31 July, 2006

திருமலை மாவிலாற்றில், மும்முனைத் தாக்குதல் முறியடிப்பு.

திருமலை ஈச்சிலம்பற்று மாவிலாறு பகுதியைக் கைப்பற்றும் நோக்கத்துடன், இன்று சிறீலங்கா படைகளால் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்த மும்முனை படைநகர்வு முயற்சி, தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10:30 மணியளவில், கிபிர் மற்றும் மிக் ரக விமானங்கள் குண்டுகளைப் பொழிய, ஆட்லறி - பல்குழல் எறிகணை சூட்டாதரவுடன், கனரக யுத்த தளபாடங்கள் சகிதம் முன்னேற முற்பட்ட சிறீலங்கா படைகள் மீது, தமிழீழ விடுதலைப் புலிகளால் உக்கிர பதிலடி தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. திருமங்கலம் படை முகாமில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட அங்கோடை பகுதியை நோக்கி முன்னேற முயன்ற சிறீலங்கா படையணியொன்றை, வால்கொட்டுப் பகுதியில் எதிர்கொண்ட போராளிகள், உக்கிர பதிலடி தாக்குதல்களை தொடுத்து படையினரை விரட்டியடித்துள்ளனர். சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு மட்டும் முன்னேறிய சிறீலங்கா படையினர், தமிழீழ விடுதலைப் புலிகளின் பதிலடி தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாது தலைதெறிக்க தப்பியோடியுள்ளனர். ஏக காலத்தில், மாவிலாற்றில் இருந்து ஐந்து கிலோமீற்றர் தொலைவில் உள்ள கல்லாறு காட்டுப்புறம் ஊடாக, ஈச்சிலம்பற்று பிரதேசத்தை நோக்கி முன்னேற முற்பட்ட சிறீலங்கா படைகளை வழிமறித்து தாக்கிய தமிழீழ விடுதலைப் புலிகள், படையினருக்கு பலத்த சேதாரங்களை ஏற்படுத்தி விரட்டியடித்துள்ளனர். இதேபோன்று, காட்டுப் பாதையூடாக சிறீலங்கா படைகள் மேற்கொண்ட மூன்றாவது படைநகர்வு முயற்சியும், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. தப்பியோடிய சிறீலங்கா படைகளை இலக்கு வைத்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படையணி போராளிகளால், மூர்க்கத்தமான எறிகணை தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. திருமலை மாவட்ட கட்டளை தளபதி கேணல் சொர்ணம் அவர்களின் நேரடி வழிநடத்தலில் களமிறங்கியிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகள், சிறீலங்கா படைகளின் வலிந்த ஆக்கிரமிப்பு முயற்சியை வெற்றிகரமாக முறியடித்திருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். இன்றைய முறியடிப்பு சமரில், தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் மூன்று போராளிகள் வீரச்சாவைத் தழுவியதோடு மேலும் இருவர் காயத்துக்கு உள்ளாகியுள்ளனர். எதிரியுடன் களமாடி வீழ்ந்த இந்த மாவீரர்களுக்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொண்டுள்ளனர். திருமலை மாவிலாறு சமரில், சிறீலங்கா படையினர் தரப்பில் பலத்த உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய சமரில், 6 சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டு, மேலும் 6 படையினர் படுகாயமடைந்திருப்பதாக, படைத்துறை தலைமையகம் அறிவித்துள்ளது. எனினும் உண்மை நிலையை மூடி மறைத்து, போலியான பரப்புரைகளை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இணைப்பு 2 பிந்திக் கிடைத்த தகவலின் பலி சிறீலங்கா தரப்பில் இரு அதிகாரிகள் உட்பட 15 படையினர் பலியானதோடு மேலும் 50 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளனர். இதற்கிடையில் சிறீலங்கா படையினர் இழப்புக்களை மூடிமறைப்பதில் ஈடுபட்டு வருகின்றது. எனினும் பாரிய இழப்புக்கள் மத்தியில் படையினர் இன்று மாலையும் படை நடகர்வை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக திருமலை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன் தெரிவித்துள்ளார். இதன் அறிகுறியாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டப் பிரதேசங்கள் நோக்கி ஆட்லறி, பல்குழல் பீரங்கிகள், உலங்கு வானூர்த்தி தாக்குதல்களை படையினர் ஆரம்பித்துள்ளதாகவும் எழிலன் மேலும் தெரிவித்துள்ளார். நன்றி>புதினம்.

0 comments: