17 June, 2006
ஈழத்தில் போர் வெடிக்குமா?
பதிலடி கொடுக்க நேரிடும் என்ற எச்சரிக்கையை சிறிலங்காவுக்கு எமது தலைமைப்பீடம் அனுப்பியுள்ளது: சு.ப.தமிழ்ச்செல்வன்
சிறிலங்கா இராணுவத்தின் வான் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க நேரிடும் என்று சிறிலங்காவுக்கு எமது தலைமைப்பீடம் எச்சரிக்கையை அனுப்பியுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இந்த எச்சரிக்கையை சிறிலங்காவுக்குத் தெரிவிக்குமாறு இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் அனுசரணையாளராகிய நோர்வேயின் சிறிலங்காத் தூதுவர் ஆகியோரை தமிழீழ விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டுள்ளனர் என்றும் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியுள்ளதாவது:
இலங்கையில் உள்ள கள நிலைமைகளைப் புரிந்து கொள்ளாமல் கெப்பிட்டிக்கொல்லாவ தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளை குற்றம்சாட்டி சில நாடுகள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அத்தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகளும் கண்டனம் செய்துள்ளனர்.
கெப்பிட்டிக்கொல்லாவ பயணிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கவில்லை என்றும் அக்கிளைமோர்த் தாக்குதலுக்கும் எமக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளோம்.
இத்தகைய கொடூரமான தாக்குதலுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை என்று மீண்டும் கூறுகிறோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்துகிற சக்திகள் குறித்து நாம் அவதானமாக உள்ளோம். அமைதி முயற்சிகளை எதிர்க்கும் அந்த சக்திகளே பொதுமக்கள் மீதான தாக்குதலை நடத்தி நிலைமையை மேலும் கொழுந்துவிட்டு எரியச் செய்துள்ளனர். ஒரு முழு அளவிலான யுத்தத்தை தூண்டியுள்ளனர்.
ஓஸ்லோவில் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புடன் நடந்து கொள்ளாமை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தடைக்குப் பின்னைய சூழ்நிலையால் இருதரப்பு சமநிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அது இலங்கையில் ஒரு யுத்தத்தை நோக்கியுள்ளது.
விமானக் குண்டு வீச்சுக்கள் மூலம் பொதுமக்கள் குடியிருப்பை பொறுப்பற்ற முறையில் தாக்கியமைக்கு சிறிலங்கா அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்த நேரிடும் என்ற தமிழர் தலைமைப்பீடத்தின் கடும் எச்சரிக்கையை சிறிலங்காவுக்கு தெரியப்படுத்தி உள்ளோம் என்றார் சு.ப. தமிழ்ச்செல்வன்.
நன்றி: புதினம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment