20 June, 2006

விமானக் குண்டுவீச்சு: சர்வதேச மன்னிப்புச் சபை கவலை.

தமிழர் தாயகப் பகுதியில் சிறிலங்கா விமானப் படையினர் நடத்தும் விமானக் குண்டு வீச்சுக்கள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கவலை தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கை: கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவத்தைத் தொடர்ந்து பதில் விமானத் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை கவலை அளிக்கிறது. சம்பூர், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி அருகில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சர்வதேச மனித உரிமைகளை மீறி பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையிலான தாக்குதல் இது. இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரும் இந்த விமானத் தாக்குதல்கள் யுத்த நிறுத்த மீறல் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் தேசிய பாதுகாப்புக்கு இந்த நடவடிக்கை அவசியமானது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்தப் பதில் குறித்து நாம் கவலை கொள்கிறோம். சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீதான தாக்குதலையடுத்து ஏப்ரல் மாதமும் இத்தகைய தாக்குதல்களை திருகோணமலை சம்பூரில் சிறிலங்கா அரசாங்கம் நடத்தியது. அத்தாக்குதலில் 15 பொதுமக்கள் உயிரிழந்ததாக கண்காணிப்புக் குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது. ஐ.நாவின் அகதிகளுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையிலான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அதிகரிக்கும் வன்முறைகளில் சிக்கிக் கொள்ளும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது நீடித்து வரும் உக்கிரமற்ற போரினால் இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் நடைபெறக் கூடும் என்று நாம் கவலைகொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்த அறிக்கைக்கு பதிலளித்து சிறிலங்கா பாதுகாப்பு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளதாவது: பொதுமக்களைத் தாக்குகிற திட்டத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளனர். அதைத் தடுக்க இந்த நடவடிக்கை ஒரு வழிதான் இந்தத் தாக்குதல். தேசியப் பாதுகாப்பு மிக முக்கியமானது. அனைத்து இன மக்களின் பாதுகாப்புக்குமான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம். எமது தேசியப் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து எவரும் எழுப்பி கேள்வி எழுப்ப வேண்டியதில்லை. இத்தகைய கேள்விகள் எழுப்புவோர் ஏன் நாட்டின் பிரதேச ஒற்றுமைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்படுகிறார்கள் என்று கேள்வி எழுப்ப வேண்டும். இத்தகைய பதில் நடவடிக்கைகளின் போது பொதுமக்களின் பாதுகாப்பை நாம் கூடுமானவரை உறுதி செய்து கொள்கிறோம். ஆனால் விடுதலைப் புலிகள்தான் பேசாலையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்றார் கேகலிய ரம்புக்வெல. நன்றி>புதினம்.

0 comments: