29 July, 2006
படையினரின் வலிந்த தாக்குதல்கள் கொழும்புக்கு ஆபத்து.
படையினரின் வலிந்த தாக்குதல்கள் கொழும்பு நகரம் தாக்கப்பட வழிகோலும் - ஹென்றிக்சன்
தமிழர் தாயகப் பகுதி மீது சிறீலங்கா படையினர் தொடுத்துள்ள வலிந்த தாக்குதல்கள் கொழும்பு நகரம் தாக்கப்படுவதற்கு வழிகோலும் என கண்காணிப்புக் குழு எச்சரித்துள்ளது. நேற்று ரொயிற்றர் செய்தி நிறுவனத்திற்கு கருத்துரைக்கும் போது உல்வ் கென்றிக்சன் இதனைத் தெரிவித்தார்.
மாவிலாற்றுப் பிரச்சினையை காரணம் காட்டி தரை, வான்வெளிகளில் சிறீலங்கா அரசாங்கம் தொடுத்துள்ள வலிந்த தாக்குதல்கள் தவறான அணுமுறை என கண்ணடம் வெளியிட்டுள்ளார்.
இரு தரப்பினரும் போர் நிறுத்த உடன்படிக்கை நடைமுறையில் முறித்துக்கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தியிருக்கும் கண்காணிப்புக் குழுத் தலைவர் தற்பொழுது பெயரளிவில் மட்டுமே போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இரு தரப்பினரும் அதிகாரபூர்வமாக விலகாததால் அதனை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் பேச்சை ஆரம்பிக்க முடியும். எனினும் தற்போதைய போர் நிறுத்தத்தில் இருந்து பலதூரத்திற்கு சென்றுவிட்டோம்.
நீரைப் பெறுவதாகக் கொண்டு வலிந்த தாக்குதலைத் தொடுத்துள்ளதன் மூலம் தவறான பாதையில் சிறீலங்கா அரசாங்கம் செல்கிறது. உண்மையில் நீரைப் பெறுவதில் சிறீலங்கா அரசாங்கம் விருப்பம் கொண்டிருந்தால் வலிந்த தாக்குதலைத் தொடுப்பது பொருத்தமற்ற செயலாகும்.
சிறீலங்கா அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர் வெருகல் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சந்திப்பை மேற்கொண்டோம். சிறீலங்கா அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு நாம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் வலியுறுத்தினோம். ஆனால் நாம் பேசிக்கொண்டிருந்த போது சிறீலங்கா வான்படை விமானங்கள் எமக்கு அருகில் குண்டுகளை வீசின. இது சரியான அறிகுறி இல்லை என்பதே எனது கருத்து.
என்னைப் பொறுத்த வரை முழு அளவிலான யுத்தத்தை ஆரம்பிக்கும் வல்லமையை இரு தரப்பினரும் கொண்டிருக்கவில்லை. தற்போதைய வன்முறைகளை மட்டுமே இரு தரப்பினராலும் அதிகரிக்க முடியும். எனினும் நிலமையை சிறீலங்கா அரசாங்கம் கட்டுப்படுத்தத் தவறினால் கொழும்பில் தாக்குதல்கள் நடப்பதை தடுக்க முடியாது எனத் தெரிவித்தார்.
பின்லான்ட், டென்மார்க், ஆகிய நாடுகளைப் போன்று கண்காணிப்புக் குழுவிலிருந்து வெளியேறும் முடிவை சுவீடனும் எடுக்கும் பட்சத்தில் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் செயலிழந்து போகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
நன்றி>பதிவு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment