16 July, 2006
பிரித்தானியாவின் காலம் கடந்த ஞானம்.
இலங்கைக்கு பிரித்தானிய அளித்த யாப்பின் மூலம் தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை: பிரித்தானிய தூதுவர்
இலங்கைக்கு பிரித்தானிய அளித்த யாப்பின் மூலம் தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை- அந்த ஏற்பாடு போதுமானதும் வலுவானதும் அல்ல என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது என்று சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் டொமினிக் சில்கொட் தெரிவித்துள்ளார்.
வீரகேசரி வார வெளியீட்டுக்காக அவர் அளித்த நேர்காணலில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரித்தானியா புலிகள் நேரடி பேச்சுக்கு தடையில்லை
கேள்வி: பிரித்தானியா விடுதலைப் புலிகளைத் தடை செய்துள்ளமையானது விடுதலைப் புலிகளுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக இருக்குமா?
பதில்: அப்படி ஒரு முட்டுக்கட்டை இருப்பதாக நாம் பார்க்கவில்லை. சமாதான முன்னெடுப்புகளில் விடுதலைப் புலிகளை முன்னோக்கி நகர்த்துவதற்கு அவர்களுடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டுமென்ற கொள்கையை பிரித்தானியா கொண்டுள்ளது.
கேள்வி: விடுதலைப் புலிகளைப் பிரித்தானியா தடை செய்துள்ளபோதும் பிரித்தானியாவுடன் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் கொண்டுள்ள உறவு தொடருமா?
பதில்: அன்ரன் பாலசிங்கம் பிரித்தானியப் பிரஜை. அவர் பிரித்தானியாவில் வாழ்வதற்கான உரிமை உண்டு. பிரித்தானியா விடுதலைப் புலிகளை 2001 ஆம் ஆண்டிலேயே தடைசெய்து விட்டது. புலிகளுக்கு எதிரான தடைகொண்டு வரப்பட்டு ஐந்து வருடங்கள் கழிந்துவிட்டன. அந்த வகையில் புலிகளுக்கு எதிரான தடை பிரித்தானியாவில் அன்ரன் பாலசிங்கம் விடயத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை.
அன்ரன் பாலசிங்கம் குறித்து பிரித்தானியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.
அதேபோல் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகூட இந்த விடயத்தில் பெரியளவில் மாற்றத்தைக் கொண்டுவரும் நிலையில் இல்லை.
பிரித்தானியா இலங்கைக்கு வழங்கிய அரசியலமைப்பு தமிழரை பாதுகாக்கத் தவறிவிட்டது
கேள்வி: இலங்கை பிரித்தானியாவின் காலணியாக 150 வருடங்களுக்கு மேல் இருந்தது. இன்று இலங்கையில் நிலவுகின்ற இன முரண்பாடுகளுக்கு பிரித்தானிய ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த பிரித்தாளும் கொள்கையே காரணமெனக் கூறப்படுகின்றது. இது பற்றி தாங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
பதில்: நான் அரசியல்வாதியல்ல என்பதை முதலில் கூறிக்கொள்கிறேன். இலங்கையில் பிரித்தானியரின் பிரித்தாளும் கொள்கை தொடர்பாக சிறிது காலத்திற்கு முன் சில அரசியல்வாதிகளுடன் நான் கலந்துரையாடினேன். பிரித்தானியா விட்ட மாபெரும் தவறு இலங்கையை ஒன்றாக்கியமையே என அவர்கள் கூறினார்கள்.
பிரித்தானியர் 1796 இல் இலங்கைக்கு வந்தபோது இங்கு மூன்று அரசுகள் இருந்தன. பொதுவான நிர்வாக முறைக்கு வசதியாக பிரித்தானியர் இலங்கையை ஒரே நாடாக்கினர்.
1832 கோல்புறுக் சீர்த்திருத்தத்தையடுத்து இலங்கையின் அனைத்து பகுதிகளும் ஒரு நிர்வாக அமைப்பின்கீழ் கொண்டு வரப்பட்டது.
பிரித்தானிய ஆட்சியின் கீழ் உலகின் பாதிக்கு மேற்பட்ட நாடுகளில் பிரித்தாளும் கொள்கையே கடைப்பிடிக்கப்பட்டது. அந்த வகையில் இலங்கைக்கென மட்டும் விஷேடமான கொள்கையாக பின்பற்றப்படவில்லை.
உண்மையில் பிரித்தானியாவை விமர்சிப்பதாயின் ஒரு விடயத்தை முக்கியப்படுத்தி விமர்சிக்கலாம். அது பிரித்தானியா விட்டுச் சென்ற அரசியலமைப்பாகவே இருக்கும். அதாவது பிரித்தானியா இலங்கையை விட்டு வெளியேறும் போது சோல்பரி அரசியலமைப்பை விட்டுச் சென்றது. இந்த அரசியலமைப்பில் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கென தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவே பிரித்தானியா கருதியது.
குறிப்பாக தமிழர்களின் உரிமைகள் இதன்மூலம் பாதுகாக்கப்படும் என்றே பிரித்தானியா எண்ணியது. ஆனால் அந்த ஏற்பாடு போதுமானதல்லஇ வலுவானதல்ல என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. பிரித்தானியாவின் தாராளக் கொள்கை இவ்வளவு தூரம் பிரச்சினைகளுக்குக் காரணமாகிவிட்டன. இதற்காக நான் மனவருத்தமடைகின்றேன்.
பிரித்தானிய மண்ணில் புலிகள் பயங்கரவாதத்தில் ஈடுபடவில்லை
கேள்வி: விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை பிரித்தானியா கொண்டு வருவதற்கு ஏதுவாக பிரித்தானிய மண்ணில் விடுதலைப் புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனரா?
பதில்: பிரித்தானிய மண்ணில் விடுதலைப் புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
அவ்வாறு செய்வதென்பது முட்டாள்தனமான விடயமாகவே அமையும்.
ஆனால் பிரித்தானிய பிரைஜைகள் இலங்கை மண்ணில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளிலும் சிக்குப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் பிரித்தானியப் பிரைஜைகள் என்ற வகையில் பிரித்தானியாவின் கவனமும்இ கவலையையும்இ அக்கறையையும் எமது பிரஜைகள் மீது நேரடியாகவே மேற்கொள்ள வேண்டியுள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்புகூட தொண்டர் நிறுவனமொன்றில் பணிபுரியும் பிரித்தானிய பிரஜைகள் இருவர் திருகோணமலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் சிக்கியுள்ளனர்.
எனவே பிரித்தானியப் பிரஜைகள் பாதிக்கப்படுவதை எம்மால் கண்களை மூடிக்கொண்டு பேசாமல் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
பலாத்காரமாக நிதி சேகரிப்பு
இது மாத்திரமல்ல பிரித்தானியாவில் வாழும் தமிழ்ச் சமூகம் நிதி சேகரிக்கும் விடுதலைப்புலி உறுப்பினர்களால் நிதி வழங்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். பயமுறுத்தவும் படுகின்றனர்.
சட்டத்துக்கு முரணான இத்தகைய நடவடிக்கைகளின் பின்னணியில் விடுதலைப் புலிகள் இருப்பதாக பிரித்தானியா சந்தேகிக்கின்றது.
விடுதலைப் புலிகள் பிரித்தானிய மண்ணில் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடாவிட்டாலும் கூட பிரித்தானியாவில் வாழும் தமிழ்ச் சமூகத்தினரிடையே பயமுறுத்தல் மற்றும் நிர்ப்பந்தம் மூலம் நிதி சேகரிப்பது போன்ற சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளை எம்மால் அனுமதிக்க இயலாது.
அரசு என்ற வகையில் இவ்வாறான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய தேவை பிரித்தானியாவுக்கு உள்ளது.
அரசுக்கான செய்தி
கேள்வி: விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடைமூலம் இலங்கை அரசாங்கத்துக்கு பிரித்தானியா எத்தகைய செய்தியைத் தெரிவிக்க விரும்புகின்றது.
பதில்: விடுதலைப் புலிகள் உட்பட இலங்கையின் சகல மக்களினதும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்காக பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்பதே அரசாங்கத்திற்கான செய்தியாகும்.
இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவுடன் பிரிட்டன் இணைந்துள்ளது
கேள்வி: பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் அதேவேளையில் அமெரிக்காவுடன் மிக நெருக்கமான உறவையும் கொண்டுள்ளது.
இலங்கையின் இனவிவகாரத்தில் பிரித்தானியா ஐரோப்பிய யூனியனின் நிலைப்பாட்டிலா அல்லது அமெரிக்காவின் நிலைப்பாட்டுடனா ஒத்துப்போகின்றது?
பதில்: இந்தக் கேள்வியை பிரித்தானியாவின் வெளிநாட்டுக் கொள்கை வகுப்பாளரிடம் பலர் வினவுகின்றனர். பிரித்தானியா ஐரோப்பிய யூனியனின் அங்கத்துவ நாடு என்ற வகையில் ஐரோப்பிய யூனியனுடனா அல்லது அமெரிக்காவுடனா சார்ந்து நிற்கின்றது என்பதே அந்தக் கேள்வியாகும்.
பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் ஒரு நாடு அதன் காரணமாக ஐரோப்பிய யூனியன் எடுக்கும் தீர்மானங்களுக்கு பிரித்தானியா ஆதரவாகவேயுள்ளது.
அமெரிக்கா உலகளாவிய ரீதியில் காலத்துக்குக் காலம் பிரித்தானியாவை விட மாறுபாடான கொள்கைகளைக் கொண்டுள்ளது. எனினும் இலங்கையின் இனவிவகாரத்தில் பிரித்தானியா அமெரிக்காவின் கொள்கைகளுடன் ஒத்துப்போவதாகவே உள்ளது.
ஒஸ்லோப் பிரகடனம் சமஷ்டி பற்றி கூறுகின்றது
கேள்வி: தமிழர்களுக்கு எவ்வாறான அரசியல் தீர்வினை பிரித்தானியா முன்வைக்க விரும்புகின்றது?
பதில்: வெளியார் என்ற வகையில் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. எவ்வகையான தீர்வுக்கு வரவேண்டுமென இலங்கை மக்களுக்கு நாம் கூறும் நிலையிலும் இல்லை.
ஆனால் இரு பகுதியினரும் இனவிவகாரத்துக்கான தீர்வு குறித்து பேச்சுவார்த்தை மூலம் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முயற்சிக்க வேண்டும் என்றே எம்மால் இலங்கை மக்களையும் விடுதலைப் புலிகளையும் கேட்டுக்கொள்ள முடியும்.
இரு பகுதியினரும் இறுதியில் திருப்திப்படும் நிலை உருவாக வேண்டும். இன்றைய இந்த நிலைமை தொடர இரு பகுதியினருமே அனுமதிக்கக்கூடாது. இலங்கை அரசும் புலிகளும் சமாதானத்துக்காகத் தம்மை அர்ப்பணித்துச் செயற்பட முன்வரவேண்டும். ஏதோ ஒரு வழயில் இரு பகுதியினருமே அமைதிக்கும் சமாதானத்துக்கும் திரும்பியாக வேண்டும். அதைத் தவிர வேறு வழியில்லை.
அந்த வகையில் அரசியலமைப்பு ரீதியாக மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இது குறித்து எம்மால் அதிகமாகக் கூறமுடியாவிட்டாலும் கூட 2002 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒஸ்லோ பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வை நோக்கி முன்னேற வேண்டுமென்பதே பிரித்தானியாவின் நிலைப்பாடாகும்.
ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சமஷ்டி முறை குறித்த தீர்வு பற்றிக் கூறுவதாக ஒஸ்லோ உடன்படிக்கை அமைந்துள்ளது.
இலங்கை விவகாரம் இந்தியாவை பாதிக்கின்றது
கேள்வி: இலங்கையின் இன விவகாரங்களில் இந்தியாவின் ஈடுபாடு அண்மைக் காலமாக அதிகரித்துச் செல்கின்றது. இது பற்றிய தங்களது கருத்தென்ன?
பதில்: இந்தியாவின் ஈடுபாடு அண்மைக் காலமாக அதிகரித்து வருவது உண்மையே. இலங்கையின் இனவிவகாரம் குறித்தும் இலங்கையில் நடைபெறும் சம்பவங்கள் குறித்தும் இந்தியா அதிக கவனம் செலுத்துவது பற்றியும் ஈடுபாடு காட்டுவது பற்றியும் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை.
ஏனெனில் இலங்கையின் இனவிவகாரமும் அதனை ஒட்டிய சம்பவங்களும் இலங்கையில் மாத்திரமல்ல இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இலங்கையில் இருந்து அகதிகளாக மக்கள் தமிழ்நாட்டுக்குச் செல்கின்றனர். இது தமிழக அரசியலிலும் இந்தியாவின் மத்திய அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இந்தியாவின் நலன்களையும் அது பாதிக்கின்றது.
அதனால் மனிதாபிமானம்இ மனித உரிமை மீறல் போன்ற பல் வேறு விடயங்களில் இலங்கையில் வாழ்கின்ற சகல மக்களினதும் விடயங்களில் இந்தியா அக்கறை கொள்ள வேண்டியுள்ளது.
குறிப்பாக வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் குறித்து இந்தியாவின் கவனம் கூடுதலாக ஈர்க்கப்படுகின்றது. வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இனரீதியில் தமிழகத்துடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இலங்கையின் இனவிவகாரம் இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அவ்வகையில் இலங்கையின் விவகாரங்களில் இந்தியாவின் அக்கறைஇ கவனம்இ ஈடுபாடு என்பன தவிர்க்க முடியாததாகும்.
கடந்த வாரம் இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். அந்த விஜயம் கூட இலங்கையின் சமகால அரசியல் நிலவரத்தின் தாக்கம் காரணமாகவும்இ இலங்கை விவகாரங்களில் இந்தியா கொண்டுள்ள கரிசனை காரணமாகவுமே இடம்பெற்றதாகும்.
இலங்கையில் இன விவகாரத் தீர்வு குறித்த சமாதான நடவடிக்கைகளில் இந்தியா முற்று முழுதாகவே சாதகமான போக்கி னைக் கொண்டதாகவே உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
ஐ.ஆர்.ஏ. அனுபவம்: பகிர்ந்துகொள்ள தயார்
கேள்வி: ஐரிஸ் விடுதலை இராணுவத்தின் (ஐ.ஆர்.ஏ) கொரில்லாப் போராட்டத்துடுனான 30 வருடகால அனுபவத்தை பிரித்தானியா கொண்டுள்ளது. இந்தப் போராட்ட வரலாற்றில் சமாதானம் குறித்த அனுபவங்களை இலங்கை அரசாங்கத்துடனும்இ விடுதலைப் புலிகளுடனும் பகிர்ந்து கொள்ள பிரித்தானியா முன்வருமா?
பதில்: ஆம்இ பிரித்தானியா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கின்றது. வட அயர்லாந்து விடயம் குறித்து அதில் உள்ள முக்கியமான ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
வட அயர்லாந்தில் சிறுபான்மை இனச் சமூகம் பெரும்பான்மை இனச் சமூகத்தினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் போன்ற சம்பவங்களினால் பாதிக்கப்பட்டனர்.
இதற்கெதிராக சிவில் அமைப்புகள் ஜனநாயக வழிமுறைகளில் போராடிய போதும் அத்தகைய போராட்டங்கள் அடக்கி ஒடுக்கி நசுக்கப்பட்டன. இந்த நிலைமையானது ஐ.ஆர்.ஏ அமைப்பு உருவாகுவதற்கும்இ பயங்கரவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கும் காரணமாகின.
சுமார் இருபது முப்பது வருடகால பயங்கரவாத நடவடிக்கைகள் ஐ.ஆர்.ஏ. இயக்கத்துடன் இணைந்திருந்த மக்களும்இ அரசாங்கத்துக்குச் சார்பான மக்களும்இ வட அயர்லாந்தின் பெரும்பான்மை இனச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் என அனைவரையும் சிந்திக்க வைத்தது.
இழப்புக்கள்இ அழிவுகள் அனைத்தும் போதும் போதும் என்ற நிலைக்கு அனைத்து தரப்பினரையும் தள்ளியது. அத்துடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வைக் கண்டாக வேண்டுமென்ற நிர்ப்பந்தத்திற்கும் அனைத்து தரப்பினரும் உள்ளாகினர். அதன் விளைவு பேச்சுவார்த்தை மூலம் அமைதி பிறந்தது.
இலங்கையின் தற்போதைய சூழ்நிலையும் அதைப் போன்றதே. அழிவுகளும்இ இழப்புக்களும் போதும்இ இனியும் வேண்டாம் என்ற நிலையில் இருக்கின்ற இலங்கையின் இன்றைய யதார்த்த நிலையைக் கவனத்தில் எடுத்து விடுதலைப் புலிகள் மாத்திரமல்ல அரசாங்கமும் பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு முன்வரவேண்டும்.
இன்னும் பத்து வருடங்களுக்குப் பிறகு தவறவிட்ட சந்தர்ப்பங்களுக்காக வருத்தமடைவதை விடுத்து கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முன்வரவேண்டும்.
கேள்வி: ஐ.ஆர்.ஏ. பிரதிநிதி அண்மையில் கிளிநொச்சிக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது விடுதலைப் புலிகளை ஐரோப்பிய யூனியன் தடைசெய்ததை விமர்சனம் செய்திருந்தார்இ ஐரோப்பிய யூனியன் அங்கத்துவ நாடு என்ற வகையில் இந்த விமர்சனம் குறித்து தங்களது கருத்து என்ன?
பதில்: கிளிநொச்சிக்கு சென்றிருந்த மாட்டின் மெக்கின்னஸ் மேற்படி கருத்தினை வெளியிட்டிருந்தார். ஒரு பயங்கரவாத அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரும்இ ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்த மூத்த அரசியல்வாதியுமான ஒரு முக்கியஸ்தர் கிளிநொச்சிக்கு மேற்கொண்ட விஜயம் இது.
அவரது கருத்துக்கள் அவரின் பார்வையில் முக்கியமானதும்இ விளங்கிக் கொள்ளக் கூடியதுமாகும். விடுதலைப் புலிகள் ஜெனிவாவில் இருந்து இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு திரும்புவதாகக் கூறியே இலங்கை வந்தனர். ஆனால் இரண்டாம் கட்ட ஜெனிவாப் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
ஐ.ஆர்.ஏ. செய்தது போலவே விடுதலைப் புலிகளும் ஒருபுறம் வெளிப்படையான வன்முறைகளில் ஈடுபட்டுக்கொண்டும் மறுபுறம் பேச்சுவார்த்தைகளிலும் கலந்து கொண்டனர்.
விடுதலைப் புலிகளின் இந்தகைய போக்கினை ஐரோப்பிய யூனியன் ஒருபோதும் கருத்தில் கொள்ளவில்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இறுதியில் விடுதலைப் புலிகளை ஐரோப்பிய யூனியன் தடைசெய்து விட்டது.
ஐ.ஆர்.ஏ. போன்று பேச்சுவார்த்தை மூலமான தீர்வு குறித்த பாதைக்கு முற்று முழுதாகத் திரும்புவதற்கு விடுதலைப் புலிகளுக்கு இன்னும் சந்தர்ப்பம் உள்ளது.
அவ்வாறு திரும்பினால் புலிகள் மீதான தடையை நீக்குமாறு அல்லது மீள்பரிசீலனை செய்யுமாறு ஐரோப்பிய யூனியனை பிரிட்டனால் கேட்க முடியும்.
வன்முறை கலந்த பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவே தடை
கேள்வி: பிரித்தானியா விடுதலைப் புலிகளை ஏற்கனவே தடைசெய்துள்ளது. தற்போது ஐரோப்பிய யூனியனும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையைக் கொண்டு வந்துள்ளது. மேற்படி தடை மூலம் பிரித்தானியா விடுதலைப் புலிகளுக்கு கூறவிழையும் செய்தி என்ன?
பதில்: பிரித்தானியா விடுதலைப் புலிகளை ஐந்து வருடங்களுக்கு முன்பே அதாவது 2001 ஆம் ஆண்டிலேயே தடை செய்துவிட்டது. ஐரோப்பிய யூனியன் தற்போதே விடுதலைப் புலிகளுக்கெதிரான தடையைக் கொண்டுவந்துள்ளது. தடைமூலம் பிரித்தானியா கூற வரும் செய்தி எளிமையானது. அந்தச் செய்தி இதுதான். விடுதலைப் புலிகள் தமது அரசியல் அபிலாஷைகளையும் குறிக்கோளையும் அடைந்துகொள்வதற்கெனத் தேர்ந்தெடுத்துள்ள வழிமுறைஇ நடைமுறைச் செயற்பாடுகள் என்பன வன்முறை கலந்த பயங்காரவாத நடவடிக்கையாக உள்ளன. இதனை பிரித்தானியாவாலும் ஐரோப்பிய யூனியனாலும் ஏன் பரவலாக சர்வதேச சமூகத்தினாலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
நவீன இன்றைய யுகத்தில் மேற்கூறிய வாறான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கின்ற இயக்கத்திற்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
தமிழர்களுக்கான சுயாட்சி இரு பகுதியினரதும் இணக்கப்பாட்டில் தங்கியுள்ளது
கேள்வி: ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கான சுயாட்சிக்கான உரிமையை பிரித்தானியா அங்கீகரிக்கின்றதா?
பதில்: நீங்கள் சுதந்திர அரசு பற்றியா கேள்வி எழுப்புகின்றீர்கள்?
