08 June, 2006

ஒஸ்லோ மாநாட்டின் சிறீலங்காவின் சதிமுயற்சி படுதோல்வி.

நோர்வேத் தலைநகர் ஒஸ்லோ தலைநகரில் இன்று ஆரம்பமாகி நாளை மாலை வரை நடைபெறும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தை பேச்சுவார்த்தையாக மாற்றுவதற்கு சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட சதிமுயற்சி படுதோல்வியில் முடிவடைந்துள்ளது. தமிழர் தாயகத்தில் கொலை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டு சமாதான முன்னெடுப்புக்களுக்கான புறச்சூழலை இல்லாதொழி்த்த சிறீலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்தினை திசை திருப்பும் நோக்கோடு இருதரப்பிற்குமான பேச்சு வார்த்தையாக சித்தரிப்பதற்கான நலினத்தனமான முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டு வந்தது. அத்துடன் ஒஸ்லோ கூட்டத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளையும் சிறீலங்கா அரசாங்கத்தையும் நேருக்கு நேர் சந்திக்க வைத்து கடந்த கால பேச்சுக்களைப் போன்று பேச்சுக்கான தொடக்க நிகழ்வு ஒன்றை முன்னெடுக்க இராஜதந்திரிகள் சிலர் முயற்சி செய்துள்ளனர். முடங்கிக் கிடக்கும் பேச்சுவார்த்தையை பின்வாயிலாக ஆரம்பித்து சமாதானம் தொடர்பான போலியான நம்பிக்கையைப் தோற்றுவிப்பதற்கு சிறீலங்கா அரசாங்கமும் சில இராஜதந்திரிகளும் மேற்கொண்ட திரைமறைவு முயற்சி விடுதலைப் புலிகளின் சாதுரியமான இராஜதந்திர நகர்வால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும நடைபெறும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் நோர்வே அனுசரணையாளர்களையும் கண்காணிப்பாளர்களையும் தனித்தனியாகச் சந்திக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் சிறீலங்கா அரசாங்கத் தூதுக்குழுவினரை சந்திப்பதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர். அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்துள்ள சூழலில் நடுநிலைமைத் தகமையை இழந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான சுவீடன், டென்மார்க், பின்லாந்து ஆகியவை தொடர்ந்தும் கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிப்பது பொருத்தமாக இருக்காது என விடுதலைப் புலிகள் கருதுகின்றனர். இதுகுறித்த தலைமைப்பீடத்தின் தீர்க்கமான முடிவுகளை ஒஸ்லோ கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக்குழுவினர் கலந்துகொண்டுள்ளனர். ஒஸ்லோ கூட்டம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் தமிழினத்தை அழித்தொழிப்பதில் கங்கணம் கட்டியவாறு அப்பாவித் தமிழர்களை கொன்றொழிப்பதில் ஈடுபடும் சிறீலங்கா அரசாங்கத்தோடு எதுவும் பேசுவதற்கு இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். நன்றி>பதிவு.

0 comments: