23 July, 2006

முல்லைத்தீவு அருகே மேலும் ஒரு விமானத்தளம்.

முல்லைத்தீவு அருகே மேலும் ஒரு விமானத்தளம் அமைக்க விடுதலைப் புலிகள் திட்டம்?: கொழும்பு ஊடகம் முல்லைத்தீவு அருகே மேலும் ஒரு விமானத் தளத்தை விடுதலைப் புலிகள் அமைக்க திட்டமிடுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகத்தின் செய்தி: கடந்த புதன்கிழமை சிறிலங்கா விமானப் படையினர் வவுனியாவில் அடையாளம் தெரியாத விமானம் ஒன்று இரவு 8.30 மணியளவில் பறப்பதை ராடார் மூலம் அவதானித்துள்ளனர். சிறிலங்கா காவல்துறையினரும் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியியின் மேலாக அடையாளம் தெரியாத விமானம் பறந்த சத்தத்தைக் கேட்டதாகக் கூறியுள்ளனர். முன்னதாக இரவு நேரங்களில் புலிகளின் விமானிகள் இலகு ரக விமான பயிற்சிகளை மேற்கொள்வதாக புலனாய்வுத்துறையினர் தெரிவித்திருந்தனர். தற்போது கெரில்லாப் போராளிகள் பரசூட்டுக்களை இரவு நேரங்களில் பயன்படுத்தி பயிற்சி எடுப்பதாகவும் புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். விமானத் தாக்குதல்களை நடத்துவதற்காக இப்பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அண்மைய விமானத் தாக்குதலில் சேதமடைந்திருந்த புலிகளின் இரணைமடு விமானத்தளம் சீரமைக்கப்பட்டுவிட்டது. 1.4 கிலோ மீற்றர் நீளமுள்ள அந்த விமான தளத்தில் சி-130 ஹெர்குலிஸ் உள்ளிட்ட நடுத்தர விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இருப்பினும் விமான தளத்தின் ஓடுபாதைக்கு அருகாமையில் இருந்த கட்டிடம் பாரிய சேதத்துக்குள்ளானது. அக்கட்டடம் சீரமைக்கப்படவில்லை. மேலும் முல்லைத்தீவு அருகே புதுகுடியிருப்பிருந்து தென்பகுதியில் 10 கிலோ மீற்றர் தொலைவில் பாரிய அளவிலான இடத்தை விடுதலைப் புலிகள் தூய்மைப்படுத்தி வருவதாக ஆளில்லா வேவு விமானங்கள் மூலம் விமானப்படையினர் அறிந்துள்ளனர். அனேகமாக அங்கேயும் ஒரு விமான தளத்தை விடுதலைப் புலிகள் அமைக்கக் கூடும் என்ற சந்தேகத்தை அது எழுப்பியுள்ளது. இரணைமடுக்கு மிக அருகாமையில் தென்கிழக்கில் மற்றொரு விமான தளத்தை விடுதலைப் புலிகள் ஏன் அமைக்கின்றனர் என்பது குறித்து சிறிலங்கா விமானப் படையினர் ஆச்சரியமடைந்துள்ளனர். பாரிய அளவிலான பிரதேசத்தை துப்பரவு செய்தமை விமானத்தளத்துக்காக இல்லையெனில் அது எதற்காக என்பது குறித்து விமானப் படையினரால் கண்டறிய இயலாமல் போகும் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி>புதினம்.

0 comments: