03 July, 2006

சர்வதேச ரீதியில் மீண்டும் வலை விரிப்பும் வியூகமும்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட இரு பிரதான தரப்புகளாலும் அமைதி வழியில் சமாதானப் பேச்சுக்கள் மூலம் தீர்வுகாணும் விடயத்தில் பலம் பொருந்திய நாடுகளின் தனிப்பட்ட புவியியல், கேந்திர, அரசியல் அபிலாஷைகளும், கொள்கை நிலைப்பாடுகளும், அதிகார வீச்சுகளும் அளவுக்கு அதிகமாக தலையீடு செய்யும் ஆபத்து இருப்பது குறித்து இப்பத்தியில் ஏற்கனவே பலதடவை சுட்டிக் காட்டி வந்துள்ளோம். ரணிலின் முன்னைய ஐ.தே.கட்சி அரசு, தமிழீழ விடு தலைப்புலிகளுடன் அமைதி முயற்சிகளை ஆரம்பித்த காலத்திலேயே இத்தகைய தலையீடுகள் இருந்து வந்தமையை அனைவரும் அறிவர். உலக நாடுகளின் திரள்வான சர்வதேச சமூகம், அப்போதே அந்த சமாதான முயற்சிகளின்போது தீர்வுக்கான வரம்புகளை வரையறைகளை தமது விருப்புகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் இயைவாகத் திணிக்கத்துணிந்தமை எமது வரலாற்றுப் பட்டறிவு. சர்வதேச சமூகத்தின் தலையீடு, நெருக்குவாரம் மூலம் புலிகளை அமுக்கிப் பிடிக்கும் தனது திட்டத்தையே ரணில் விக்கிரசிங்க தமது "சர்வதேச பாதுகாப்பு வலையப்பின்னல்' என்ற சதியாக விரிக்க முயன்றார். தமது உரிமைகளை மீளப் பெறுவதற்கான தேடலில் போராட்டத்தில் முறையற்ற அந்நியர் தலையீடு, தமது அரசியல் தகைமையையும் தலைவிதியையும் தாமே தீர்மானிக்கும் சுயாதீன உரிமையைப் பாதிக் கிறது பறிக்கிறது என்ற மெய்மை நிலையை உய்த்து ணர்ந்து கொண்ட தமிழர் தரப்பு விடுதலைப்புலிகள் இயக்கம் தமது தந்திரோபாயக் காய் நகர்த்தல்கள் மூலம் இந்தச் சதிவலைப் பின்னலில் சிக்குண்டு அவதியுறாமல் தம்மை சாமர்த்தியமாகத் தவிர்த்துக்கொண்டது. அது நடந்து முடிந்த கதை. இப்போது தென்னிலங்கையில் ஒரு குழப்பமான சிந்தனைத் தெளிவற்ற கொள்கை நிலைப்பாட்டில் ஒருங்கிசைவற்ற ஓர் ஆட்சிப்பீடம் அதிகாரத்துக்கு வந்துள்ள நிலையில் அதனைத் தமது இசைவுக்கு ஏற்ப வழிநடத்த முடியாமல் திணறும் சர்வதேச சமூகம், தமிழர் தரப்பையாவது நெருக்குவாரப்படுத்தித் தனது வழிக்குக் கொண்டுவர எதிர்பார்த்துத் தோற்றுப்போய் நிற்கிறது. இந்தப் பின்னணியில் தமிழர் தரப்புக்கு எதிராக மற்றொரு சர்வதேச சதிவலைப் பின்னல் இழைக்கப்படுகிறது என்ற முன்னெச்சரிக்கை அறிவிப்பை அம்பலப்படுத்துவதே இப்பத்தியின் இன்றைய நோக்கமாகும். தமிழர்களின் விடுதலைப் போராட்ட வீச்சை மடக்கு வதற்கான வியூகத்தை ஐ.நா.மட்டத்தில் வகுக்கும் எத்தனங்கள் முளைவிடத் தொடங்கியிருக்கின்றன எனத் தெரிகின்றது. அதன் ஒரு கட்டமாக ஐ.நா. செயலாளர் நாயகத்தின் சார்பில் அவரின் இரு தூதுவர்கள் விரைவில் கொழும்பு வருகின்றனர். யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர் பான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி யாக இலங்கையைச் சேர்ந்தவரான ராதிகா குமாரசுவாமி அம்மையார் உள்ளார். அவரின் சார்பில் உயர்மட்ட ஐ.நா. தூதுவராக அலன் றொக் என்பவர் கொழும்புக்கு வந்து இலங்கையில் யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றைத் தயாரிக்கவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி விரைவில் நேரடியாகக் கொழும்பு வரவிருக்கிறார் எனத் தெரிகின்றது. அவரும் இலங்கையில் யுத்தப்பிரதேசத்தில் மனித உரிமை மீறல்கள் பற்றிய நிலைவர அறிக்கை யொன்றைத் தயாரிப்பார் எனத் தெரிகின்றது. குறிப்பாக சட்டத்துக்கு முரணான முறையில் இடம்பெறும் கொலைகள், அச்சுறுத்தல்கள், அடாவடித்தனங்கள் போன்றவை குறித்து ஒரு மதிப்பீட்டு அறிக்கை தயாரிப்பது அவரது திட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதேவேளை, இலங்கையில் உள்ள யுனிசெவ் போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் மூலமும் அறிக்கை களைப் பெற்றுக் குவிக்கும் திட்டம் ஒன்றும் ஐ.நா. மட்டத்தில் இருப்பதாகத் தெரிகின்றது. இத்தகைய அதிகாரிகள் அல்லது பிரதிநிதிகளின் மதிப்பீட்டு அறிக்கைகளை முன்னிலைப்படுத்தி, அவற்றை மையப்படுத்தி, அதன் வழியாக ஐ.நா.வின் தலையீட்டுக்கு கால்கோள் இடுவதற்கான திட்டங்கள் சில மட்டங்களில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகின்றன என நம்பகரமாகத் தெரிகின்றது. இந்த வலைவிரிப்பு, வியூக வகுப்பு போன்றவை குறித்து முன்னெச்சரிக்கையாக இருந்து, ரணிலின் கால சர்வதேச வலை விரிப்பை முறியடித்தமைபோல இவற்றையும் செயலிழக்கச் செய்வதற்கான தந்திரோபாய நகர்வை தமிழர் தரப்பு இப்போதே ஆரம்பிப்பது அவசியமும், அவசரமுமாகின்றது. வெறும் அறிக்கைகள், பேச்சுகள், வெளியீடுகள், பிரகடனங்கள் மூலம் இந்த வலைவிரிப்பை முறியடிக்க முடியாது. இவ்விடயத்தில் குற்றச்சாட்டுக் கணைகளை களத்தில் எதிர்கொண்டு, செயல் நடத்தைத் திறம் மூலம் அவற்றை முறியடித்து, முன் நகர்வதே புத் திசாலித்தனம். அதற்கு நம்மை நாமே தயார் செய்யும் காலமாக இது அமையட்டும். நன்றி>உதயன்

0 comments: