13 July, 2006

சிறீலங்கா வங்கிகளிலுள்ள சொத்துக்களை மீளப்பெறுங்கள்!

ஜெனீவா 15.07.06 அன்பார்ந்த புலம்பெயர் தமிழீழ மக்களே, சிறீலங்கா வங்கிகளிலுள்ள உங்கள் சொத்துக்களை மீளப்பெறுங்கள்! புலம்பெயர்ந்தும் - இடம்பெயர்ந்தும் வாழும் தமிழீழ மக்கள் சிறீலங்கா வர்த்தக வங்கிகளில் பாதுகாப்பதற்கென கையளித்த சொத்துக்களை அபகரிக்க சிறிலங்கா புதிய முயற்சிகளினை மேற்கொள்கிறது. 1995-2005 வரை செயற்படாதிருந்த வங்கிக் கணக்குகளின் மீதிகளையும், பாதுகாப்புப் பெட்டகங்களிலுள்ள சொத்துக்களையுமே இவ்வாறு சிறிலங்கா மத்திய வங்கி பறிமுதல் செய்யவுள்ளது.. இதற்காக மத்திய வங்கியின், வங்கிச்சட்ட 72,73ம் பிரிவின் கீழ் 1995-2005 வரை நடைமுறைப்படுத்தப்படாத வங்கிக்கணக்கு, பாதுகாப்புப் பெட்டகச் சொத்துக்களின் விபரங்களை ஒப்படைக்கும்படி வர்த்தக வங்கிகள் அனைத்தையும் மத்தியவங்கி கேட்டுள்ளது. இவ்வாறு மேற்படி கணக்கு மீதிகளும், பாதுகாப்புப் பெட்டகங்களும் சிறிலங்காவின் அரசுடமையாக்கப்பட்டால், அதிலே மிகப்பெருமளவுக்குத் தமிழ் மக்களின் பணமும் சொத்துக்களுமே இழக்கப்படவுள்ளன. தொடர்யுத்தம், இடப்பெயர்வு, புலம்பெயர்வு காரணமாகத் நாம் சிறுகச் சிறுகச் சேமித்து வைப்பிலிட்ட வங்கிக் கணக்குகளையும் பாதுகாப்புப் பெட்டகங்களையும் நடைமுறைப்படுத்தும் வாய்ப்பினைப் பெருமளவு தமிழ் மக்கள் இழந்திருந்தனர். சிறிலங்கா அரசிற்கு தமிழர்களின் மீதான வன்முறையை தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார சுமையை ஈடுசெய்வதற்கு இவ்வாறான ஒரு கைங்கரியத்தினை செய்ய அரசு முனைந்துள்ளது. இவ்வாறு அரசுடமையாக்கப்படும் தமிழ் மக்களினது பணமும் சொத்துக்களும் நிதியாதாரம் தேடியலையும் சிறிலங்காவின் போர் இயந்திரத்துக்கான தீனியாகவே போய்ச் சேரவுள்ளன. தமிழர்களின் நிதித்தேட்டத்தை வைத்தே தமிழர்களை அழிக்கும் இந்தப் புதிய நாசகாரத்திட்டத்தை மகிந்த ராஐபக்ச அரசு புதிய தந்திரோபாயமாக கைகொள்ளுகின்றது. எனவே, இந்தப் பேரபாயத்தைத் தவிர்ப்பதற்காக இடம்பெயர்ந்தும் புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ்மக்கள் அனைவரும், சிறிலங்காவின் வங்கிகளில் தங்களுக்கு உள்ள கணக்கு மீதிகளையும் பாதுகாப்புப் பெட்டகங்களில் உள்ள சொத்துக்களையும் மீளப் பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்துலகத் தமிழர் கூட்டமைப்பு வேண்டிக்கொள்கின்றது. நன்றி.

0 comments: