23 July, 2006

ராஜீவின் தலைக்குத்தான் இலக்கு வைத்தேன்.

ராஜீவின் தலைக்குத்தான் இலக்கு வைத்தேன்: கொழும்பில் தாக்குதல் நடத்திய ரோகன விஜயமுனி பகிரங்க வாக்குமூலம் . இந்தியாவை அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த தாக்குதலை நடத்திய விஜித ரோகன விஜயமுனிக்கு 1990 ஆம் ஆண்டு சிறிலங்கா அரச தலைவரால் மன்னிப்பு அளிக்கப்பட்டு விட்டது. அதன் பின்னர் விஜித ரோகன விஜயமுனி சிஹல உறுமய சார்பில் தேர்தலில் போட்டியிட்டு அரசியல் முகத்தையும் வெளிப்படுத்திக் கொண்டு இப்போது வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். 19 ஆண்டுகளுக்குப் பின்னர் ராஜீவை தான் தாக்கியது குறித்து கொஞ்சமும் குறையாத பேரினவாத வெறித்தனத்துடன் விஜித ரோகன விஜயமுனி கொழும்பு ஊடகத்துக்கு அளித்துள்ள நேர்காணல்: 1985 ஆம் ஆண்டு சிறிலங்கா கடற்படையில் இணைந்தேன். கடற்படைக் கப்பல் எண்: 526 இல் றேடியோ தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றினேன். அப்போது நடைபெற்று வந்த வடமராட்சி போர் நடவடிக்கையில் பங்கேற்றிருந்தேன். பெருந்தொகையான விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டு காலி துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டிருந்த நேரம். அப்போது அரச தலைவராக இருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தனவுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக யூலை 29 ஆம் நாள் ராஜீவ் சிறிலங்கா வந்திறங்கினார். அப்போது நாடு பதற்றத்தில் இருந்தது. அனைத்து மக்களும் அதிர்ச்சியில் இருந்தனர். எனக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. இந்தியாவின் 26 ஆவது மாநிலமாக சிறிலங்காவை இணைத்துவிட்டார்கள் என்று நினைத்தேன். எமது போரை நிர்மூலமாக்கி எங்களை எளிதில் வெற்றி கொண்டுவிட்டார் ராஜீவ். அவருக்கு வரவேற்பளிக்கப்பட்ட சம்பவத்தை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்தேன். என் இரத்தம் கொதித்தது. என்னால் அந்த தொலைக்காட்சிப் பதிவுகளை தொடர்ச்சியாகப் பார்க்க முடியவில்லை. ராஜீவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்போது ரட்மகம நாடாளுமன்ற உறுப்பினர் அசோக சோமரட்ண தனது பதவியிலிருந்து விலகியும் இருந்தார். யூலை 30 ஆம் நாள்- நான் விரைவாக தயாராகிக் கொண்டிருந்தேன். காலையில் மீன் உணவை சாப்பிட்டேன். அதன் பின்னர் பேரூந்தில் ஏறி அரச தலைவர் மாளிகைக்குச் சென்றேன். அணிவகுப்பு மரியாதைக் குழுவில் இணைந்து கொண்டேன். இப்போது அணிவகுப்பு மரியாதை தொடங்க உள்ளது. மணி முற்பகல் 10 இருக்கும்... அரை மணிநேரம் கடந்தது..... ராஜீவ் வந்துசேரவில்லை.. நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அப்போது ராஜீவ் மட்டும் அதைச் செய்யாது இருந்திருந்தால் இந்தத் தீவிலிருந்து பயங்கரவாதத்தை அப்போதே நாம் அழித்திருப்போம்- என்ன கொடுமை- ராஜீவ் காந்திக்கு வணக்கம் செலுத்தி அந்தப் பாவச் செயலில் என்னையும் இணைத்துக் கொள்ள வேண்டுமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இரு நாட்டு தேசியப் பண்களும் இசைக்கப்பட்டன. ராஜீவ் காந்தி வந்திருந்தார். கடற்படை தளபதி ஆனந்த டி சில்வா ராஜீவுக்கு பின்னால் இருந்தார். நான் இடதுபுறத்திலிருந்து 3 ஆம் நபராக நின்றிருந்தேன். என்னால் நீண்ட நேரம் பொறுமை காத்திருக்க முடியவில்லை. ராஜீவ் காந்தியை கொன்றுவிட்டால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிடும். நான் முன்நகர்ந்து ராஜீவை கடுமையாகத் தாக்கினேன். அது பலமான தாக்குதல். ஆனால் அத்தாக்குதல் விலகிச் சென்றுவிட்டது. நான் ராஜீவ் காந்தியின் தலைக்குத்தான் இலக்கு வைத்தேன்- அது மரணத்தை ஏற்படுத்தும் தாக்குதல்- அதுதான் என் நோக்கம். ஆனால் அவர் மற்றொரு பக்கம் திரும்பியதால் மயிரிழையில் உயிர்தப்பிவிட்டார். ராஜீவ் பாதுகாவலர்கள் என்னை அங்கேயே தாக்கினர். மைதானத்தில் விழுந்துவிட்டேன். அதன் பின்னர் கடற்படையால் சோதனையிடப்பட்டு கடற்படை தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்ப்ட்டேன். அதன் பின்னர் கடற்படை தளபதி லெப். மெண்டிஸ் அங்கு வந்தார். "உனக்கு என்ன நடந்திருக்கிறது என்று தெரியுமா?" என்று கேட்டார். "நான் செய்வது என்ன என்பது குறித்து எனக்குத் தெரியும். நான் எதற்கும் முகம் கொடுக்கத் தயார்" என்றேன். அதன் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு 4 ஆம் மாடியில் 3 மாதங்கள் வைக்கப்பட்டிருந்தேன். அப்போது காவல்துறை அதிகாரி சந்திர ஜயவர்த்தன என்னிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார். ஒருநாள் பிரதி காவல்துறை மா அதிபர் ஹென்றி பெரேரா 20 அல்லது 25 அறைகள் என்னை அறைந்திருப்பார். அது குறித்து சந்திர ஜயவர்த்தனவிடம் முறைப்பாடு செய்தேன். ஆனால் அவர் உயர் அதிகாரி என்பதால் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார். அதேபோல் இந்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் என்னிடம் கேள்வி கேட்டனர். ஆனால் அவர்களுக்கு நான் பதில் அளிக்க முடியாது என்று மறுத்துவிட்டேன். அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர். நீதிமன்றில் நிறுத்தப்பட்டேன். 1987 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் நாள் இராணுவச் சட்டத்தின்படி 6 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. எனக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போது மிகக் கேவலமாக உணர்ந்தேன். ஏனெனில் எனக்கு தண்டனை விதித்த குழுவில் வடமராட்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தளபதிகளும் இருந்தனர். அவர் கேணல் விஜய விமலரட்ண. அவரும் காலியைச் சேர்ந்தவர்தான். தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் வெலிக்கடை சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டேன். கைதிகள் என்னை உற்சாகமாக வரவேற்றனர். அதன் பின்னர் இந்திய இராணுவம் வெளியேறக் கோரி சிறைக்குள் போராட்டம் நடத்தினோம். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காயமடைந்தேன். கொழும்பு தேசிய மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட போது என்னைச் சுற்றி ஒவ்வொரு நாளும் 500 பேர் இருப்பர். மருத்துவர்களும் தாதியரும் என்னை மிக மிக நன்றாக கவனித்து அன்பு செலுத்தினர். என்மீது ஒருபோதும் பரிதாபப்படவில்லை. இன்றைவிட நாளை நல்ல நாளாக இருக்கும் என்றார் விஜித ரோகன விஜயமுனி. நன்றி>புதினம்.

3 comments:

Anonymous said...

ஜே ஆரின் நரித்தனம் வென்றதொருகாலம்.

said...

கடந்த காலங்களிலும் சரி, எதிர்காலத்திலும் சரி இந்தியாவன் நலனிற்கு சார்பான விதத்தில் சிங்களம் இருக்கப்போவதில்லை. தமிழீழமே எப்போதும் இந்தியாவிற்கு நேசக்கரம் நீட்டும் அயல்நாடாக இருக்கும் என்பதை புரிந்தும் இந்தியா ஏன் இன்னும் மெளனம் சாதிக்கிறது? ('றோ' நினைத்த பல விடயங்களை சாதிக்க முடியாமல் மூக்குடை பட்டதனால் ஏற்பட்ட கெளரவ பிரச்சினைதான்)

said...

இதப்பாத்தாவது திருத்தம் வருமா??