இல்லை சுயாட்சி பற்றிய உரிமை பற்றியே கேட்கின்றேன்
பதில்: சுயாட்சி அரசு என்பது குறித்து பல கேள்விகள் எழும்புகின்றன. இது குறித்து வெளியாரான நான் திட்டவட்டமாக எதனையும் கூற இயலாது. சம்பந்தப்பட்ட இரு பகுதியினரும் பேச்சுவார்த்தை மூலம் தமிழர்களுக்கான சுயாட்சி குறித்த இணக்கப்பாட்டுக்கு வருவார்களாயின் வரவேற்கத்தக்கது. சுயாட்சி குறித்து பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
பிரித்தானியாவில் அகதிகளின் விண்ணப்பங்கள் தனித்தனியாகவே பரிசீலிக்கப்படுகின்றன
கேள்வி: பிரித்தானியாவில் அகதிகள் அந்தஸ்து கோரி விண்ணப்பித்துள்ள 35 ஆயிரம் பேரினது விண்ணப்பங்களை நிராகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர்களது எதிர்காலம் என்ன? இலங்கையின் இன்றைய மோசமான சூழ்நிலைக்குள் அவர்கள் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவார்களா?
பதில்: அகதிகள் அந்தஸ்த்து கோரி விண்ணப்பித்துள்ளவர்களின் விண்ணப்பங்கள் தனித்தனியாக ஆராயப்படுகின்றன. அது ஒரு நீண்ட நீதிமன்ற நடவடிக்கைக்குட்பட்டது. எவராவது இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவார்களாயின் அவ்வாறானவர்களின் விண்ணப்பத்தில் திருப்தி இல்லை என்பதுதான் அர்த்தம்.
கேள்வி: 35 ஆயிரம் பேர் திருப்பி அனுப்பப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளனவே.
பதில்: அவ்வாறு எண்ணிக்கையில் பெரிதளவாக இருக்காது. ஒரு சிறிய தொகையினர்களே இதற்குட்பட்டவர்கள்.
மலையகத் தமிழரின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு இலங்கை அரசே பொறுப்பு
கேள்வி: மலையகத் தமிழ் மக்கள் பிரித்தானிய காலணி ஆதிக்கத்தின் கீழ் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டவர்களாகும். இம் மக்களது வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற பிரித்தானியா திட்டம் எதனையும் கொண்டுள்ளதா?
பதில்: இலங்கை சுதந்திரம் அடைந்து 60 வருடங்களுக்குப் பிறகு மலையகத் தமிழர்கள் குறித்து நேரடியாகத் தலையிடும் பொறுப்பு பிரித்தானியாவுக்கு இல்லை. ஆனால் அம் மக்களின் வாழ்க்கை முறை மேம்பாடடைய வேண்டுமென விரும்புகின்றோம்.
இந்த மக்களின் மேம்பாடுஇ அபிவிருத்தி குறித்து எம்மிடம் மாறுபாடான கருத்துக்கள் இல்லை. உண்மையில் இதற்கான பொறுப்பை இலங்கை அரசாங்கமே ஏற்கவேண்டும்.
எனினும் மலையகத் தமிழ் மக்களின் மேம்பாடு குறித்து அரசாங்கத்துடன் பேசுவதற்கு நாம் பின்நிற்கவில்லை.
கேள்வி: மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பிரித்தானியாவில் கல்வியைத் தொடர்வதற்கு ஏதுவாக விஷேட புலமைப்பரிசில் திட்டம் முன்னெடுக்கப்படுமா?
பதில்: இது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய கேள்வி. இதற்கு நேர்மையான பதில் இதுவே.
தற்போது இலங்கையர்களுக்கென ஒரு குறைந்தளவிலான புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தையே நாம் கொண்டுள்ளோம். புலமைப்பரிசில் மிகவும் செலவு கூடியதொன்று. கஷ்டப்படுகின்ற சமூகத்தினர் உயர்கல்வி பெறுவதற்கான பிரத்தியேகமாக எதாவது செய்ய வேண்டுமா என்பது குறித்து நாம் சிந்திக்கலாம். (சிந்திப்போம்)
கேள்வி: இராணுவம் கட்டுப்பாட்டுடன் ஒழுக்கத்தைப் பேண வேண்டுமென அண்மையில் கூறியிருந்தீர்கள். அதன் பொருள் என்ன?
பதில்: இது ஒரு புரட்சிகரமான அறிக்கையாக நான் நினைக்கவில்லை. அரச படைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சிவிலியன்கள் சம்பந்தப்பட்டதாகும். குறிப்பாக தமிழ் மக்களுடன் தொடர்புபட்டவைகளாகும்.
இன்றைய உலகில் மீறல்களே இருக்கக் கூடாது என அரசாங்கத்திடம் நாம் எதிர்பார்க்கவில்லை. அது முழுமையாக நடைமுறைச் சாத்தியமற்றது.
ஆனால்இ மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் ஒழுங்கான முறையில் முறையாக சட்டத்திற்கமைய விசாரிக்கப்பட வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இதனையே நாம் எமது நாட்டில் இராணுவம் மற்றும் பொலிஸார் குறித்து மேற்கொள்கின்றோம். எவராக இருந்தாலும் சட்டத்தின்முன் சமமாகும். இல்லையேல் நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிடும். இதனையே செய்தியாக அரசுக்கு நாம் கூறுகின்றோம்.
கேள்வி: நீங்கள் விஷேடமாக ஏதும் கூற விரும்புகின்றீர்களா?
பதில்: ஆம்
எனது இளமைக் காலத்தில் இரண்டு விடயங்கள் குறித்துப் பெரிதாகப் பேசப்பட்டது.
1. பனிப்போர்
2. ஐரிஸ் பயங்கரவாதம்
இந்த இரு விடயங்களும் என்றுமே முடிவுக்கு வராது என்று அப்போது நாம் நினைத்திருந்தோம். இந்த இரு பிரச்சினைகளையும் எவ்வாறு தீர்க்கலாம் என்பது குறித்த எந்த யோசனையும் அப்போது இருக்கவில்லை.
அவ்வேளையில் திடீரென பேர்லின் பெருஞ்சுவர் வீழ்ந்து எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதேபோல் ஐரிஸ் விடுதலை இராணுவம் யுத்த நிறுத்தத்தைப் பிரகடனப்படுத்தி தேசிய நீரோட்டத்தில் இணைந்து அரசியல் கட்சியாக உருமாற்றிக்கொண்டது.
பனிப்போர் மற்றும் ஐரிஸ் பயங்கரவாதம் ஆகிய இரு விடயங்கள் குறித்த அனுபவங்கள் நம்பிக்கையை என்றும் இழக்கக் கூடாது என்ற படிப்பினையை எனக்குத் தந்தது.
நாம் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கும் போது அது எவ்விதம் முடிவுக்கு வரும் என்று எண்ணிப்பார்ப்பது கடினமாக இருக்கும்.
ஆனால் முடிவு என்று ஒன்று வரும். எதுவுமே நிலைத்து நீடிப்பதில்லை.
இதுவே இலங்கையின் நிலைமையுமாகும். ஒரு நிலையில் வன்முறைகள் முடிவுக்கு வரும் வகையிலான ஒரு அரசியல் தீர்வு இலங்கையிலும் வரும்.
இலங்கையில் விவகாரத்துடன் சம்பந்தப்பட்டவர்களின் முன்னால் உள்ள கேள்வி யாதெனில் மேற்கூறிய நிலைக்கு இன்றே வந்துவிட்டோம் என்று சொல்வதற்கு அவர்கள் தயாராகிவிட்டனரா? அல்லது மேலும் சில வருடங்களுக்கு இதே வன்முறைப் பாதையில் சம்பந்தப்பட்ட இரு பகுதியினரும் தொடர்ந்தும் சென்று அதன் பின்னர் ஒரு அரசியல் தீர்வை அடையப்போகின்றனரா என்பதே அந்தக் கேள்வியாகும்.
சம்பந்தப்பட்ட இரு பகுதியினரும் குறிப்பாக விடுதலைப் புலிகள் வன்முறைகள் மூலம் அடையக்கூடியதை விட பேச்சுவார்த்தை மூலம் அடைந்து கொள்வது அதிகமானது என்ற நிலையை எட்டிவிட்டனர் என்பதையும் அடைந்துவிட்டார்கள் என்பதையும் உணர்ந்துகொள்வார்கள்.
அத்துடன் பிரச்சினையை முடிவுக்குக்கொண்டு வருமுகமாக சரியானதொரு பேரத்தைப் பேசுவதற்கான தருணம் தற்போது வந்துள்ளதென்பதை இரு பகுதியினரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment