08 July, 2006

"அமைதிப்படை - 02" என்ற பேச்சுக்கே இடமில்லை: இந்தியா

இரண்டு தரப்பிற்கும் மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கும் பட்சத்தில், சிறிலங்கா அரசு, இந்தியப் படைகளின் உதவிக்கு கோரிக்கை விடுத்தாலும் கூட "அமைதிப்படை - 02" என்ற பேச்சுக்கே இடமில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய அதிகாரி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். அந்த அதிகாரி இது தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் வருமாறு: பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இந்திய அமைதிப்படை பெற்ற கசப்பான அனுபவங்கள் இந்திய மக்களினதும், இந்தியாவின் தலைவிதியை தீர்மானிக்கும் தலைவர்களினதும் மனதில் மிகவும் ஆழமாக பதிந்துள்ளது. 1987 ஆம் ஆண்டு யூலை மாதம், சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் அளிக்கப்பட்ட வரவேற்பின் போது முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி துப்பாக்கிப் பிடியால் அடிவாங்கியதில் இருந்து, 1990 ஆம் ஆண்டு வரையிலான விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற மோதல்களில் 1,165 இந்தியப் படையினர் கொல்லப்பட்டது மட்டுமன்றி 3,011 படையினர் அங்கவீனமுற்றிருந்தனர். இவை அனைத்திற்கும் மேலாக, பிரேமதாசா தலைமையிலான சிறிலங்கா அரசு, இந்தியப் படையினரை இலங்கை மண்ணில் இருந்து வெளியேற்றுவதற்கே முக்கியத்துவம் கொடுத்திருந்தார். இந்த கசப்பான அனுபவங்களை இந்தியா மீண்டும் புதுப்பித்துக் கொள்ள தயாரில்லை. அதே நேரம், இலங்கையின் இனப்பிரச்சனைக்கு, இந்தியாவின் மாநில மற்றும் யூனியன் அலகுகளால் இந்தியாவின் அரசியல் அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக இருக்கின்றது. விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காவின் படைகளுக்கும் மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கும் பட்சத்தில், இலங்கையின் 23 கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருளாதாரம் முற்றாக சீரழியும் நிலையே ஏற்படும். அண்மைக் காலத்தில், இந்திய முதலீட்டாளார்கள் பெருமளவில் இலங்கையில் முதலீடு செய்திருப்பதனால், இன்னொரு யுத்தத்தினை இந்தியா விரும்பவில்லை என்றும் தெரியவருகின்றது. மீண்டும் ஒரு போர் ஆரம்பிக்காமல் இருக்க வேண்டுமெனில், சிறிலங்கா அரசியல்வாதிகள் ஒரு நாட்டின் பொறுப்பான தலைவர்களாக ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். மீண்டும் ஒரு போரினை தடுக்க, நோர்வே, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா மற்றும் ஐப்பான் போன்ற நாடுகளுடன் இணைந்து செயலாற்றவே இந்தியா விரும்புகின்றது. இந்தத் தகவலையே, இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் சியாம் சரண் மூலம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சிறலலங்கா அரசிற்கு அண்மையில் தெரிவித்திருந்தார் எனவும் தெரியவருகின்றது. நன்றி>புதினம்.

0 comments: