24 July, 2006

மகிந்தவுக்கு இதயம் இருக்கிறது- மூளை இல்லை: விமல் வீரவன்ச.

தயா மாஸ்டருக்கு சிகிச்சை அளித்திருப்பதன் மூலம் தனக்கு இதயம் இருக்கிறது என்பதை மகிந்த வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் மூளை இல்லை என்று ஜே.வி.பி.யின் பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்ச சாடியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டருக்கு கொழும்பில் சிகிச்சை அளிப்பதன் மூலம் தனக்கு இதயம் ஒன்று இருப்பதாக வெளிப்படுத்த மகிந்த ராஜபக்ச முயற்சித்துள்ளார். ஆனால் உண்மையில் அரசாங்கத்துக்கு மூளை இல்லை என்பதைத்தான் அது வெளிப்படுத்தியிருக்கிறது. தங்களது இதயத்தை வெளிப்படுத்துகிறவர்களுக்கு மூளையும் நன்றாக இருக்க வேண்டும். இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான கொலை முயற்சி, பாரமி குலதுங்க கொலை, கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவத்தின் போது இதைச் செய்திருக்க வேண்டும். அன்ரன் பாலசிங்கத்தின் சிறுநீரக சிகிச்சையின் போது இந்தியா எப்படி நடந்து கொண்டது? அவர்கள் பாலசிங்கத்தின் பயணத்துக்கு அனுமதிக்கவில்லை. ஆனால் இங்கே பிரச்சனையே நல்ல இதயம் இருக்கிறது. மூளை இல்லை. இத்தகைய முட்டாள்தனமான சிந்தனைகள் இனிவரும் காலத்தில் இருக்கக் கூடாது என்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம் என்றார் விமல் வீரவன்ச. நன்றி>புதினம்.

0 comments: