11 July, 2006

இலங்கையில் நீதிபதிக்கே, நீதி இல்லை.

யாழ். மேலதிக நீதிவான் ஷ்ரீநிதி நந்தசேகரனின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற இராணுவத்தினர் பரமேஸ்வராச் சந்திக்கு அருகே அதனை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளனர். எனினும், பொதுமக்களின் முயற்சியால், ஏற்படவிருந்த பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டதுடன், நீதிவானின் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி ஒருவரும், கார்ச் சாரதியும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற இராணுவத்தினரின் இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கை காரணமாக திருநெல்வேலிப் பகுதியெங்கும் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெரும் பதற்றம் நிலவியது. நீதிவானின் பிள்ளையை தனியார் கல்வி நிறுவனமொன்றிலிருந்து ஏற்றி வருவதற்காகச் சென்றபோதே காலை 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீதிவானின் கார் அவரது பாதுகாப்புப் பொலிஸார் ஒருவருடன் பலாலி வீதியூடாக கந்தர்மடம் சந்தியிலிருந்து பரமேஸ்வரா சந்தியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அவ்வேளை, ஆட்டோ ஒன்றில் கனரக ஆயு தங்களுடன், சுடுவதற்குத் தயாரான நிலையில் இராணுவத்தினர் குறித்த காரை துரத்தி வந்துள்ளனர். இதனை அவதானித்த அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் சுதாகரித்துக் கொண்டு அது நீதிவானின் கார் எனவும், சுட வேண்டாம் என்றும் கூக்குரலிட்டுள்ளனர். இந்த நிலையில், நீதிவானின் காரை நோக்கி இராணுவத்தினர் தாக்குதல் நடத்தப்போவதை அறிந்து கொண்ட வேறு வாகன சாரதி ஒருவர் வேகமாக நீதிவானின் காரை முந்திச் சென்று இராணுவத்தினர் சுடுவதற்காக துரத்தி வருகின்றனர் என நீதிவானின் கார்ச் சாரதியிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நீதிவானின் கார் அந்த இடத்திலேயே சடுதியாக நிறுத்தப்பட்டது. பின்னர் காரைத் துரத்தி வந்த இராணுவத்தினர் காரில் இருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு நேரில் சென்ற நீதிவான் ஷ்ரீநிதி நந்தசேகரன் அப்பகுதியில் உள்ள இராணுவக் காவலரணில் நின்ற இராணுவத்தினரிடம் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக விளக்கம் கோரியுள்ளார். பொறுப்பற்ற வகையில் அதற்குப் பதிலளித்த அந்த முகாம் பொறுப்பதிகாரி, அவசர காலச் சட்டத்தின் கீழ் எங்களுக்கு அனைத்து வாகனங்களையும் சோதனையிட அதிகாரமுண்டு. நாங்கள் நினைத்திருந்தால் அனைவரையும் சுட்டுவிட்டு பின்னர் மன்னிப்புக் கோரியிருக்க முடியும்" என எதேச்சதிகாரமாக பதிலளித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக நீதிவான் இராணுவக் கட்டளை அதிகாரியான கேணல் பெரேராவிடமும், யாழ். பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்துள்ளார். இதேவேளை, முன்னரும் ஒரு தடவை நீதிவானின் வாகனத்தை றக்கா வீதியில் வைத்து மறித்த இராணுவத்தினர் வாகனத்தை கடுமையாகச் சோதனையிட்டதுடன் சாரதியையும் அச்சுறுத்தியுள்ளனர். நீதிவானின் கணவரும் இதேபோன்று பல்வேறு தடவை இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. நீதிபதி கடும் விசனம் இதேநேரம், சட்டம் ஒழுங்கு தெரியாதவர்களின் கைகளில் ஆயுதங்களைக் கொடுத்தால் அது சமூகத்திற்கு பாரிய சவாலாகவே அமையும் என யாழ். மேலதிக நீதிவான் ஷ்ரீநிதி நந்தசேகரன் விசனத்துடன் தெரிவித்தார். இராணுவத்தினர் பரமேஸ்வரா சந்தியில் நேற்று நடந்து கொண்ட விதம் தொடர்பாக கடும் கண்டனமும், அதிருப்தியும் வெளியிட்டுள்ள அவர், இராணுவத்தினரின் பொறுப்பற்ற செயற்பாடே இதுவெனவும் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் பொறுப்புள்ள வகையில் நடந்து கொள்ள வேண்டும். ஆனால், நேற்றைய சம்பவத்தின்போது அவர்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளனர். மேலும், அவசரகாலச் சட்ட விதிகளின்படி சந்தேகம் என்றால் எவரையும் சுடுவோம் என இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர். ஆனால், அவசரகால சட்ட விதிகளின் பிரகாரம் அவ்வாறு எவரும் எதேச்சதிகாரமாக செயற்பட முடியாது. அதற்கு எந்தச் சட்டத்திலும் இடமில்லை. இத்தகைய அடிப்படைச் சட்டங்கள் கூடத் தெரியாதவர்கள் எவ்வாறு சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்கப் போகிறார்கள் எனக் கேள்வி எழுப்பினார். இத்தகைய அச்சுறுத்தல் இனிமேல் எவருக்கும் ஏற்படக்கூடாது எனக் கருதியே உடனடியாக இவ்விடயத்தை இராணுவ, பொலிஸ் உயர் பீடங்களின் கவனத்திற்குக் கொண்டு வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். நன்றி>தினக்குரல்.

0 comments: