29 June, 2006

றோவின் திட்டம் வெற்றிபெறுமா ?

கடந்த இரண்டு நாட்களாக, கலாநிதி பாலசிங்கம் அவர்கள் மறைந்த இந்தியப் பிரதமர் குறித்து இந்திய ஊடகத்திற்கு வழங்கிய பேட்டி பலத்த சர்ச்சைகளை இந்திய - இலங்கை அரசியலில் ஏற்படுத்தியுள்ளது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், விடுதலைப் புலிகளினால் 2002ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் விடுதலைப் புலிகளின் தலைவர் அவர்களால் ராஜீவ் கொலை தொடர்பாக தெரிவிக்கப்பட்ட அதே விடயங்களையே மீண்டும் பாலசிங்கம் அவர்கள் இந்தியாவின் என்.டி.ரீ.வி ஊடகத்திற்குத் தெரிவித்திருந்தார். அன்றைய காலகட்டத்தில் இந்திய ஊடகங்களினால் தமது முன்னாள் பிரதமர் குறித்து எழுப்பப்படாத கரிசனை, பாலசிங்கம் அவர்களின் புதிய பேட்டியினை அடுத்து எழுந்துள்ளமை ஆச்சரியத்தை தருகின்றது. இதற்கு மேலாக, திட்டமிட்ட முறையில் பரப்புரை செய்யப்பட்டுள்ள இந்த செய்தியின் மூலம் இந்திய உளவு நிறுவனமான றோ, தமிழ்த் தேசியத்தினை முடக்குவதற்கும், விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் மக்களுக்கும் இடையில் இடைவெளியை அதிகரிப்பதற்கான ஒரு சதித்திட்டத்தை தீட்டியுள்ளனர் என்பதே உண்மை. இனி றோவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள சதித் திட்டத்தினை சற்று உற்று நோக்குவோம். கடந்த வாரம் ரெகெல்கா இணையத் தளத்தில் வெளியாகிய செய்தியான “விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய உளவு நிறுவனம் றோ புதிய படை ஒன்றை உருவாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றது” என்ற செய்தி மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் வெளியிடப்பட்டமை கவனத்தில் கொள்ளப்படவேணடும். அடுத்து கவனிக்கப்பட வேண்டியது, இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் ஈழத் தமிழர்கள் மீது பெருகி வரும் ஆதரவு றோவுக்கு பெரும் சஞ்சலத்தை கொடுத்துள்ளது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு ராஜீவ் மரணத்தை மீண்டும் தூசி தட்டுவதைத் தவிர வேறுவழியில்லை எனவே தான் இந்தச் செய்தி விரைவுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டது. மேலும், ராஜீவ் காந்தியன் மனைவியின் தலைமையிலான ஆளும் கொங்கிரஸ் கட்சியும் ஈழத் தமிழர்கள் மீதான ஆதரவுப் பார்வையைச் செலுத்த ஆரம்பித்துள்ளமை றோவுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளமை மறுக்கப்பட முடியாத உண்மை. இவ்வளவு காலமும் தமது திட்டத்திற்கு அமைய இடம்பெற்ற சகல நடவடிக்கைகளும் தமது ஆளுகைக்கு அப்பால் சென்றுகொண்டிருப்பதை பொறுக்க முடியாத றோவினர் தமது நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர். இதன் முதல் வடிவம்தான் என்.டி.ரீ.வியின் ஜேர்மனிய நிருபர் மூலம் பாலசிங்கம் அவர்களைப் பேட்டிகான வைத்து, திட்டமிட்ட முறையில் - இந்திய மக்கள், குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்களிடையே விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்தினை பரப்பும் வகையிலான செய்தியை வெளியிட்டிருந்தனர். இந்தச் செய்தியை வெளியிட்டதன் மூலம் றோவினர் இந்திய அரசின் நிலைப்பாடு மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நிலை என்பவற்றினை கணித்து தமது சதித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தயாராகுகின்றனர். றோவின் திட்டம் என்ன? விடுதலைப் புலிகள் அமைப்பினை பிளவுபடுத்துவதற்கு நெடுங்காலமாக தமது முயற்சிகளை மேற்கொண்டுவரும் றோ பெரும் தோல்விகளையே கண்டுவந்துள்ளது. றோவினர் தமது கடந்த கால முயற்சிகளில், விடுதலைப் புலிகளின் முன்னாள் துணைத் தலைவர் மகேந்திரராசாவினை ஈடுபடுத்தி தோல்வியடைந்தனர். அதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் பிரதேசவாதத்தைக் கிளப்பி முரளீதரனை ஈடுபடுத்தினர். இதிலும் தோல்வியையே றோவினர் சந்தித்தனர். எனவே இவர்களின் புதிய முயற்சியினைச் சற்று நோக்குவோம், • இனிவரும் காலங்களில் தமது ஊடகங்களின் மூலம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான செய்திகளை வெளியிடுவர். குறிப்பு: இதற்கு உறுதுணையாகச் செயற்படுவதற்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் பத்தி எழுத்தாளர் கடந்த பல வாரங்களாக புலி ஆதரவுப் பத்திகளை எழுத ஆரம்பித்துள்ளமை கவனிக்கத்தக்கது. • இந்தியா தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தரும். ஆனால், விடுதலைப்புலிகளின் தற்போதைய தலைமை மாற்றப்பட வேண்டும். இந்தியா தமிழ் மக்களுக்குரிய தீர்வினை பெற்றுத்தரவள்ளது ஆனால் விடுதலைப்புலிகளின் தற்போதைய தலைமை மாற்றப்பட வேண்டும் என்ற செய்தியை பரப்புரை செய்வதன் மூலம் மக்களை விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட வைக்கலாம் என்பதே றோவின் புதிய திட்டம். • பாலசிங்கம் அவர்களின் பேட்டியினை தளமாக வைத்து செய்யப்படவுள்ள பரப்புரை… தீர்வு ஒன்று எட்டப்படுவதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர்தான் தடையாகவுள்ளார் என்றும் மற்றவர்கள் தீர்விற்கு ஆதரவாகவுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் பிரிவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளது என்ற தொனியிலான செய்திகள். எனவே இறுதியாக, தமிழ் மக்கள் மற்றும் தமிழ்த்தேசிய ஊடகங்கள் இவ்வாறான விடயங்களை மிகவும் புத்திசாலித்தனமாக கையாளவேண்டிய ஒரு காலகட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். விழித்துக்கொள் தமிழா! இல்லையேல் விடிவு கிடைக்காது. உங்கள் விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களைப் பின்வரும் மின்னஞ்சலுக்குத் தெரியப்படுத்தவும். andrew.rasiah@gmail.com நன்றி>பதிவு.

0 comments: