02 July, 2006

இந்தியாவுக்கு புலிகள் சொல்ல நினைத்தது என்ன?

-கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன்- * இந்தியத் தொலைக்காட்சிப் பேட்டி ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள்.... நாட்டில் சொல்லிக் கொள்ளத்தக்க நம்பிக்கையூட்டும் அபிவிருத்திகள் எதுவும் ஏற்பட்டிராதபோதும் அரசியலும் அதைச் சுற்றியுள்ள ஏனைய மூலக்கூறுகளும் விரைவாகவே நகரத் தொடங்கியுள்ளன. அதன் காரணமாக இந்த நாடகத்தின் காட்சிகள் வேகமாக மாறத் தொடங்கியுள்ளன. ஒரு காட்சியின் முக்கியத்துவம் மனதில் பதியுமுன் மறுகாட்சி வந்து போவதால் எல்லாம் மறைக்கப்பட்டு விடலாம். உடனடி நிலையில் மாபெரும் காட்சிபோல் தோற்றமளித்த பாரமி குலதுங்கவின் மரணம் கூட ஒரு வாரத்திற்கு மேல் நினைவிலிருக்குமா என்பது சந்தேகமே. இந்த வேகம் எங்கு போய் நிற்குமோ என்பது சுவாரஸியமானது மட்டுமல்ல இச்சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியதாகவும் இருக்கும். கண்காணிப்புக் குழுவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நோர்வே கூட்டத்தின் முக்கியத்துவத்தை இரண்டாந்தரத்திற்குத் தள்ளிவிட்டு பாலசிங்கத்தின் ராஜீவ் காந்தி கொலை பற்றிய நேர்காணல் ஊடகத் தலைப்புகளை தனதாக்கிக் கொண்டுள்ளது. இது மிக முக்கியத்துவமுடைய ஒரு `பிரச்சினை' என்பதால் பத்திரிகைத் தலைப்புகள் வேறு பிரச்சினைக்கு தாவுவதற்கு முன்னர் அதுபற்றி சற்றே நோக்குவது பொறுத்தமானதாயிருக்கும். கடந்த வாரம் இந்தியத் தனியார் தொலைக்காட்சிசேவை ஒன்றிற்கு செவ்வி ஒன்றை வழங்கிய அன்டன் பாலசிங்கம், ராஜீவ் காந்தியின் கொலைக்கு மன்னிப்புக் கோரியிருப்பதாக சர்வதேச மற்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இச்செய்திகளின்படி புலிகள் கொலையைத் தாமே செய்ததாக பொறுப்பேற்றிருப்பதுடன் அதற்காக மன்னிப்பும் கோரியிருப்பதாகவும் கூறப்பட்டது. அதேசமயம், இது பற்றிக் கருத்துக்கூறிய ஊடகங்களும் ஆய்வாளர் பலரும் பேட்டியையோ அல்லது அது பற்றிய முழுமையான அறிக்கையையோ பாராது தலையங்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டதாகவே கருத வேண்டியுள்ளது. ஏனெனில் பாலசிங்கத்தின் கருத்துகள் சரியான வகையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இத்தகைய பின்னணியில் தற்போது பாலசிங்கத்தின் பேட்டியில் கொலை புலிகளால் செய்யப்பட்டது என ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளதாக இந்து செய்தி வெளியிட்டுள்ளது. இது பாலசிங்கத்தின் பேட்டி தொடர்பில் மேலதிக சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பதுடன் பேட்டியை முழுமையாக நோக்க வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாலசிங்கத்தின் இச்செவ்வி பற்றிய முழுமையான அறிக்கை ஒன்று தமிழ்நெட் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இவ்வறிக்கையில் இருந்து புலப்படுவது என்னவெனில் செவ்வியில் நான்கு முக்கியமான விடயங்கள் கூறப்பட்டிருந்தன என்பதாகும். அவையாவன: (1) காந்தியின் கொலை தொடர்பில் புலிகள் வருந்துகின்றனர். (2) எச்சந்தர்ப்பத்திலும் இந்தியாவின் நலன்களுக்கு எதிரான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்ற உத்தரவாதம், (3) சமாதான செயன்முறையிலான இந்தியாவின் மேலதிக தலையீட்டுக்கான கோரிக்கை, (4)இந்திய சமஷ்டியை ஏற்றுக்கொள்வதற்கான விருப்பம். இந்நான்கு விடயங்களையும் தனித்தனியாக நோக்குவதற்கு முன், தற்போது ஏற்பட்டுள்ள புலிகள் கொலையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளனரா இல்லையா என்ற சர்ச்சையை நோக்குவது பொருத்தமானது. பாலசிங்கம் தனது செவ்வியில் ராஜீவ் காந்தியின் கொலையை நாமே செய்தோம் அல்லது புலிகளே செய்தனர் என்று எந்த இடத்திலும் கூறியிருக்கவில்லை. எனவே, தயா மாஸ்டர் கூறுவது போன்று கொலைக்கான பொறுப்பு ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது சரியாக இருக்கலாம். இருப்பினும், பாலசிங்கம் இக்கால வரலாற்று நிகழ்வுகளை அடுக்கி வந்த விதமும், கொலை ஒரு மாபெரும் தவறு என்று கூறிய விதமும், அதன் பின்னர் அந்நிகழ்விற்காக தாம் வருந்துவதாகக் கூறிய விதமும் கொலையின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் தோற்றப்பாட்டினை ஏற்படுத்துகின்றது என்பதில் சந்தேகமில்லை. பேட்டியின் இறுதியில் கொலையின் பொறுப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற முடிவிற்கு ஒருவர் வருவாராயின் அது பார்வையாளரின் தவறு எனக் கூறமுடியாது. எனவே, தாம் என்ன கூறிவருகின்றோம் என்பதை சரியாகவும் தெளிவாகவும் கூறவேண்டியது புலிகளின் பொறுப்பாகும். இனி மேற்கூறிய நான்கு விடயங்கள் பற்றி நோக்கலாம். முதலில் பாலசிங்கம் `மன்னிப்பு' என்ற வார்த்தையை உண்மையில் பயன்படுத்தியிருக்கவில்லை. மாறாக, `வருந்துகின்றோம்' என்ற பதமே பயன்படுத்தப்பட்டிருந்தது. அதேசமயம், ராஜீவ் காந்தியின் கொலை ஒரு `மாபெரும் வரலாற்று அவலம்' என்று கூறியுள்ளதன் மூலம் தனது கவலையை வெளிப்படுத்த பாலசிங்கம் முயற்சி செய்துள்ளார். இதை மட்டுமே வைத்துக் கொண்டு புலிகள் மன்னிப்புக் கோரியுள்ளனர் எனக் கூறுவது எவ்வளவு சரியானது என்பது நிச்சயமானதல்ல. புலிகளின் `மன்னிப்பை' நிராகரித்துள்ள இந்திய அரசாங்க பேச்சாளர் ஒருவர் மன்னிப்பு பாரதூரமான ஒரு முறையில் முன்வைக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் கோபத்தை தனிப்பதற்காகக் கூறப்பட்ட இன்னுமோர் விடயம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இந்திய நலன்களுக்கு எதிராக புலிகள் இயக்கம் செயற்பட மாட்டாது என்ற உத்தரவாதம் ஆகும். முதலில் கூறப்பட்டுள்ள விடயத்துடன் ஒப்பிடுகையில் இந்திய நலன்களுக்கு எதிராக செயற்படுவதில்லை என்கின்ற உத்தரவாதம் கூடுதல் நம்பகத் தன்மை உடையதாக உள்ளது எனப்படலாம். ஏனெனில், அண்மைக் காலத்தில் புலிகளின் செயற்பாடுகள் எதுவும் இந்தியாவுக்கு எதிராக அமைந்திருந்தன எனக் கூறமுடியாது. அதேசமயம், இந்தியாவுடன் சுமுகமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. உதாரணமாக 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கிளிநொச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலும் இதேவிதமான உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்ததுடன் புதிய உறவுக்கான விருப்பமும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அச் சந்தர்ப்பத்தில் உத்தரவாதமும் வேண்டுகோளும் இந்தியாவால் நிராகரிக்கப்பட்டிருந்தது. இம்முறையும் அதேவிதமான ஒரு ஆரம்ப வெளிப்பாடே தென்படுகின்ற போதும் உண்மையான எதிர் நடத்தை எவ்விதம் இருக்கும் என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டும். மூன்றாவதாக, இந்தியா சமாதான செயன்முறையில் முக்கியமான ஒரு பங்கை வகிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது உண்மையில் இந்தியா இப்பொழுது கடைப்பிடிக்கின்ற நேரடியாகத் தலையிடாதிருக்கின்ற கொள்கையை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றதொனியில் கூறப்பட்டுள்ளது. ஏனெனில், இந்தியா தனது பங்கை அதிகரிக்க வேண்டும் என்று கூறப்பட்ட அதேசமயத்தில் புலிகளுடன் சிறந்ததொரு உறவு இல்லாது இந்தியா ஒரு மத்தியஸ்தராக செயற்பட முடியாது என்றும் பாலசிங்கம் கூறியுள்ளார். இதன் கருத்து இந்தியாவின் தலையீடு அதிகரிப்பதற்கு முன்னர் புலிகளுடனான உறவு சீர்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். அதேசமயம், புலிகளுக்கு எதிராக காணப்படுகின்ற தடை போன்றவற்றின் மத்தியில் உறவு சீர்செய்யப்படுவது சாத்தியமானது அன்று. எனவே, மத்தியஸ்தமும் சாத்தியமானதன்று. அதன் காரணமாகவே பாலசிங்கம் மோதல் தரப்பினர் மீது இந்தியா அரசியல் மற்றும் இராஜதந்திர அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி இராணுவ ரீதியாக தலையிடக் கூடாது எனக் கோரி உள்ளார். உண்மையில் பாலசிங்கத்தின் செவ்வியின் அடிப்படை நோக்கமே இந்தியா எதிர்காலத்தில் இராணுவ ரீதியாக தலையிடக் கூடாது என வலியுறுத்துவதே எனவும் கருதப்படலாம். பாலசிங்கத்தின் செவ்வியில் போதுமான கவனத்தைப் பெறாத ஆனால் சமாதான முயற்சிகளுடன் தொடர்புபட்ட முக்கியமானதொரு விடயம் அவர் இந்திய சமஷ்டி பற்றிக் கூறியுள்ள கருத்து ஆகும். 1980 களில் முன்வைக்கப்பட்ட அதிகாரப் பகிர்வுத் திட்டம், அதாவது மாகாண சபை முறைமை, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாய் அமைந்திருக்கவில்லை. ஆயினும் இந்திய சமஷ்டி போன்றதொரு திட்டம் முன்வைக்கப்பட்டிருக்குமாக இருப்பின் அதனைத் தாம் ஏற்றுக் கொண்டிருக்கலாம் என அவர் கூறியுள்ளார். இந்நிலைப்பாடு இன்றும் பொருந்துமா என்பது பற்றி எதுவும் தெளிவாகக் கூறப்படவில்லை. எனினும், இதனை அடிப்படையாகக் கொண்டு புலிகள் இந்திய சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றிற்கு தயாராக உள்ளனர் எனக் கூறப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அது ஆனந்தசங்கரியின் நிலைப்பாட்டிற்கும் புலிகளின் நிலைப்பாட்டிற்கும் அதிக வேறுபாடுகள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி விடலாம். எனினும் இந்திய முறைமை பூரணமான ஒரு சமஷ்டி அல்ல. அதிலும் ஒற்றையாட்சியில் பண்புகளே அதிகம் காணப்படுகின்றன. இந்தியாவில் காணப்படுகின்ற அரசியல் யதார்த்தங்கள் காரணமாகவே அது ஒரு சமஷ்டி போன்று செயற்படுகின்றது என்பவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இவற்றிற்குப் புறம்பாக பாலசிங்கத்தின் செவ்வி தொடர்பில் ஏற்படுகின்ற முக்கியமானதொரு கேள்வி, இவ்விடயங்கள் ஏன் தற்போது கூறப்பட்டுள்ளன என்பதாகும். ஏனெனில், அது ஒரு விசப்பரீட்சையே எனப்படலாம். குறிப்பாக தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு சார்பான ஒரு அபிப்பிராயம் ஏற்பட்டு வருகின்ற நிலையில் ராஜீவ்காந்தியின் கொலைக்கான பொறுப்பை நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ ஏற்றுக் கொள்வது அவ் ஆதரவு தளத்தை பலவீனப்படுத்தி விடக்கூடும். இனி சில அரசியல் தலைவர்கள் புலிகளை நேரடியாக ஆதரிக்க தயங்கக் கூடும். அத்துடன் இச் செய்தியின் காரணமாக மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு பெரிதும் மாறிவிடும் எனவும் எதிர்பார்ப்பதற்கில்லை. எனவேதான், இச் செவ்வியின் உண்மையான நோக்கம். காந்தி கொலையின் பொறுப்பை ஏற்றுக் கொள்வதோ அல்லது அதற்கு வருத்தம் தெரிவிப்பதோ அல்ல, மாறாக இந்தியா இராணுவ ரீதியாக இலங்கையில் தலையிடக் கூடாது என்று கேட்டுக்கொள்வதே ஆகும் எனக் கருத வேண்டியுள்ளது. இக் கோரிக்கை இந்த நேரத்தில் ஏன் முக்கியமானது? கடந்த தடவை புலிகள் யாழ்ப்பாணத்தை முற்றுகையிட்ட போது இந்தியாவின் இரகசிய தலையீட்டின் காரணமாகவே அது கைவிடப்பட்டதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியக்கூடியதாய் உள்ளது. எனவே, மீண்டுமொரு முறை இம் முயற்சி மேற்கொள்ளப்படுமாயின் அதற்கு தடையாக இந்தியா அமைந்துவிடக் கூடாது என்ற பாரிய ஒரு கரிசனை புலிகளிடையே காணப்படக் கூடும். அதனை உத்தரவாதப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே தற்போது புலிகள் திடீரென இச் செய்தியை வெளியிட்டுள்ளனர் எனவும் கருதப்படலாம். உண்மையில் இது புலிகளால் முன்னெடுக்கப்படக் கூடிய பாரிய ஒரு நடவடிக்கையின் ஆயத்த செயற்பாடாக இருக்கக் கூடும். நன்றி>தினக்குரல்.

0 comments: