்கை அரசிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அனுசரணைப் பணியை மேற்கொள்ளும் நோர்வே அரசாங்கம் தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் புலிகளை தடை செய்தமையானது இலங்கையில் இந்தியாவின் மேலாதிக்கம் ஏற்பட வழியமைத்துள்ளது. என்லி பெரரோ தமிழ் மக்கள் தேசியப் பாதுகாப்புக்கு குந்தகமானவர்கள் என்ற தோற்றப்பாட்டை தென்னிலங்கையில் உருவாக்கி மற்றுமொரு இனக்கலவரத்திற்கு தூபமிட சிலர் முயலுகின்றனர். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நீர்கொழும்பில் நடைபெற்ற சம்பவங்களுக்குப் பிறகு அங்கு வாழும் தமிழர்கள் சந்தேகக் கண் கொண்டு நோக்கப்படுகிறார்கள். கைதுகளின் போது தமிழர்கள் மனிதாபிமானமாக நடத்தப்படுவதில்லை. நாட்டுப் பற்றாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமயவினர் உண்மையில் நாட்டுப்பற்றாளர்கள் அல்ல. அவர்கள் நாட்டினைப் பிரிப்பதற்கே துணை போகின்றனர் என்றார். அதேவேளை, `சுதந்திரத்திற்கான மக்கள் இயக்கம்' 1983 இல் நடைபெற்ற ஜூலை கலவரத்தை நினைவு கூர்ந்தும், அதேமாதிரியான ஒரு சம்பவம் இனிமேல் நடைபெறதிருப்பதை உறுதி செய்வதற்காகவும் எதிர்வரும் 24 ஆம் திகதி மாபெரும் பாத யாத்திரை ஒன்றை கொழும்பில் நடத்த திட்டமிட்டிருக்கிறது. இதனுடன் இணைந்து அன்றைய தினம் விகாரமஹாதேவிப் பூங்காவில் கலாசார நிகழ்ச்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், `முழு இலங்கையும் அபாயத்தில் நாம் செய்யக் கூடாதது என்ன?' என்ற தலைப்பில் கருத்தரங்குகளை நடத்த இவ்வியக்கம் திட்டமிட்டுள்ளது. நன்றி>பதிவு.

2 comments:

Anonymous said...

/1985 இல் தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை மறந்து விட முடியாது/

1983 ?

said...

வணக்கம் அனானி, சுட்டிக்காட்டியதுக்கு நன்றி.