10 July, 2006

ஹக்ரூப் ஹொக்லண்ட் மீண்டும் தலைவராக.

முன்னாள் தலைவரான நோர்வேயை சேர்ந்த ஹக்ரூப் ஹொக்லண்டை மீண்டும் தலைவராக நியமிப்பது குறித்து நோர்வே ஆலோசித்து வருவதாக கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை வெளிவந்த அந்த நாளேட்டின் செய்தி: யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகளை செப்ரெம்பர் முதலாம் திகதிக்குள் வெளியேற்ற வேண்டும் என விடுதலைப் புலிகள் கோரியுள்ளதையடுத்து கண்காணிப்புக்குழுவில் எத்தகைய மாற்றங்களை செய்வது என்பது தொடர்பில் நோர்வே தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது என்று இலங்கைக்கான நோர்வேத் தூதரகத்தின் பேச்சாளர் எரிக் நேன்ஸ்பேர்க் தெரிவித்தார். கண்காணிப்புக்குழுவில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து குழுவில் அங்கம் வகிக்கும் நோர்டிக் நாடுகளுடன் நோர்வே கலந்துரையாடி வருகின்றது. கண்காணிப்புக்குழுவின் தலைவராக சுவீடன் நாட்டைச் சேர்ந்த உல்ப் ஹென்றிக்சன் பதவி வகிப்பதனால் அவரை மாற்றிவிட்டு குழுவின் முன்னாள் தலைவரான நோர்வேயை சேர்ந்த ஹக்ரூப் ஹொக்லண்டை மீண்டும் தலைவராக நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கண்காணிப்புக்குழுவின் தற்போதைய நிலை குறித்தும் புலிகளின் கால அவகாசம் தொடர்பாகவும் கருத்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து பேச்சாளர் மேலும் கூறியதாவது, கண்காணிப்புக்குழுவில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான பின்லாந்து, டென்மார்க், சுவீடன் ஆகிய நாட்டவர்களை வெளியேற்ற வேண்டும் என விடுதலைப் புலிகள் காலக்கெடு விதித்துள்ளனர். இதனால் குழுவில் இடம்பெற வேண்டிய மாற்றங்கள் குறித்து நாம் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றோம். கண்காணிப்புக்குழுவின் தற்போதைய தலைவர் மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்சன் மற்றும் பிரதித்தலைவர் டொமி லக்ன் மயர் ஆகியோர் ஐரோப்பிய ஒன்றிய நாடான சுவீடனை சேர்ந்தவர்களாகவுள்ளனர். ஆகவே, ஐரோப்பிய ஒன்றிய க்காணிப்பாளர்களை வெளியேற்ற நோர்வேயும் இதர நோர்டிக் நாடுகளும் தீர்மானிக்குமானால் குழுத்தலைவர் ஹென்றிக்சனையும் மாற்ற வேண்டி ஏற்படும். அப்படியொரு நிலை உருவானால் கண்காணிப்புக்குழுவின் முன்னாள் தலைவராக பணியாற்றிய ஹக்ரூப் ஹொக்லண்டை மீண்டும் தலைவராக நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகின்றது. நோர்வே நாட்டவரான இவருக்கு கண்காணிப்புக்குழுத் தலைவராக பணிபுரிந்த அனுபவம் உள்ளது. எனவே இவரை நியமிப்பது சிறந்தது என நோர்வே கருதலாம். இவை தொடர்பாக ஆலோசனைகள் மட்டுமே இடம்பெற்று வருகின்றது. உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. செப்ரெம்பர் முதலாம் திகதி வரை எமக்கு கால அவகாசம் உள்ளமையால் மாற்றம் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றோம். ஹென்றிக்சன் வன்னி செல்வார் இதேவேளை கண்காணிப்புக்குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் இவ்வாரம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். கடந்த மாதம் 29 ஆம் திகதி நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் நடைபெற்ற கண்காணிப்புக்குழு தொடர்பான நோர்டிக் நாடுகளின் கூட்டத்தில் பங்குபற்றிய பின்னர் நாடு திரும்பிய ஹென்றிக்சன் இவ்வாரம் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களை சந்திப்பார். இதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது என்று கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் ஓமர்சன் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது விடுதலைப் புலிகளுடன் பல்வேறு விடயங்கள் குறித்தும் பேசப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். இது இவ்வாறிருக்க தடைப்பட்டுள்ள சமாதான முயற்சி குறித்தும் கண்காணிப்புக்குழு தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலை குறித்தும் ஆராய்வதற்காக நோர்வேயின் சமாதானத் தூதுவர் ஜோன் ஹான்சன் பௌயர் இம்மாத இறுதியில் இலங்கை வரவுள்ளார். நோர்வேயில் தங்கியுள்ள இலங்கைக்கான தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கரும் விரைவில் கொழும்புக்கு வரவுள்ளார். நன்றி>புதினம்

0 comments: