27 June, 2006

கருணாநிதிக்கு நட்புக்கரம் நீட்ட புலிகள் தயார்.

ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நட்புக்கரம் நீட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக இருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் "தமிழ்முரசு" நாளேட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில் சிங்களப் படைகள் முன்னைய காலம் போல குழந்தைகள் பெண்கள் பாரபட்சம் பாராது பொதுமக்களைக் கொன்று அழிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் உலககெங்கும் வாழும் தமிழ் மக்களிடம் குறிப்பாகத் தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்களிடம் அனுதாப உணர்வு எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடும் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. "தனிப்பட்ட நலன்கள் அடிப்படையில் பார்த்தால் விடுதலைப் புலிகளுக்கும் திமுக அரசுக்கும் உறவுகள் நெருக்கமாக இருக்காது. ஆனால் மக்கள் நலனை வலுவாகக் கட்டியெழுப்பப்படும் போது நிச்சயமாக நாங்கள் நட்புக்கரம் நீட்டுவோம்" என்று தெரிவித்தார். அமைதிப் பேச்சை நடத்த இந்தியா செல்லவும் தயார் என விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டத்தைப் பற்றிக் கேட்டபோது இந்தியா விடுதலைப் புலிகளுக்குத் தடை விதித்திருக்கும் பட்சத்தில் நாங்கள் அங்கு செல்ல வாய்ப்பில்லை. ஆனால் நிலைமைகள் மாறும் வாய்ப்புள்ளது என்றார் அவர். "சிங்கள அரசுக்கு ஆதரவு அளிப்பதை இந்தியா நிறுத்த வேண்டும். தங்களது அடிப்படை உரிமைக்காகப் போராடும் தமிழர்களின் கோரிக்கையைத் தார்மீக ரீதியாக இந்தியா ஆதரிக்க முடியாது என்று சொல்ல முடியாது. பல சந்தர்ப்பங்களில் இந்தியா உதவியுள்ளது. குறிப்பாக பங்ளாதேஷ் போராட்டத்தை ஆதரித்து உதவியும் உள்ளது. "இலங்கை அரசாங்கம் இந்தியாவின் ஆதரவை வைத்துக்கொண்டுதான் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது போல சிங்களப் பத்திரிகைகள் அறிக்கைகளை விடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்" என்பதையும் தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டார். இந்திய அரசாங்கம் எங்கள் விடுதலைப் போராட்டத்தை ஏற்று அங்கீகரிப்பதுடன் எங்களுக்கு அதன் தார்மீக ஆதரவையும் வழங்க வேண்டும். இலங்கை அரசின் அட்டூழியங்களைக் கண்டிக்க வேண்டும். இதுவே விடுதலைப் புலிகளின் நிலைப்பாடும் தமிழ் மக்களின் விருப்பமுமாகும். இலங்கை அரசாங்கத்தின் நயவஞ்சகச் செயலை இந்தியா உள்ளிட்ட அனைத்துலக சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். அந்த நாள் வந்தே தீரும். ஈழத் தமிழ் மக்களுக்கு கூடிய விரைவில் நல்ல வழி பிறக்கும் என்று சு.ப.தமிழ்ச்செல்வன் உறுதியோடு தெரிவித்துள்ளார். நன்றி>பதிவு.

2 comments:

Anonymous said...

நல்லது நடந்தால் சரிதான்.

said...

நடக்கும் நடக்கும் நிட்சயம் நடக்கும்.