26 June, 2006

தமிழகத்தில் துணைப்படைக்கு ஆள்திரட்ட "றோ' உதவி?

தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் அகதிகள் மத்தியில் இருந்து துணைப்படைக்கு ஆள்களைத் திரட்டும் முயற்சிகளுக்கு இந்தியாவின் உளவு அமைப்பான "றோ' உதவுவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இலங்கையில் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் துணைப்படை களும், ஒட்டுப் படைகளும் தற்போது தமது அணிகளுக்கு ஆள்திரட்டும் முயற்சிகளை இந்தியாவில் ஆரம்பித்திருக்கின்றன என்றும் இந்திய செய்தி ஏஜென்ஸிகளை ஆதாரம் காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைத் துணைப்படைகளின் இந்த முயற்சிக்கு இந்தியாவின் உளவு அமைப்பான "றோ'வின் மறைமுக உதவி கிடைப்பதாகவும், இந்திய இணையத்தளம் ஒன்றை ஆதாரம் காட்டி "தமிழ்நெற்' இணையத்தளம் தகவல் வெளியிட்டிருக்கின்றது. தற்போது கருணா குழுவுடன் சேர்ந்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான அணியாகச் செயற்பட்டுவரும் பரந்தன் ராஜன் தலைமையிலான ஈழத் தேசிய ஜனநாயக முன்னணியே (ஈ.என்.டி.எல்.எவ்) இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஈழ அகதிகள் மத்தியில் இருந்து தமது அணிக்கு இளைஞர்களை கூலிக்கு சேர்த்துக்கொள்ள முயன்று வருகின்றது. தமிழகத்தில் உள்ள ஈழ அகதி முகாம்களில் தங்கியுள்ள இளைஞர்களை அணுகி அவர்களுக்குப் பணம் வழங்கி அவர்களை கருணா அணியில் சேர்ப்பதற்கு ஈ.என்.டி.எல்.எவ். முயன்று வருகின்றது என்று உள்ளூர் பத்திரிகைத் தகவல்களை ஆதாரம் காட்டி அந்த இந்திய இணையத்தளம் தெரிவித்திருக்கிறது. இவ்வாறு ஒட்டுப்படைக்கு ஆட்சேர்க்கப்படும் ஒருவருக்கு ஆரம்பத்தில் பத்தாயிரம் ரூபா வழங்கப்படுவதாகவும், அவர்கள் பின்னர் இலங்கையில் சென்று செயற்படும்போது மேலும் கூலிப்பணம் அதிக தொகையில் வழங்கப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2004ஆம் ஆண்டு ஏப்ரலில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்து சென்றபின்னர் புலிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட கூட்டுத்துணைப்படை அணியில் ஈ.என்.டி.எல்.எவ். அமைப்பு இணைந்து செயற்பட்டு வருகிறது என்றும் புலிகளுக்கு எதிரான பலமான அணி ஒன்றை உருவாக்குவதற்கு ஈ.என்.டி.எல்.எவ். அணியை "றோ' அமைப்பு பயன்படுத்துகின்றது என்றும் அறிக்கைகள் குறிப்பிடுவதாக அந்தச் செய்தி கூறுகின்றது. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் மறைவாகச் செயற்பட்ட பரந்தன் ராஜன் கடந்த மே மாதம் அங்கு தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் இடம்பெறுவதற்கு சில வாரங்கள் முன்பாக பெங்களூர் சென்றடைந்தார். தற்போது அவர் எங்கிருக்கிறார் என்பது பொலிஸாருக்குத் தெரியவில்லை. ஆனால், வேறு சில இநதிய அதிகாரிகளின் தகவலின்படி ராஜன் இப்போது இலங்கையின் மட்டக்களப்பில் கருணா அணியினர் செயற்படுகின்ற பிரதான பகுதியில் தங்கியுள்ளார் என்று தெரிகிறது. இப்படி அந்த இந்திய இணையத்தள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி>பதிவு.

0 comments: